கேரளாவின் சேரமான் ஜும்மா பள்ளிவாசல் கி.பி. 612ல் கட்டப்பட்டதா?!

உலகின் இரண்டாவது பழமையான பள்ளிவாசல், கேரளாவில் இருக்கும் சேரமான் ஜும்மா பள்ளிவாசல்...

உலகின் இரண்டாவது அதிகமான (190 கோடி) மக்களால் பின்பற்றப்படும் மதமான இஸ்லாத்தின் இரண்டாவது பள்ளிவாசல் இந்தியாவில் இருந்தால், அது இந்தியாவிற்கு பெருமைதானே?!
அதுதான் கேரளாவின் கொடுங்களூரில் இருக்கும் சேரமான் ஜும்மா பள்ளிவாசல் ..
இது உண்மைதானா???!!!

(முன்குறிப்பு :- இந்த கட்டுரை அதிகளவில் இஸ்லாமிய வரலாற்றோடு பயணிப்பதால், ஆண்டு கணக்கை குறிப்பிடப் பயன்படும் கால வரையறையான கி.மு - கி.பி என்பன வேறு மதத்தின் குறியீடாக இருப்பதால், அவற்றுக்கு பதில் இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் பொது யுக கால காணக்கை கையாள்கிறேன்.
இண்டும் ஒன்றுதான்.
கிறுஸ்துவுக்கு முன் = பொது யுகத்திற்கு முன்.
கிறுஸ்துவுக்கு பின் = பொது யுகத்திற்கு பின்.
எனவே படிப்பவர்கள், பொ.யு.பி = கி.பி என்பதை நினைவில் கொள்ளவும்.
இஸ்லாமிய ஆண்டுக்கணக்கான ஹிஜ்ரியை கையாளலாம், ஆனால் அது பிற மதத்தினருக்கு புரியாது.
மற்றப்படி ஒரு வரலாற்று ஆர்வலனாக இதில் எதை கையாண்டாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை.) 

தமிழ் கூறும் நல்லுலக்கு வணக்கம்...

இப்பதிவு , ஒரு முகநூல் பதிவின் விவாதத்தில் தொடங்கிய எனது ஆராய்ச்சி கட்டுரையே...

ஒரு முகநூல் பக்கத்தில், இஸ்லாமிய சகோதரர் ஒருவர், ஒரு பள்ளிவாசலின் புகைப்படத்தை பதிவிட்டு "இந்தியாவின் முதல் பள்ளிவாசல், தமிழகத்தின் ராமநாதபுர மாவட்டம் கீழக்கரையில் அமைந்திருக்கும் ஜும்மா (காலம் பொ.யு.பி 628) பள்ளிவாசல் என்றும் அந்த காலக்கட்டதிலேயே இஸ்லாம்  இங்கு பரவியிருததற்கான ஆதாரம்தான் இந்த பள்ளிவாசல்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இது சரித்திரக் குறிப்புகளுக்கு எதிராக தோன்றவே, ஒரு சிறு தேடலை மேற்கொண்டு, அது பொ.யு.பி 17ஆம் நூற்றாண்டில், ராமநாதபுர மன்னர் கிழவன் சேதுபதியின் அமைச்சரான வள்ளல் சீதகாதி எழுப்பியது என்ற ஆதாரத்தை தந்தேன்.

அதற்கு வேறு ஒரு இஸ்லாமிய சகோதரர், "அவர் தவறாக கூறிவிட்டார், அவர் கூற வந்தது, கேரளாவின் கொடுங்களூரில் இருக்கும் சேரமான் ஜும்மா பள்ளிவாசல்" எனக் கூறினார்.
சரி, அதைப்பற்றி தெரிந்து கொள்ளலாம் என இணையத்தில் தேடினால்,...
'இந்தியாவின் முதல் பள்ளிவாசலும், உலகின் இரண்டாவது பள்ளிவாசலுமான சேரமான் ஜும்மா பள்ளிவாசல் பொ.யு.பி 612ல் கேரளாவில் கட்டப்பட்டது' என்றே பல இணையங்களிலும் இருக்கிறது.
அப்படியென்றால் இது உண்மைதானா?!!!

பொ.யு.பி 612லேயே ஒரு பள்ளிவாசல் இந்தியாவில் கட்டப்பட்டு இருக்கிறது என்றால், அதுதான் உலகின் முதல் இஸ்லாமிய வழிபாட்டுத்தளமாக இருக்க வேண்டும்.
ஏனெனில், மெக்காவில் உள்ள கஅபா பள்ளிவாசல் கூட, பொ.யு.பி. 630ல் மெக்கா இஸ்லாமியர் வசமானதில் இருந்துதான்  இஸ்லாமிய வழிபாட்டுத்தளமாக மாறியது.
மதினாவில் நபியவர்கள் எழுப்பிய, உலகின் மிகப்பழமையான பள்ளிவாசல்களான குஃபா மசூதி, அல் மஸ்ஜித் நவாபி, மஸ்ஜித் கிப்லதைன் போன்ற பள்ளிவாசல்கள்கூட பொ.யு.பி 622க்கு பிறகுதான்.
அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பள்ளிவாசல் என்றால், அதுவும் இந்தியாவில் நம் சேர மண்ணில் இருக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய விஷயம்?!!!
அது, இந்திய இறையியலின் பன்முகத்தன்மைக்கு மிகப்பெரிய சான்றாக அமையுமே!!!...
அதனால் அந்த வரலாற்றின் முழுமையையும் உண்மையையும் ஆர்வமுடன் தெரிந்துக்கொள்ள முயன்றேன்..

இணையங்களில் கிடைக்கும்
சேரமான் ஜும்மா பள்ளிவாசலின் விவரம்:- 

பொ.யு.பி. 7அம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சேர மண்டலத்தை ஆண்ட சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற மன்னர், ஒரு நாள் தன் அரண்மனை உப்பரிகையில் நின்று வான்வெளியை ரசித்துக்கொண்டு இருந்தபோது, நிலவு இரண்டாக பிளந்து மீண்டும் ஒன்றிணைந்ததை கண்டார்.
வியப்பில் ஆழ்ந்த மன்னர், இதுபற்றி தன் மந்திரி பிரதானிகளிடம் விளக்கம் கேட்டிருக்கிறார், அவர்களோ "இது கனவாக இருக்கும்" என்றனர்..
மன்னர், தன் சமயப் பெரியவர்களிடமும், ஜோதிட விற்பன்னர்களிடமும் இதுகுறித்த  விளக்கம் கேட்க, அவர்களாலும் விளக்க முடியவில்லை...
மன்னர் குழப்பத்தில் ஆழ்ந்தார்.
அப்போது, கேரளாவிற்கு வணிகம் செய்ய வந்திருந்த அரேபிய வியாபாரிகள், இது பற்றிய தகவல் அறிந்ததும், அவர்கள் மன்னரை சந்தித்து மெக்காவில் நபியவர்கள் இறைதூதராக அறிவிக்கப்பட்டதையும், ஓர்இறை கொள்கை பற்றியும், மெக்கா வாசிகளின் சந்தேகத்தை போக்க அவர்  நிலவை பிளந்த அதிசயத்தையும் எடுத்துக் கூறினார்கள்.
இதைகேட்டு வியந்த மன்னர், நபியவர்களை தரிசிக்க விருப்பப்பட்டார்.

அரேபிய வியாபாரிகளும் மன்னரை அழைத்துக்கொண்டு மெக்கா சென்றனர்.
அங்கு மன்னர், நபியவர்களை சந்தித்து ஓர்இறை கொள்கையை தெரிந்து கொண்டார்.
அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள், தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.
பின்பு, இந்தியாவில் இஸ்லாம் மதத்தை பரப்பும் பொருட்டு மாலிக் பின் தீனார் என்பவரின் தலைமையில் பல மத  போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஏமன் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (Port of Zabar, Yeman) நோய் வாய்ப்பட்டு இறந்துவிட்டார், அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

ஆனாலும், அதன் பிறகும் தங்கள் பயணத்தை தொடர்ந்த மாலிக் பின் தீனாரின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்து, சேரமான் பெருமாள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்தனர். அதில், சேரமான் பெருமாள் தங்கள் குடும்பத்தாருக்கு 'இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளைக் கட்டுமாறும்' பணித்திருந்தார். 
அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனாருக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் பொ.யு.பி 612-ல் கொடுங்களூரில் முதல் மசூதியைக் கட்டினார்.

இதுதான் சேரமான் ஜும்மா பள்ளிவாசல் தோன்றியதற்கு  சொல்லப்படும் ஆதார தொன்மக்கதை....

யார் இந்த சேரமான் பெருமாள்???!!!
இவரை பற்றி ஆராய்ந்தால், இவரை பற்றி வேறு சில தொன்மக்கதைகளும் அதே இணையத்தில் உலா வருகிறது. அவை...
1) மன்னர் சேரமான், தன் ஆட்சியின் இறுதிகாலங்களில் கபிலவஸ்து, லும்பினி, சாரநாத் போன்ற புத்த ஸ்தலங்களில், ஏதோ ஒன்றுக்கு சென்றுவிட்டார்.
2)  நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு சென்று விட்டார். புத்த மதத்தை தழுவி விட்டார்.
(நாலந்தா பல்கலைக்கழகம், அக்காலத்தின் புத்த மதத்தின் மகாயான தத்துவ கல்விக்காக உலகப் புகழ்பெற்றிருந்தது.
ஆனால் அது ஒரு புத்தமத பல்கலைக்கழகம் இல்லை) 
3) இவையனைத்தையும் விட முக்கியமான தொன்மக்கதை என்னவென்றால், சைவக்குறவர் நால்வரில் ஒருவரான சுந்தரரின் நண்பரும், 63 நாயன்மார்களில் ஒருவரும், சுந்தரருடன் திருக்கைலாயத்தில் வெள்ளை குதிரையின் மீது எழுந்தருளியவருமான கழறிற்றறிவார் நாயனார் இவரே என்கிறது பெரிய புராணம்.
ஆனால் இவை எவற்றுக்கும் ஆதாரம் இல்லை.
அதுபோலவே, இந்த தொன்மக்கதைகளில் எவற்றிலும், சேரமான் தன் நாடு திரும்பவில்லை என்பது தெளிவாகிறது..

உண்மையில், சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற பெயரில் ஒரு மன்னர் இருந்ததற்கான வரலாற்று சான்று இல்லை.
தொகுக்கப்பட்ட சேர மன்னர்களின் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறவில்லை.
நமக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் மூவேந்தர்களின் வரலாற்றில், சேரர்கள் பற்றிய குறிப்புகள் மிகக்குறைவே..
அதுவும் பதிற்றுப்பத்து போன்ற சங்க இலக்கியங்கள் மூலமாகவே கிடைக்கிறது.

சேரமான் என்ற அடைமொழியை தாங்கி பல சேர மன்னர்கள் இருப்பதால், நாம் இந்த அனைத்து தொன்மக்கதைகளின் காலமான பிற்கால சேரர்களை மட்டும் கவனத்தில் கொள்வோம்.

சேரமான் மாக்கோதையார் (பொ.யு.பி598-629)
சேரமான் பெருமாள் நாயனார் (பொ.யு.பி724-756)
சேரமான் பற்றிய சைவ சமய தொன்மக்கதையின்படி,
பெரிய புராணம் கூறும் கழறிற்றறிவார் நாயனார் இவர்கள் இருவரில் ஒருவர், அல்லது இவர்கள் இருவருமே ஒருவர்.

பாஸ்கரா ரவி வர்மன் I (பொ.யு.பி962-1019)
பாஸ்கரா ரவி வர்மன் II (பொ.யு.பி1019-1021)
பாஸ்கரா ரவி வர்மன் III (பொ.யு.பி1043-1082)
சேரமான் பற்றிய இஸ்லாமிய தொன்மக்கதையின்படி, அவர் மேற்கண்ட  ஐவரில் ஒருவர். 

இந்த ஐந்து மன்னர்கள்தான் அந்த தொன்மக்கதையில் வரும் மன்னரின் முன்பாதி, பின்பாதி பெயர்களோடு  ஒத்துப்போகிறவர்கள்.
இவர்களில் எவர் அவர்? என்பது எவருக்கும் தெரியாது.
சேரமான் பற்றிய அனைத்து தொன்மக்கதைகளையும், சேரமன்னர்களின் காலக்கட்டத்தையும் கருத்தில் கொண்டால், இவர்கள் எவருமே இல்லை என்பது தெளிவாகிறது..

ஒருவேளை, அவர் முக்கியத்துவம் பெறாத ஒரு குறுநில மன்னராக இருந்திருக்கலாம். (யூகம்தான்)
அவர் காலம் பொ.யு.பி. 6ஆம் முதல் 11ஆம் நுற்றாண்டு வரை இருக்கலாம்.
அவர் திடீரென்று மறைந்து (காணாமல்) போய் இருக்கலாம், காரணம் எதுவாயினும் இருக்கலாம்.
அவர் மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருந்திருக்கலாம், குறிப்பாக இறைத்தேடல் உள்ளவராக இருந்திருக்கலாம்.
அதனாலயே அவரின் மறைவை பயன்படுத்தி ஒவ்வொரு மதத்தினரும் ஒரு கதையை உருவாக்கி மக்களை கவர்வதற்கான வழியை பார்த்திருக்கலாம்.
( இதில் எனக்கு ஏற்பட்ட வியப்பு என்னவென்றால், இஸ்லாத்துக்கு முன்பே இந்தியாவிற்கு பரிச்சயமான கிறுஸ்துவத்திற்கென சேரமான் பற்றிய ஒரு தொண்மை கதை இல்லாததுதான்) 
ஆனால் இவை எவற்றுக்குமே சரித்திரக் குறிப்பு இல்லை.
எல்லாமே என் யூகம்தான். ஏனெனில் நெருப்பில்லாமல் புகையாது என்பது திண்ணமான என் எண்ணம்.

சரி, விஷயத்திற்கு வருவோம்...

மெக்காவில் நபியவர்கள், நிலவை இரண்டாக பிளந்த அதிசயத்தை பற்றி நாம் ஆராயப்போவதில்லை.
ஏனெனில், ஹதீஸ் புகாரி:3868ன் படி நபியவர்கள் நிலவை பிளந்து அதன் நடுவே ஹீரா மலைக்குன்றை, தன் குரைஷி இன மக்களுக்கு காட்டினார் என்பது இஸ்லாமியர்களின் இறை நம்பிக்கை, அது இஸ்லாத்தின் உள்விவகாரம் .
அதில் தலையிடுவது நாகரிகம் இல்லை.

எனவே நாம் ஆராயப்போவது, மன்னர் சேரமான் அந்நிகழ்வை பார்த்தாரா? இல்லையா? என்பதை பற்றியும், அவரின் அரேபிய பயணம், அதன் காலக்கட்டம், அதனால் எழும்பியதாக சொல்லப்படும் பள்ளிவாசலை பற்றிய தொன்மக் கதையை பற்றியே...

இஸ்லாமிய வரலாற்றின்படி, முஹம்மது அவர்கள் நபி பட்டம் பெற்றது பொ.யு.பி.610.
தன்னை இறைத்தூதராக பொ.யு.பி. 610ல் உணர்ந்த நபியவர்கள், தன்னை பிறருக்கு உணர வைக்க சில காலம் ஆகியிருக்கும் .
குறிப்பாக....
மெக்காவாசிகளான குரைஷிகளின் சந்தேகத்தை போக்குவதற்காக நிலவை பிளக்கும் அளவிற்கு குரைஷிகளின் கவனத்தை பெறுவதற்கு நிச்சயமாக சில காலம் ஆகியிருக்கும்.
குறைந்தபட்சமாக ஒன்றிலிருந்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கலாம்.
அப்படியென்றால் இந்நிகழ்வு பொ.யு.பி. 611 அல்லது 612ல் நிகழ்ந்திருக்கலாம்.
ஆனால், இங்கே கேரளாவில் சேரமான் ஜூம்மா பள்ளிவாசல் பொ.யு.பி 612ல் கட்டப்பட்டுவிட்டது என்றால், மன்னர் சேரமானின் அரேபிய பயணமும், நபியவர்களின் சந்திப்பும் கேள்விக்குறியே ..
ஏனெனில் கேரளாவிற்கும் மெக்காவிற்கும் உள்ள தூரம் அதிகம். 
அதுவும் கடல் பயணம், அதுவும் பாய்மர கப்பல்கள்தான், அதிலும் குறிப்பாக சேரமான், மன்னர் என்பதால் அரசப்பயண பூர்வாங்க பணிகள் வேறு இருக்கிறது, நினைத்தவுடன் புறப்பட்டுவிட முடியாது.
அதனினும் குறிப்பாக, அந்த அரேபிய வணிகர்கள், சேரமானிடம் விடைப்பெற்று இலங்கை சென்று  தங்கள் வணிகத்தை முடித்துக்கொண்டு போகும்போது தான், மன்னரையும் அழைத்துக்கொண்டு அரேபியா போனார்கள் என்கிறது அந்த கதைக்குறிப்பு..
இவையனைத்துக்கும் மொத்தமாக, குறைந்தபட்சம் ஓரிரு ஆண்டுகள் ஆகியிருக்கும்.
ஆனால் இங்கு அந்த பள்ளிவாசல் பொ.யு.பி. 612ல் கட்டப்பட்டுவிட்டது என்பதை கவனிக்கையில் கால இடைவேளை பெரிதும் இடிக்கிறது.

ஆனால் அதே தொன்மக்கதையில் வேறு சில காலக்கட்டங்களையும் குறிக்கிறார்கள் (ஆனால்,வெகு குறைவாகவே)அவை ..
பொ.யு.பி. 628 மற்றொன்று பொ.யு.பி. 843...
பொ.யு.பி. 628 என்பதை கவனத்தில் கொண்டால், பொ.யு.பி. 628ல் நபியவர்கள் மதினாவில் இருந்தார்.
ஆனால் நபியவர்கள் செய்துகாட்டிய நிலவை பிளந்த அதிசயம், மெக்காவில் நபி பட்டம் பெற்ற ஆரம்ப காலங்களில்.
(பொ.யு.பி. 622 லேயே மெக்காவில் இருந்து வெளியேறிவிட்டார் .)
பொ.யு.பி 843 என்பதை கவனத்தில் கொண்டால், நபியவர்கள் பொ.யு.பி 632ல் மறைந்துவிட்டார்.
எனவே, நபியவர்கள் நபி பட்டம் பெற்று ஆரம்ப காலங்களில் ( பொ.யு.பி. 610 - 615) நிகழ்த்தி காட்டிய அதிசயமான நிலவை பிளந்த நிகழ்வை, மன்னர் சேரமான் பெருமாள் பொ.யு.பி. 628லேயோ அல்லது பொ.யு.பி. 843லேயோ பார்த்திருக்க முடியாது.
ஒருவேளை அப்படி பார்ந்திருந்தால், அது மறு ஒளிபரப்பாகத்தான் இருக்க முடியும்.

அடுத்து... 
அந்த தொன்மக்கதையின் கூற்றுப்படி, அந்த அரேபிய வணிகர்கள் இஸ்லாத்தின் ஒர்இறை கொள்ளைகையை ஏற்றிருக்க வேண்டும் அல்லது ஆதரித்து இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சமாக நம்பியிருக்கவாவது வேண்டும்.
ஆனால் இஸ்லாத்தின் ஆரம்பக்கால வரலாற்றில், இஸ்லாத்திற்கு மிகப்பெரிய எதிரியே வணிகர்கள்தான்.
இதற்கு, அன்றைய மெக்காவை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
அரேபிய பாலைவன பயணிகளும் வியாபாரிகளும், இளைப்பாறும் இடமாக மெக்கா இருந்தது .
அதற்கு மிக முக்கியமான காரணம், அங்கிருக்கும் வற்றாத ஜம் ஜம் கிணறு.
(இந்த கிணறு பற்றிய பல புராதான கதைகள் உள்ளன.)
அது அம்மக்களின் தாகத்தை தீர்த்ததோடு மட்டுமன்றி புனிதமாகவும் கருதப்படுகிறது.
இந்த கிணற்றில் இருந்து வெறும் 66 அடி தொலைவில் உள்ளதுதான், உலகப் பிரசித்திப்பெற்ற கஅபா வழிபாட்டுத்தளம்.
(இதற்கும் பல புராதான கதைகள் உண்டு.)
அன்றைய மெக்காவில் 360 கடவுளர்கள் வணங்கப்பட்டு வந்தனர். 
அவர்களில் பிரதானமானவர்கள், லாத்,  உஸ்ஸா மற்றும் மனாத்.
அனைத்தும் சிலை வழிபாடு.

மெக்காவில் வருடந்தோறும் நிகழும் ஒரு திருவிழாவிற்கு, மத்திய ஆசியா மற்றும் அரேபியாவில் இருந்து பல கடவுள் விக்கிரகங்கள் கொண்டுவரப்படும்.
கிட்டதட்ட அத்திருவிழா, நமது மாசிமக திருவிழாவை போன்றதுதான்(புரிதலுக்காக).
மத்திய ஆசிய மற்றும் அரேபிய மக்கள் பெருமளவில் கூடும் 
அந்த திருவிழாவே மெக்காவாசிகளின் பெரும்பான்மையான வாழ்வாதாரத்தை ஈட்டித்தரும்.
அந்த திருவிழா சந்தையின் வாயிலாக மிகப்பெரிய வணிகம் நடைபெறும்.
இதை அடியோடு வெறுத்தவர்தான் நபியவர்கள். 
இறைவனுக்கு உருவம் கொடுத்து அதை வியாபாரமாக்குவதாக சாடினார்.

அந்தக்கால வணிகம் என்பது பண்டமாற்று முறையும் கொண்டது.
இந்தியா, சீனா, கிரேக்கம் போன்ற நாடுகளில் கிடைக்கும் அப்பிராந்திய பிரசித்திப்பெற்ற பொருட்களை வாங்கிக்கொண்டு அதற்கு ஈடாக சமயங்களில் பொன்னையோ அல்லது அரபியாவில் பிரசித்திப்பெற்ற பொருட்களையோ கொடுத்து விடுவர்.
பின் அந்த பொருட்களை எடுத்துச்சென்று மெக்காவில் நடக்கும் திருவிழா சந்தை மற்றும் பிறவகைகளில் வணிகம் செய்வர்.

இதற்கு ஊறு விளைவிக்கும் விதமாக நபியவர்கள் செயல்படுவதாக, 
முதன் முதலில் நபியவர்களிடம்  முட்டிக்கொண்டவர்கள் மெக்காவின் வணிகர்களே..
அந்த வணிகர்கள் தான், சேர மன்னர் சேரமான் பெருமாளிடம் நபியவர்களை பற்றி பெருமையாக சொன்னார்கள் என்பது நகைப்புக்குறியது.

இவற்றையெல்லாம் புறந்தள்ளினாலும், அந்த அரேபிய வணிகர்கள் மன்னர் சேரமானுக்கு எப்படி இஸ்லாத்தையும், நபியவர்களையும், நபியவர்கள் செய்து காட்டிய அதிசயத்தையும் புரிய வைத்திருப்பார்கள்?

அந்த அளவிற்கு அந்த அரேபிய வணிகர்கள், பன்மொழி விற்பன்னர்களா? 
பொதுவாக, கடல்கடந்த வணிகர்கள், அவர்கள் வாணிபம் செய்யும் பிராந்திய மொழிகளில் ஓரளவு பரிச்சயம் பெற்றிப்பார்கள்.
அந்த ஓரளவு என்பது, வணிகம் சம்பந்தமான சில சொற்களை தெரிந்திருத்தலே.
ஒரு இறை தத்துவத்தையே மொழிபெயர்த்து கூறுமளவுக்கு பன்மொழி விற்பன்னர்களாக இருந்திருக்க முடியாது.

அரபி, சற்று கடினமான மொழிகளில் ஒன்று.
அதனால்தான், சிறந்த மொழி பெயர்ப்பாளர்களால் மொழி பெயர்க்கப்பட்டு இன்று நமக்கு கிடைக்கப்பெறும் திருகுரானில் உள்ள ஒரு வசனத்தை கூட, படித்தவுடன் புரிந்துகொள்ள முடிவதில்லை...
இந்த அளவிற்கு அந்த அரேபிய வணிகர்கள் மொழி விற்பன்னர்களாக இருந்திருக்க முடியாது.
ஏனெனில், அன்றைய அரேபியர்களுக்கு கல்வியறிவு என்பதே கிடையாது.
இதை பல சான்றுகள் மூலம் நிறுவ முடியும்.
நபியவர்களே பலமுறை அரேபியர்கள் கல்வி கற்க வேண்டும் என்று அறிவுறுத்தியதை நாம் குரானிலும், ஹதீஸ்களிலும் கூட கண்கூடாக காணலாம்...

இந்த தொன்மக்கதைக்கு அரேபிய மண்ணில் எதேனும் சான்று உள்ளதா? என தேடினால், நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி (ரலி) கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தரக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்..
"இந்தியாவிலிருந்து, முஹம்மது நபி(ஸல்)அவர்களை காண வந்திருந்த ஒரு மன்னர், ஒரு ஜாடி நிறைய ஊறுகாய்களை கொண்டுவந்திருந்தார்.
அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முஹம்மது நபி(ஸல்)அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தார், அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது".

ஒரு மன்னர், இறைத்தூதராக அறியப்படும் ஒருவரை சந்திக்க கடல்கடந்து பிராயணம் செய்து, அவருக்கு அன்பளிப்பாக கொடுக்க வெறும் ஊறுகாயையா கொண்டு செல்வார்? அதுவும் இந்தியா போன்ற செல்வச்செழிப்பான நாட்டில் இருந்து? அதுவும் புகழ்பெற்ற மூவேந்தர்களில் ஒருவரான சேர மன்னர்? 
உணவுக்கு ருசி சேர்க்கும் ஒரு ஊறுகாயை கொண்டுவந்தரையே மன்னராக பிரமித்து பார்க்கும் அளவிற்குத்தான் அரேபிய செல்வ வளம் இருந்தது என்பதை வேண்டுமானால் இந்த தகவலில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாமே தவிர இதை ஒரு சரித்திரக் குறிப்பாக பார்க்க முடியாது...

அடுத்து....
அந்த பள்ளிவாசல், இஸ்லாம் துளிர்விட்ட ஆரம்பகாலங்களில் தான் கட்டப்பட்டது என்பதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் தரும் ஆதாரம், கிப்லா ஆகும் ..
அதாவது இஸ்லாமியர்களின் தொழுகை திசை.
ஆரம்ப கால இஸ்லாமியர்கள், கிழக்கை நோக்கி தொழுதார்கள்.
நபியவர்களும், ஓர்இறை பற்றாளர்களும், இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலம் நகரில் உள்ள பைத்துல் முகத்தஸ் என்ற வழிபாட்டுத்தளத்தை நோக்கி தொழும் விதமாக கிழக்கை நோக்கி தொழுதார்கள்.
(பைத்துல் முகத்தஸ் என்று குறிக்கப்படும் இந்த வழிபாட்டுத்தளம், யூத வழிபாட்டுக்காக சாலமன் மன்னனால் கட்டப்பட்டது, பின் பாபிலோனிய மன்னன் நெபுகட்நேசர் அதை இடித்து தரைமட்டமாக்கினான்.
இது, யூதர்களின் வேதமான தோரா கூறுவது.
மீதம் இருந்த ஒற்றை சுவரே யூதர்களின் வழிபாட்டத்தளமாக இருந்தது.)

இந்த முறையானது, மெக்காவில் வசித்த காலகட்டத்திலும், மதினாவில் குடியேறிய சில காலம் வரையும் பின்பற்றப்பட்டது.
பின்பு தொழுகை திசை மேற்கை நோக்கி திருப்பப்பட்டது.
மெக்காவில் இருந்து ஹிஜ்ரத் (பயணம்-வெளியேற்றம்) செய்து மதினா வந்த பின்பும், நபியவர்கள் உள்ளம் காஅபா பற்றி சிந்தித்துக் கொண்டிருந்ததால், இறைவனால் அருளப்பட்ட குரான் வசனம் 2:144 
" நபியே உமது முகம் பிரார்த்தனை செய்து அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காணுகிறோம். ஆகவே நீர் விரும்பும் கிப்லாவாகிய மக்காவின் பக்கமே நாம் உம்மை நிச்சயமாக திருப்புகிறோம். எனவே நீர் தொழும்போது மக்காவிலுள்ள கஅபதுல்லா பக்கமே உமது முகத்தை திருப்புவீராக.
நம்பிக்கையாளர்களே நீங்களும் எங்கிருந்த போதிலும், அதன் பக்கமே உங்கள் முகங்களை திருப்புங்கள்."
இந்த வசனம் நன்பகல் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது இறக்கப்பட்டது.
இதன்படி நபியவர்கள் உடனடியாக மேற்கை நோக்கி தொழ ஆரம்பித்தார், ஓர்இறை நம்பிக்கையாளர்களும் அவரை பின்பற்றினர்.
(இன்றும் அந்த பள்ளிவாசல், இரு மிக்ராப்களை கொண்ட, இரு திசை தொழுகைக்கான பள்ளி வாசல் எனப் பொருள்படும் விதமாக மஸ்ஜித் கிப்லதைன் என்ற பெயரில் இருக்கிறது.)

அதனாலதான் இந்த சேரமான் பள்ளிவாசலும், இஸ்லாமிய ஆரம்பக்கால தொழுகை திசையான கிழக்கை நோக்கி கட்டப்பட்டது.
சமிபகாலத்தில் தான், இப்பள்ளிவாசல் மேற்கை நோக்கி திருத்தப்பட்டது என்பதை இஸ்லாமிய அறிஞர்கள், இப்பள்ளிவாசல் பொ.யு.பி. 612ல் கட்டப்பட்டதுதான் என்பதற்கு ஆதாரமாக கூறுகிறார்கள்..

இதையெல்லாம் ஒரு ஆதாரமாக, சரித்திரம் ஏற்றுக்கொள்ளாது.
எனினும், நம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு மதிப்பளித்து, இந்த ஆதாரத்தை ஏற்றுக்கொண்டு ஆராய்வோம்.
மெக்கா மற்றும் மதினாவில் இருந்து வேண்டுமானால் ஜெருசலம் கிழக்காக (?!) இருக்கலாம்.
ஆனால் இந்தியாவின் எந்த ஒரு மூலையில் இருந்தும் ஜெருசலம் மேற்கில்தான் உள்ளது.
ஒருவேளை, ஆரம்பக்கால கிப்லாவான கிழக்கு திசை கூற்றை கருத்தில்கொண்டால், அது தவறு.
ஏனெனில், கிப்லா என்பது ஒரு குறிப்பிட்ட வழிபாட்டுதலம் இருக்கும் திசையை நோக்கிய தொழுகையே தவிர, திசையே தொழுகைக்கானது இல்லை..
அதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை.

குறிப்பாக, குரான் 2:144ன்படி கிப்லா என்பது மெக்காவில் உள்ள கஅபா வை நோக்கி தான் இருக்க வேண்டும்.
அதாவது மெக்காவிற்கு மேற்கில் இருப்பவர்கள் கிழக்கை நோக்கியும், கிழக்கில் இருப்பவர்கள் மேற்கை நோக்கியும், வடக்கில் இருப்பவர் தெற்கை நோக்கியும், தெற்கில் இருப்பவர்கள் வடக்கை நோக்கியும் தொழ வேண்டும்.
அப்படித்தான் தொழுது கொண்டும் இருக்கிறார்கள்.
( ஒருவேளை, ஒருவருக்கு திசை தெரியாவிட்டால், அவர் எந்த திசையை நோக்கியும் தொழுவதற்கு, குரான் 2:142ன்படி இஸ்லாம் அனுமதிக்கிறது)
ஆகவே 'கிழக்கு திசை நோக்கிய பள்ளிவாசல் சேரமான் ஜும்மா' என்ற வாதம் அடிப்படையிலேயே தவறானது.
ஒருவேளை, அந்த பள்ளிவாசலை சேரமான் பெருமாள் கட்டியிருந்தால், அவர் கிப்லாவை சரியாக புரிந்து கொள்ளாமல், திசையை அடிப்படையாக வைத்து கிழக்கை நோக்கி கட்டியிருக்கலாம் எனக் கருத இடம் இருக்கிறது. 
ஏனெனில் சேரமான் பெருமாளுக்கும் அரேபியர்களுக்கும் இடையில் இருக்கும்  மொழிப்பிரச்சனையால் குழப்பம் விளைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால் அந்த பள்ளிவாசலை கட்டியதாக கூறப்படுபவர், அரேபியரான மாலிக் பின் தீனார் என்ற மார்க்க அறிஞர்.
எனவே, சேரமான் ஜும்மா பள்ளிவாசல் கிழக்கை நோக்கி அமைக்கப்பட்டிருப்பது, இஸ்லாமிய அரம்பக்கால கிப்லாவை குறிக்கும் விதமாக இருப்பதால், அது பொ.யு.பி.612ல் கட்டப்பட்டதுதான் என்ற வாதம் ( பொ.யு.பி 628 அல்லது பொ.யு.பி 843 உட்பட) சரித்திர ஆதாரத்திற்கு மட்டுமன்றி இஸ்லாத்திற்கும் எதிரானதே...

எனவே இந்த சேரமான் ஜும்மா பள்ளிவாசல் பொ.யு.பி 7ஆம் நூற்றாண்டின் எந்த ஒரு  காலக்கட்டத்தில் கட்டப்பட்டது என்றாலும் அது வெறும் தொன்மக்கதையாகத்தான் இருக்குமே தவிர சரித்திரம் ஆகாது என்பது திண்ணம்.
சரித்திரம், தொல்லியல் சான்றுகளைத்தான் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளுமே தவிர தொன்மக்கதைகளை அல்ல.
(அப்படி ஒரு தொல்லியல் சான்று அந்த பள்ளிவாசலுக்கு இல்லை)
அப்படி அதை சரித்திரம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், இதை விட நேர்த்தியான இந்து மத தொன்மக்கதைகளை, ஒருவரி பாக்கியில்லாமல் அனைத்தையும் ஏற்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படும்.

இதன் சாத்தியக்கூறுகளை, அந்த தொன்மக்கதைக்கு மேலும் சாதகமாக்கி ஆராய்ந்து, இதற்கான விடை என்னவென்று பார்க்கலாம்.
நபியவர்கள் பொ.யு.பி 610 -612 வரையிலான ஏதோ காலக்கட்டத்தில் நிகழ்த்திக்காட்டிய அதிசயத்தை, மேற்கண்ட ஏதோ ஒரு காலக்கட்டத்தில் சேரமான பெருமாள் பார்த்திருக்கலாம்.
அவரின் பயணம் உடனடியாகவும் சாத்தியப்பட்டு நபியவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றிருக்கலாம்.
ஆனால், அந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது, அந்த தொன்மக்கதையில் வரும் (வெகு குறைவாகவே)மற்ற இருவேறு ஆண்டுகளான பொ.யு.பி 628 அல்லது 843ல் கட்டப்பட்டிருக்கலாம்.
இந்த இரண்டு நிகழ்வின் காலக்கட்டங்களையும் ஒரே காலக்கட்டமாக அந்த தொன்மக்கதை கூறுவதால் குழப்பம் ஏற்பட்டிருக்க ஏன் வாய்ப்பிருக்க கூடாது?
கண்டிப்பாக இருக்கிறது.

ஆனால், 'ஊனுடன் உயிராக' தர்க்கரீதியாக சில கேள்விகளும் இயல்பாகிவிடுகிறது..

1) பொ.யு.பி 628 என்பதை கருத்தில் கொண்டால், இடைப்பட்ட பதினாறு ஆண்டுகளின் (612-628) தேவை என்ன?
அந்த கட்டிடம் கட்டி முடிக்க என்றால், அது ஒன்றும் தஞ்சை பெரிய கோவிலை போன்றதோ அல்லது தாஜ்மஹால் போன்றதோ இல்லை இழைத்து இழைத்து கட்ட.
அந்த கட்டிடத்தின் அளவே15 × 40 தான்.
அதன் தோற்றம் கூட எளிமையான அந்தக்கால வீட்டை போன்றதுதான்.
அதை கட்டி முடிப்பதற்கு, அரேபிய பாலைவனத்தில் வேண்டுமானால் பதினாறு வருடங்கள் தேவைப்படலாம், ஆனால் இந்தியா போன்ற வளமிக்க நாட்டில் ஒரிரு வருடமே தேவையற்றது.
அது மட்டுமன்றி, பொ.யு.பி 623 வாக்கிலேயே கிப்லா மேற்கை நோக்கி திருப்பட்டுவிட்டதால், இஸ்லாத்தின் ஆரம்பக்கால கிப்லாவான கிழக்கு திசை பள்ளிவாசல் என்ற வாதம் மறுமுறையும் தோற்றுப்போகும்.
ஏனெனில், இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் (பொ.யு.பி.623-628)அரேபியாவிற்கும் இந்தியாவிற்குமான தொடர்பு அறுந்துவிட்டதா? அல்லது கிப்லா திருப்பட்டதை அரேபிய வணிகர்கள் இங்கு சொல்ல மறந்துவிட்டார்களா? 
2)பொ.யு.பி 843 என்பதை கருத்தில் கொண்டால், சேரமான் பெருமாளுடன் பொ.யு.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரேபியாவில் இருந்து புறப்பட்ட மாலிக் பின் தீனார் (பள்ளிவாசலை கட்டியதாக சொல்லப்படுபவர்), கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியகாலம் வரை உயிருடன் இருந்தாரா?!!
ஒரு மனிதனின் ஆயுட்காலம் 250 ஆண்டுகளா?!!
எனவே எப்படி ஆராய்ந்தாலும், அந்த தொன்மக்கதையில் குறிக்கப்படும் ஆண்டுகளில் ஏதுவும் அந்த தொன்மக்கதையோடு ஒத்துப்போகவில்லை.
வேண்டுமானால், நடைமுறை சாத்தியமான பொ.யு.பி 612 - 620 வரையிலான ஒரு காலக்கட்டத்தில்தான், அந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது என அந்த தொன்மக்கதையில் இன்றே ஒரு மாற்றம் செய்துவிட்டால், இருநூறு வருடங்கள் கழித்து இந்த தொன்மக்கதை ஏற்கப்படலாம்.
ஆனால் அப்போதும் நபியவர்கள் செய்து காட்டிய அதிசயத்தின் காலக்கட்டத்தையும், சேரமானின் அரேபிய பயண காலக்கட்டத்தையும் ஒப்பிட்டு பார்த்தால், இந்த தொன்மக்கதை அன்றும் தோற்றுப்போகும்.
அதைவிட முக்கியயமாக, கிழக்கு திசை பள்ளிவாசல் என்ற கூற்று, என்றும் ஏற்கப்படாது.

பொதுவாக, ஒரு வாழிப்பாட்டு முறைமை அல்லது ஒரு சமயம் அல்லது ஒரு மதம் எப்படி பரவும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மேற்கண்டவைகளில் எதுவாயினும், எவ்வளவு சிறந்ததாயினும் அது உடனடியாக மக்களால் ஏற்றுக்கொள்ளப் படாது.
(ஆரிய வேத வழிபாடும், திராவிட உருவ வழிபாடும் ஒன்றை ஒன்று ஏற்றுக்கொண்டு ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து, ஒரு சமயமாக உருவெடுக்க, அதற்கு கிட்டதட்ட மூவாயிரயிரம் வருடங்கள் தேவைப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்)

ஒரு மதத்தின் வளர்ச்சி, 
ஒரு கட்சியில் தொண்டர்கள் சேருவதை போலவோ அல்லது ஒரு நடிகரின்பால் ரசிகர்கள் ஈர்க்கப்படுவது போலவோ அவ்வளவு விரைவாக நிகழாது.
ஒருவரால் கட்சியின் மீதுகொண்ட அபிமானத்தையோ அல்லது நடிகரின் மீது கொண்ட ஈர்ப்பையோ, தேவைபட்டால் உடனடியாக மாற்றிக்கொள்ள முடியும்.
ஆனால் இறை நம்பிக்கை என்பது ஆன்மாவோடு கலக்கும் விஷயம்.
அது மனிதனுக்கும், படைத்த இறைவனுக்கும் இடையில் ஏற்படும் தனிப்பட்ட பந்தமாக இருக்கிறது.
அதனால்தான் உலகில் பலவகைப்பட்ட வர்க்கங்கள் தோன்றினாலும், அவற்றில் மதம் என்ற வர்க்கம் மட்டுமே கோலேச்சுகிறது.

இந்த கோட்பாட்டில் இருந்து விலகி, ஒரு மதம் உடனடியாக பரவ வேண்டும் என்றால் அது ஆட்சிபீடம் ஏற வேண்டும்.
சான்றுகளாக...
1)கெளதம புத்தர் தோற்றுவித்த பெளத்தம், முன்னூறு ஆண்டுகள் கழித்து அசோகரால் ஆட்சிபீடம் ஏறிய பின்தான் வளர்ச்சி கண்டது.
2) மஹாவீரர் தோற்றுவித்த சமணம், இரண்டாயிரத்து அறநூறு ஆண்டுகள் கழித்தும்(இன்றுவரை), அது மற்றவை போல வளர்ச்சி பெறாததற்கு காரணம், அது ஆட்சி பீடம் ஏறாததே.
(குப்தர்கள், களப்பிரர்கள், பல்லவர்கள் போன்றோர் சமணத்தை ஆதரித்தாலும், ஆட்சி பீடத்தில் ஏற்றவில்லை) 
3) சைவ வைனவ சண்டைக்கூட  ஆட்சிபீடம் ஏறி தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவே.
4) யேசு கிறுஸ்துவால் போதிக்கப்பட்ட கிறுஸ்துவம், அவர் மறைந்து முன்னூறு வருடங்கள் கழித்து, பேரரசர் கான்ஸ்டன்டைனால் ரோமானிய ஆட்சி பீடம் ஏறிய பின்னர்தான் வளர்ச்சி கண்டது.

அதுபோல்தான் இஸ்லாமும்.
பொ.யு.பி. 610ல் நபி பட்டம் அடைந்த நபியவர்கள், பொ.யு.பி. 622ல் மெக்காவை விட்டு வெளியேற்றப்பட்டு மதினாவிற்கு பயணமானபோது (ஹிஜ்ரத்), அவருடன் பயணித்தது வெறும் எழுபது பேர்.
(இதில் மிட்கப்பட்ட சில அடிமைகளும் அடங்குவர்) 
அதாவது அவரின் பன்னிரெண்டு வருட (இடைவிடாத) ஒர்இறை கொள்கை பிரச்சாரத்தில், அதை ஏற்றுக்கொண்டவர்கள் வெறும் எழுபது பேரே..
அதே அவர் மதினாவின் ஆட்சி பீடத்தில் இஸ்லாத்தை ஏற்றிய இரண்டாம் மற்றும் நான்காம் வருடங்களில் நடந்த பத்ர் போர்களில் பங்கேற்ற இஸ்லாமியர்களின்  எண்ணிக்கை மட்டுமே இரண்டாயிரம் பேர்.
அதே எட்டு வருடம் கழித்து பொ.யு.பி 630ல் அவர் மெக்காவை கைப்பற்றும் போது அவருடன் இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்திற்கும் மேல்.
பிறகு மெக்காவின் ஆட்சி பீடம் ஏறிய இஸ்லாம், மாபெரும் வளர்ச்சி கண்டது.

அவருக்குப்பின் வந்த முதல் நான்கு கலிபாக்களின் காலங்களில், இஸ்லாம் அரேபிய தீபகற்பத்தில் முழுமையாகவும், மத்திய ஆசியாவின் சில பகுதிகளிலும் வடமேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் பரவியது.
இதற்கு தேவைப்பட்ட காலக்கட்டம் பொ.யு.பி 632 - 661 வரையிலான வெறும் 29 வருடங்களே.
ஆனால், அவ்விடங்கள் அனைத்தும் கலிபாக்களால் வெற்றிக் கொள்ளப்பட்டு இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது என்பதை கவனிக்க தவறக்கூடாது.

(ஒரு மதம் ஆட்சி பீடம் ஏறாவிட்டால், அது எவ்வளவு சிறந்ததாயினும் அது மறைந்துவிடும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தீன்-இ-லாஹி.
இது அனைத்து மதங்களிலிருந்தும் ஆகச்சிறந்த விஷயங்களை எடுத்து தொகுக்கப்பட்ட ஒரு மத கோட்பாடு.
இந்திய மாமன்னர் அக்பரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த மார்க்கம், அவருடனே மறைந்தும் விட்டது) 

பொ.யு.பி 712ல் சிந்து மீது படையெடுத்த, அரேபிய உமையது கலிபாக்களின் படைத்தலைவன் முகமது பின் காசீம் மற்றும் பொ.யு.பி 1000களில் வடமேற்கு இந்தியா மீது படையெடுத்த  கஜினி முகமது ஆகியோர் ஆவ்விடங்களை வெற்றிகொண்டாலும், ஆட்சியை கைப்பற்றாமல் கொள்ளையடிப்பதில் கவனம் செலுத்தியதால், இஸ்லாம் துளியளவும் அங்கு பரவவில்லை.
மாறாக பொ.யு.பி 1194ல் முகமது கோரி, தில்லியின் ஆட்சிபீடத்தை கைப்பற்றிய பின்னரே இஸ்லாம் இந்தியாவிற்குள் பரவ முடிந்தது.

அதற்கு முன்னும் சில இஸ்லாமியர்கள் இருந்திருக்கலாம், சில பள்ளிவாசல்களும் எழும்பியிருக்கலாம்.
ஆனால் அவை வெறும் அந்நிய(வணிக) குடியேற்றங்களாகவும், அவர்களுக்காக எழும்பிய பள்ளிவாசல்களாகவும் மட்டுமே இருக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஒரு மதத்தார் வேறு ஒரு இடத்தில் குடியேறுவதற்கும், ஒரு மதம் வேறு ஒரு மக்களிடத்தில் குடியேறுவதற்கும் வேறுபாடு இருக்கிறது.

இத்தருணத்தில் ஒரு ஜெர்மானிய வரலாற்று அறிஞர் (பெயர் மறந்துவிட்டேன்)
கூறியதை, இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்...
"உலகின் பண்டைய நாகரிகங்கள் தழைத்த இடங்களில், எங்கு அகழ்வராய்ச்சி செய்தாலும், அங்கு இன்றைய இந்து மத குறியீடான சிவலிங்கம் கிடைக்கும் ".
இதற்கு அர்த்தம் என்னவென்றால், அங்கு எல்லாம் சிவலிங்க வழிபாடு பரவியிருந்தது என்றும் சைவ மதம் பரவியிருந்தது என்றும் மட்டுமே பொருள்கொள்ள கூடாது. 
மாறாக, அங்கெல்லாம் இந்திய வணிகமும் அதற்கான இந்திய வணிகர்கள் குடியேற்றமும் இருந்தது என்பதாகவும் பொருள் கொள்ள வேண்டும்.

பொதுவாக சரித்திரம், தனக்கு ஆதாரமாக தொல்லியல் சான்றுகளை மட்டுமே கவனத்தில் கொள்ளும்.
அதேவேளை மதம் சார்ந்த ஆதாரங்களை, தொல்லியல் சான்றுகளுடன் சேர்த்து அம்மக்களின் வழிபாட்டு முறைமைகளிலும், கலாச்சாரங்களிலும் அதன் எச்சத்தை தேடும்.
அப்படியான ஒன்று கிடைக்கும்வரை, இம்மாதிரியான தொன்மக்கதைகளில் இருந்து சரித்திரம் விலகியே நிற்கும்...

இந்த ஆய்வின் முடிவாக, சேரமான் ஜும்மா பள்ளிவாசல் பொ.யு.பி 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பதற்கும், அக்காலக்கட்டங்களிலேயே இங்கு இஸ்லாம் பரவியிருந்தது என்பதற்கும் சான்றாக கூறப்படும் அந்த தொன்மக்கதை, அடிப்படை ஆதாரம் அற்றது என்பது தெள்ளத்தெளிவு.
ஒருவேளை, அப்படி இருந்திருந்தால் அது நம் மண்ணின் இறையியல் பன்முகத்தன்மைக்கு பெருமையே...
ஆனால் இல்லாத ஒரு விஷயத்தை இருந்ததாக கூறுவது வரலாற்று திரிபு மட்டுமன்றி வரலாற்று திருட்டும் ஆகும்.

இந்த ஆய்வை நான், ஒரு வரலாற்று ஆர்வலனாக மட்டுமே மேற்கொண்டிருக்கிறேன்.
எந்த ஒரு சூழலிலும் ஒரு மதத்தின் உள்விவகாரங்களில் தலையிடாமல், வெளியில் நின்றே ஆய்வு செய்திருக்கிறேன்.
ஒருவேளை, என்னையும் அறியாமல் அத்தவறு நிகழ்ந்திருக்குமானால் வரலாற்று அறிஞர்களும், மார்க்க அறிஞர்களும் சுட்டிக் காட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

                          -மதன்கார்த்திக்
                             புதுச்சேரி.
                           (19/10/2020)

Comments

Popular posts from this blog

#இஸ்ரேல்

மாமேதை அம்பேத்கரின் 'நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன்'.