மாமேதை அம்பேத்கரின் 'நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன்'.

(மாமேதை அம்பேத்கரின்  'நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன்' என்ற நூலை பற்றிய எனது பார்வை.
11/01/21 அன்று நான் முகநூலில் எழுதியது.
அதை இங்கு பதிவதில் மகிழ்கிறேன்..)

தமிழ் கூறும் நல்லுலகுக்கு வணக்கம்.... 

சமீபத்தில்தான் அம்பேத்கரின் 'நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன்', என்ற நூலை படித்தேன்... 
(இந்தத் தலைப்பில் அம்பேத்கர் நூல் ஏதும் எழுதவில்லையே என்று குழம்ப வேண்டாம். அம்பேத்கரின், மதம் மாற்றத்திற்கான அறிவிப்புகளையும், அதன் உள்ளார்ந்த தேவைகளையும் விளக்கி கூறும், அவருடைய மாநாட்டுப் பேருரைகளையும் கட்டுரைகளையும் தொகுத்து, அவரின் சபதமான "நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன்" என்பதையே தலைப்பாக கொடுத்து நூலாக தொகுத்து இருக்கிறது, தலித்முரசு .) 

தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாற வேண்டிய அவசியத்தையும், அதன் நியாயத்தையும் மிக விரிவாக ஒரு நியாயமான தளத்திலிருந்து, அதன்மீதான தத்துவ விசாரணையையும் வாதங்களையும் செய்திருக்கிறார் அம்பேத்கர் அவர்கள்.
இந்த நூலைப் படிக்கும் போது பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிவதுடன், தீண்டாமையின் உண்மையான வலி என்ன என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும். 
ஆனால் அது ஓரளவிற்குத் தான், அதன் முழுமையான வலியை உணர வேண்டுமென்றால் தீண்டத்தகாதவராகத்தான் பிறந்திருக்க வேண்டும், இல்லை என்றால் அது சாத்தியம் இல்லை.
எனினும், தீண்டாமைத் தீயில் குளிர் காய்ந்த சாதி இந்துக்கள், அதற்காக வருத்தப்பட முடியும்.
தீண்டாமை எந்தளவிற்கு பரவலாக, அதன் முழு வடிவிலான வீச்சின் தாக்கத்தை, ஒரு திரளான சமூக மக்கள் மீது ஏற்படுத்தி, அம்மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்வியலையும் கேள்விக்குறியாக்கி, தன்னம்பிக்கை இழக்கச் செய்து மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. 

இன்னும் சிலவும் காணக்கிடைக்கிறது... அம்பேத்கர் அவர்கள், இந்த தீண்டாமையை அதன் முழுவீச்சில் செயல்படுத்தியவர்கள் சாதி இந்துக்கள் தான் என  குறிப்பிடுகிறார்.
பல இடங்களில் சாதி இந்துக்களை கடுமையாக சாடுகிறார்.

அம்பேத்கர் கூறுகிறார்....
"சாதி இந்துக்கள் மனநிலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்ற முடிவுக்குத்தான் நாம் வரவேண்டியிருக்கிறது.
நம்முடைய தொடர்ச்சியான போராட்டத்திற்கு பிறகும் கூட, அவர்கள் நம்மோடு அன்பாக நடந்து கொள்ள தயாராக இல்லை"

"நாம் நமது உரிமைகளைப் பெற நடத்திய முயற்சிகளை, சாதி இந்துக்கள் - நாம் அவர்களின் மதத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதும் - நாடெங்கும் எத்தனை கொடூரமாக சிதைத்தார்கள் என்பதைக் குறிப்பிடவே எனக்கு வேதனையாக உள்ளது"

"இப்போராட்டம் ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினருடன் எப்படிப்பட்ட உறவைப் பேண வேண்டும் என்று வரையறுக்கிறது. நம்மையும் மற்றவர்களைப் போல சமமாக நடத்துங்கள் என்று நாம் குரலெழுப்பத் தொடங்கும் அந்த நொடியே இந்த போராட்டம் தொடங்கி விடுகிறது.
அப்படி இல்லையென்றால், போயும் போயும் நல்ல துணிமணி அணிவதற்கும், பொது கிணற்றில் நீர் எடுப்பதற்கும்,  பூணூல் அணிவதற்கும், உலோகப் பாத்திரத்தில் தண்ணீர் எடுப்பதற்கும், மாப்பிள்ளையை குதிரையில் அமர வைப்பதற்கும் என அற்ப காரணங்களுக்காக எல்லாம் இங்கே போராட்டங்கள் நடந்து கொண்டிருக்காது. அதுவும் இவை அனைத்தையும் நாம், நம் சொந்தப் பணத்தைக் கொண்டு நடத்துகிறோம். பின் எதற்காக சாதி இந்துக்கள் கோபப்பட வேண்டும்? 
அவர்கள் கோபத்திற்கான காரணம் மிக எளிமையானது. நாம் அவர்களுக்கு சமமாக நடந்து கொள்வது, அவர்களை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது"

என இவ்வாறாக பல இடங்களில் தீண்டாமையை கடைப்பிடித்தது சாதி இந்துக்கள் தான் எனக் கூறுகிறார்.

அதுபோல, தீண்டாமை என்பது தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள்ளும் கடைபிடிக்கப்பட்டது என்பதும் தெரிகிறது.
அவர் கூறுகிறார்....
"தீண்டத்தகாதவர்களுக்குள்ளேயே பல்வேறு சாதிப் பிரிவினைகளும் சாதிப் பாகுபாடுகளும் இருக்கின்றன. அதுமட்டுமல்ல அவர்களும் சாதியின் பெயரால் தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள். 'மகர்' களும் 'மாங்கு' களும் சேர்ந்து உண்பதில்லை, இந்த இரண்டு சாதியினரும் மலம் அள்ளுவோரை தொடுவதில்லை. அவர்களை தீண்டாமைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்" என்றும், இது சாதி இந்துக்களிடம் இருந்துதான் பரவியது என்றும் கூறுகிறார்.

மேலும், சாதி இந்துக்களால் கடைப்பிடிக்கப்பட்ட அதே தீண்டாமையை கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கூட கடைபிடித்தார்கள் என்றும் கூறுகிறார்..
அதைப் போல பார்சிகளும் கூட நடந்துகொண்டார்கள் என தன் சொந்த அனுபவத்தில் இருந்து கூறுகிறார்.
ஆனால், பார்ப்பன எதிர்ப்பாளர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு துரதிர்ஷ்டவசமாக, ஒரு இடத்திலும் பார்ப்பனர்களை தனித்து சாடவில்லை என்பதுதான் ஆச்சரியம். 
அதாவது, அவரின் பார்வையில் சாதி இந்துக்கள் என்பவர்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணத்திற்குள் அடங்கும் அத்தனை சாதியினரும் தானே தவிர, குறிப்பாக பிராமணர் எனும் குறிப்பிட்ட ஒரு வர்ணத்திற்குள் அடங்கும் பார்ப்பனர் என்பதாக இல்லை.

அதுபோல சாதியப் படிநிலைகளைத்தான் எதிர்க்கிறாரே தவிர சாதிகளை எதிர்க்கவில்லை. 
அதாவது வர்ணாசிரம கோட்பாட்டைத் தான் எதிர்க்கிறார், மாறாக சாதியமைப்புகளை எதிர்ப்பதாக எங்கேயும் இல்லை.. 
கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் அதில் அவருக்கு உடன்பாடு இருக்கிறது என்றே நாம் கொள்ளலாம்... 
அது என்னவென்று-குலங்களின் தொகுப்பென்று-அவர் தெளிவாகப் புரிந்து இருக்கிறார், அதை அழிக்க முடியாது என்பது மட்டுமல்லாமல் அதன் எதார்த்தத்தையும், தேவையையும் தெரிந்து வைத்திருக்கிறார். 

அதுபோல, மதங்களின் மீதான அவரின் பார்வை உண்மையில் விசாலமானது, எதார்த்தமானது, அறிவுப் பூர்வமானது, பகுத்தறிவானது.
அவர் எந்த இடத்திலும் மதம் என்பதற்கு எதிரானவராக இல்லை. 
மாறாக, உண்மையில் மதங்களை அவர் ஆதரிக்கிறார், அதன் தேவை என்ன என்று மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்.

அம்பேத்கர் கூறுகிறார்...
"மதம் என்பதைப் பற்றி பலரும் பலவிதமான விளக்கங்களை சொல்லியிருக்கிறார்கள். அத்தனை விளக்கங்களிலும், ஒரே ஒரு விளக்கம்தான் பொருள் உடையதாகவும் எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. 
மனிதனின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிற எதுவோ அதுவே மதம், அதுவே மதத்தின் உண்மையான பொருள் என்று சனாதான இந்துக்களின் முன்னணித் தலைவரான திரு பால கங்காதர திலகர் வழங்கிய விளக்கம், வாதத்திற்காக அல்ல உண்மையாகவே இந்த விளக்கத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒரு சமூக ஒழுங்குகள் வகுக்கப்பட்ட விதிகளே மதம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், மதம் பற்றிய என்னுடைய கருத்தும் அதுதான்."
என திகலகரின் மதம் பற்றிய பார்வையை சுட்டிக்காட்டுவதன் மூலமாகவும், 

"மதம் என்பது மனித வரலாற்றை உந்தித் தள்ளும் மிக வலிமையான விசை"
என்ற பேராசிரியர் டீலேயின் கூற்றை மேற்கோளாக சுட்டிக் காட்டுவதன் மூலமாகவும்,

"உயிரினங்களில் மனிதன் மட்டுமே மதம்சார்ந்த மிருகமாக இருக்கிறான். காரணம், புலன் சாராத தத்துவங்களைப் பற்றி சிந்திக்க கூடியவனாகவும், அவற்றை விசாரணைக்கு உட்படுத்துபவனாகவும் இருப்பதனால், அவன் மட்டுமே மதம் என்பதன் முழு அர்த்தத்தை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவனாக இருக்கிறான். அதனால்தான், தனக்கென வரித்துக்கொண்ட விழுமியங்களை மதத்தின் வழியாக எல்லோருக்குமானதாக  பொதுமைப்படுத்துவதற்கும், அப்படி செய்வதன் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கும் அவனால் முடிகிறது" 
" அரசு மற்றும் சட்டம் ஆகியவை இங்கே என்ன வகையான பணிகளை செய்கின்றனவோ, அதே பணியை தான் மதமும் செய்கிறது. அது ஒரு கருவி, அதன் துணைகொண்டு தான் இந்த சமூகத்தில் சமூக ஒழுங்கிற்கு, தனி மனிதருடைய நடத்தை கட்டுப்படுத்தப்படுகிறது. அது வெளிப்படையாக உணரப்படவிட்டாலும், சமூகம் அதன் வழியாகவே தனிமனிதர்களை கட்டுக்குள் வைக்கிறது என்பது உண்மை. இன்னும் சொல்லப்போனால் மதத்தோடு ஒப்பிடும் போது, அரசும் சட்டமும் சற்று ஆற்றல் போதாமையுள்ள கருவிகளே. சட்டம் ஒழுங்கு ஆகியவை செலுத்தும் அதிகாரங்கள், போதிய ஆழம் ஊடுருவிச் சென்று இந்த சமூகத்தை கட்டுக்குள் வைக்க கூடிய அளவிற்கு வலிமை உடையவை அல்ல" என்ற பேராசிரியர் சார்லஸ் எல்வுட் கூற்றை மேற்கோளாக சுட்டிக்காட்டுவதன் மூலமாகவும்,

"ஓர் இனத்தில் உள்ள மக்கள் குழு என்பது மனிதர்களால் மட்டுமே ஆக்கப்படுவது இல்லை, அது கடவுளர்களையும் உள்ளடக்கியது. யாரேனும் வேற்று மனிதர் அந்த குழுவுடன் இணைந்து ஒட்டுறவை உருவாக்கிக் கொள்ள விரும்பினால், அந்த குழுவின் கடவுளையோ கடவுளர்களையோ ஏற்றுக் கொண்டால் மட்டுமே அது நிறைவேறும்" என்ற பேராசிரியர் ராபர்ட்சன் ஸ்மித் அவர்களின் கூற்றை மேற்கோளாக சுட்டிக்காட்டுவதன் மூலமாகவும் மதத்தின் அவசியத்தை உணர்த்துகிறார்.

"பணக்காரர்களுக்கும், வர்க்கத்தின் மேல்தட்டில் உள்ள சாதி இந்துக்களுக்கும் வேண்டுமானால் மதம் தேவை இல்லாமல் இருக்கலாம், ஆனால் அடித்தட்டு மக்களுக்கும் ஏழைகளுக்கும் மதம் எவ்வளவு முக்கியம் என்பதை நான் நன்றாக அறிவேன்" எனக் கூறுவதன் மூலமாக, தங்களை முற்போக்குவாதிகளாக - மதசார்பற்றவர்களாக காட்டிக்கொண்டோர்க்கு, மறைமுகமாக குட்டு வைக்கிறார்.

இவ்வாறாக, 
மானுடவியலாளர்கள், மதவியலாளர்களின் துணையோடு,
பல்வேறு மனித குலத்தின் விழுமியங்களை ஒருமைப்படுத்தவும், பொதுமைபடுத்தவும் மதம் எவ்வளவு சிறப்பான பாத்திரம் வகிக்கிறது என்பதை விளக்குகிறார். அதேவேளையில், மதத்தையும் இறையியலையும் தனித்தனியாக வேறுபடுத்திப் பார்க்கிறார். இரு வேறு தளங்கள், ஆனால் ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்ட தளங்களாக - இன்றைய - மதம் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறார். 

மதம் இல்லாமல் இறையியலும், இறையியல் இல்லாமல் மதமும் தனித்தனியாக செயல்பட முடியும். ஆனால், மனித குலத்தின் விழுமியங்களை பொதுமைப்படுத்தவும், அதன்மூலம் மனித குலத்தின் வளர்ச்சியை கைகொள்ளவும், மதம் கைக்கொள்ளும் கருவியே இறையியல் என்று விளக்குகிறார். 
இதிலிருந்து அவர் சிந்தனையில் மதம் என்பதற்கு எந்தளவிற்கு முக்கியமான ஒரு இடம் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவு. ஆனால், இறையியல் என்பதை அவர் எந்த அளவிற்கு ஏற்கிறார் என்பது கேள்விக்குறிதான் அல்லது மறுக்கிறார் என கூட சொல்லி விடலாம் ஆனால் அவ்வளவு அழுத்தம் திருத்தமாக அல்ல.

ஏனெனில், இந்நூல் முழுமையிலும் சாதியப் படிநிலைகளைத்தான் தான் சாடுகிறாரே தவிர எந்தவொரு இடத்திலும் மதங்களைப் பற்றியோ, சடங்கு சம்பிரதாயங்களை பற்றியோ, மட்டுமல்லாமல் இறையியலை பற்றியோ கூட அவர் சாடவில்லை என்பதை வைத்துப் பார்க்கும்போது, இறையியலில் அவருக்கு பெரிய நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், ஆனால் இறையியல் மீதான ஒரு வெறுப்புணர்ச்சி இருப்பதாக தெரியவில்லை.

அவர் விவரித்திருக்கும் அளவிற்கு, அதன் தத்துவார்த்த அடிப்படையில் இந்து மதம் இல்லை எனத்தான் சாடுகிறார்.
அதற்கு காரணமாக, தீண்டாமையை மட்டுமல்ல சாதிய படிநிலைகளையும் சாடுகிறார்.
இந்நூல் முழுமையிலும் இந்து மதத்தை கடுமையாக விமர்சிக்கவும், எதிர்க்கவும் அவர் உபயோகித்திருக்கும் உண்மையான பலமான ஆயுதம் வர்ணாசிமக் கோட்பாடு என்றால் அது மிகையாகாது.
ஒரு இடத்தில் மட்டும், அவரின் மாண்புக்கும் அறிவாற்றலுக்கும் மாறாக, இந்து மத கடவுள்களை விமர்சித்திருக்கிறார்.
இது அவரிடமிருந்து தோன்றிய கருத்துக்களாக கருத, மனம் மறுக்கிறது.

இந்து மதத்திலிருந்து வேறு எந்த மதத்திற்கு மாறுவது என்ற நிலை வரும்போது (அவரே அந்நூலில் கூறியுள்ளபடி,  இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டிருப்பதாலும், கிறுஸ்துவம் ஆட்சி பீடத்தின் மூலம் பரப்பப்பட்டிருப்பதாலும்) மதம் என்பது அதன் உள்ளார்ந்த தத்துவத்தால் தன்னெழுச்சியாக பரவியதாக, சமூக சமன்பாடு கொண்டதாக இருப்பதாக-அவர் கருதுகிற-பெளத்தத்தை தேர்ந்தெடுத்திருப்பதை அறிய முடிகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களை நோக்கி அவர் கூறுகிறார்....
"இந்து மதத்துடனான உங்கள் தொடர்பை துண்டித்து விட்டு வேறு ஏதேனும் மதத்தை தழுவுங்கள் என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். ஆனால் அப்படியான ஒரு புதிய நம்பிக்கையை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருங்கள். நம்மை சரிசமமாக நடத்துவதிலும், சமமான நிலையையும் வாய்ப்புகளையும் வழங்குவதிலும் எவ்வித தடையுமின்றி அம்மதத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கவனியுங்கள்"

தன் மதம் மாறும் முடிவை எதிர்ப்பவர்களுக்கு மிக நீண்ட விளக்கங்களை பல இடங்களில் தந்திருக்கிறார். 
இதன் மூலம், அம்பேத்கர் மதம் மாறுவதற்கு அன்றைய தலைவர்களும், இந்து மத ஆன்மீகவாதிகளும் அனுமதிக்கவில்லை என்பது தெரிகிறது. 
இப்படியான ஒரு மேதை இந்து மதத்தை விட்டு வெளியேறுவது அவர்களுக்கு அதிருப்தியை தந்திருப்பதை உணர முடிகிறது.
ஆனால், அவ்வாறானவர்களுக்கு எதிராக அவர் வைக்கும் வாதங்களுக்கு, உண்மையில் அவர்களால் மட்டுமல்ல-அவர் கூறுவதுபடியே-எந்த இந்துவாலும் பதில் கூற முடியாதுதான்.
அம்பேத்கர் கேட்கிறார்...
"உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாட்டால், சில சமூகங்களுக்கிடையே திருமண உறவு மறுக்கப்படுவதும், சேர்ந்து உண்பது தவிர்க்கப்படுவதும், உலகில் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது, ஆனால் தொட்டால் தீட்டு என்பது, இந்து மதத்தை தவிர வேறு எங்காவது உண்டா?"
"தீண்டத்தகாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்று பல்வேறு அரசியல் சட்ட உரிமைகளை கிடைத்திருப்பது உண்மைதான் என்றாலும், அதனால் அதன் முழு பயனையும் அடைய முடியுமா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். சாதி இந்துக்களின் மனதில் தீண்டாமை ஆழமாக வேரூன்றி இருக்கும் பொழுது,
அதே மக்களுடன் இணைந்து எவ்வாறு இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்தி முன்னேற முடியும்? 
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் சிலர் கூட, நீங்கள் மேன்மையாக நடந்து கொள்ளவும் படிக்கவும் வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்கள். ஆனால் நட்புறவுடன் சந்திக்கும் இரு இந்துக்களில், ஒருவர் தாழ்த்தப்பட்டவர் என்று தெரிந்த உடனேயே அவர் எவ்வளவு கனிவானவர் என்றாலும் படித்தவர் என்றாலும் உடனடியாக வெறுப்புணர்ச்சி வந்து விடுகிறது என்பதை என் சொந்த அனுபவத்தில் இருந்தே கூறுகிறேன்"

இப்படி ஒரு எதார்த்தமான, ஆழமான, விசாலமான தத்துவத் தளத்தில் பயணிக்கும் இந்த நூலுக்கு திருஷ்டி பூசணிக்காயாய், ஈ.வே. ராமசாமி நாயக்கரின் (அம்பேத்கரின் மதம் மாறும் தீர்மானத்தை வரவேற்று எழுதிய) தலையங்கத்தை பின்னிணைப்பாக இணைத்திருப்பது முரண்நகையைத்தான் வரவழைக்கிறது. 
இந்த நூலில் தொகுக்கப் பட்டிருக்கும் பேருரைகளிலும் கட்டுரைகளிலும் அம்பேத்கர், எந்த ஒரு இடத்திலும் - மருந்துக்குகூட - ஈ.வே ராமசாமி நாயக்கரை குறிப்பிடாத போது (அம்பேத்கர் அவர்கள் இந்த நூலில் பல இடங்களில் மானுடவியலாளர்கள் மதவியலாளர்களை மேற்கோள் காட்டியிருக்கிறார், சனாதன தர்மத்தின் அடையாளமாக -அவரால்- கருதப்பட்ட திலகரை கூட பாராட்டியிருக்கிறார், தமிழக தலித் தலைவரான எம் சி ராஜா அவர்களுக்கு எதிரான ஒரு கண்டன அறிக்கையில், தன்னை ஆதரிக்கும் சங்கராச்சாரியாரை கூட குறிப்பிடுகிறார். ஆனால் எந்த ஒரு இடத்திலும் ஈ.வே. ராமசாமி நாயக்கரை குறிப்பிடவில்லை.
இத்தனைக்கும் அந்த கண்டன அறிக்கை, ஈ.வே.ராவின் தலையங்கத்திற்கு ஒரு வருடம் கழித்து வெளியானது) 

இந்த நூலுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல், ஈ.வே.ராமசாமி நாயக்கரை  இதற்குள் உள்ளிழுத்திருப்பது என்பது  அதிகப்பிரசங்கித்தனம். 
அல்லது அம்பேத்கருக்கு அடையாளம் கொடுப்பதற்காக என நினைத்துக்கொண்டு அவரை சேர்த்திருப்பது, அறியாமையால் அம்பேத்கருக்கு நிகழ்த்தப்பட்ட இழுக்கு.
அதுமட்டுமல்லாமல் அம்பேத்கருக்கும், ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும் கொள்கை அளவில் எந்தவித சம்பந்தமும் இருப்பதாக இல்லை. 
அம்பேத்கர் உரைத்தது சாதியப் படிநிலை ஒழிப்பு, ஈவே ராமசாமி நாயக்கர் உரைத்தது சாதி ஒழிப்பு. 
அம்பேத்கருக்கு மதம் தேவைப்படுகிறது, ஆனால் ஈவே ராமசாமி நாயக்கர் அது தேவை இல்லை என கூறுகிறார். 
அம்பேத்கர் கடவுள் மறுப்புக் கொள்கையில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லாதவர், ஆனால் ஈ.வே ராமசாமி நாயக்கர் தன்னை ஒரு தீவிர கடவுள் மறுப்புக் கொள்கையாளராக காட்டிக் கொள்கிறவர்.
அம்பேத்கர் வளர்த்தெடுக்க நினைத்தது சாதி இந்துக்களின் பஞ்சமர் குறித்தான மனநிலைக்கு  எதிரான நிலை, ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் வளர்த்தெடுக்க நினைத்தது பிராமணர்கள் மீதான வெறுப்புணர்ச்சி. இவ்வாறு எவ்வித சம்பந்தமும் இல்லாத இவர்களை ஏன் ஒரு இடத்தில் முடிச்சு போட வேண்டும்? இவர்கள்தான் இவ்வாறான ஒரு இழுக்கை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றால், அதைவிட மோசமாக அந்தத் தலையங்கமே அம்பேத்கரின் மதிப்பை குறைத்து காட்டுகிறது.

அந்த தலையங்கத்தில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்...
" தோழர் அம்பேத்கர் அவர்கள் பேசியிருக்கும் பேச்சும், பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மாநாட்டில் தீர்மானித்திருக்கும் தீர்மானமும் புதிதல்ல, அல்லது அவர்களே முதல்முதலில் கண்டுபிடித்த சொந்தக் கருத்தும் அல்ல. ஏனெனில் இந்து மதத்தை, பார்ப்பனரல்லாத மக்கள் விட்டுவிட வேண்டும் என்றும், யாரும் தங்களை இந்துக்கள் என்று சொல்லி கூடாது என்றும் சுயமரியாதை இயக்கமானது 1925 முதல் கூறிவருகிறது"...
அதாவது ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ன சொல்ல வருகிறாரென்றால், அம்பேத்கரின் இந்த முடிவு சுயமரியாதை இயக்கத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதாம். அவருக்கென சுய சிந்தனையும் சுய பாதையும் இல்லையாம்.
அவர் சொல்படி அம்பேத்கர் செயல்பட்டதாக மறைமுகமாக சொல்கிறார்.

மேலும் சொல்கிறார்...
"ஈ வே ராமசாமி ஆகிய நான் தீண்டப்படாத வகுப்பு என்பதை சேர்ந்தவர் அல்ல என்று சொல்லப்பட்டாலும் நான் சாகும்போது இந்துவாய் சாகப் போவதில்லை என்று சுமார் 10 வருடங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறேன்"...
மானஸ்தன் அம்பேத்கர் சொன்னதை 20 வருடங்களில் செய்துவிட்டார்.
ஆனால் பாவம், அவருக்கு 10 வருடங்களுக்கு முன்பே சூளுரைத்ததாக தம்பட்டம் அடித்த ஈ.வே.ராமசாமி நாயக்கரால் 48 வருடங்கள் கழித்தும், மரண தருவாயில் கூட செய்ய முடியவில்லை.
(இந்து மதம் அம்பேத்கரை போன்ற மேதையை இழந்ததற்கு பதிலாக ஈ.வே. ராமசாமி நாயக்கர் போன்ற புல்லுருவிகளை இழந்திருக்கலாம்.)
இந்த லட்சணத்தில் அவருக்கு இவர் அறிவுரை வேறு கூறுகிறார் " பார்ப்னர்கள் சூழ்ச்சியில் சிக்கி, அம்பேத்கர் தன் முடிவில் இருந்து பின் வாங்க கூடாது"என.
அம்பேத்கர் சாடியது சாதி இந்துவான தன்னையும் சேர்த்துதான் என்பதைக்கூட புரிந்துக்கொள்ள முடியாமல், அப்போதும் பார்ப்பனர்களை குறைகூறிக் கொண்டு, பார்ப்பன வெறுப்புணர்ச்சியை பரப்பிக்கொண்டிருந்தார், பகுத்தறிவு பகலவன் என தன் தொண்டரடிப்பொடியார்களால் கொண்டாடப்பட்ட ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்பது கேலிக்கூத்து. 

சரி, அது செல்க....
இந்த நூலில் சில மாற்றுக்கருத்துக்கள் இல்லாமலும் இல்லை, அவை....

"இந்துக்கள் மட்டுமே நம்மை தாழ்வாக நடத்துகிறார்கள் என்று சொல்வதும் சரி இல்லை, கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் கூட நம்மை தாழ்விலும் தாழ்வாகத் தான் நடத்துகிறார்கள். உண்மையில் கிறிஸ்தவமும் இஸ்லாமும் உயர்வு தாழ்வுகளை கற்பிப்பதில்லை, ஆனாலும் ஏன் இந்த இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்களும் நம்மை தாழ்வாக நடத்துகிறார்கள்? காரணம் ஒன்றே ஒன்றுதான், இந்துக்கள் நம்மை தாழ்வாக நடத்தும் காரணத்தினால்தான் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் கூட நம்மை அப்படியே நடத்துகிறார்கள். 
நம்மை சமமாக நடத்தினால், எங்கே இந்துக்கள் நம்மோடு சேர்த்து அவர்களையும் அவ்வாறு தாழ்வாக நடத்துவார்களோ என்று அச்சப்பட்டு அவர்களும் தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள்"
என இத்தீண்டாமை இந்துக்களிடமிருந்தே கிறுஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பரவியது என்கிறார்.
அப்படியென்றால், சகோதரத்துவ சமன்பாடு கொண்ட மதங்கள் என்று கூறப்படுகிற கிறுஸ்துவமும் இஸ்லாமும், அதற்கென தனித்தன்மை இல்லாமல் இந்து மத கோட்பாடுகளை சார்ந்து நிற்கவேண்டியிருந்ததா? அல்லது, சகோதத்துவ சமன்பாடு என்பதெல்லாம் தன்னளவில் மட்டும்தானே தவிர பிற மதங்களுடன் இல்லையா? அல்லது, சாதி இந்துக்கள் கடைபிடித்த தீண்டாமையின் அனுகூலங்களை மிகச்சரியாக புரிந்துகொண்டு அவர்களும் அதனை பயன்படுத்திக்கொண்டார்களா? என்ற கேள்விகளை எழுப்பிப்பார்த்து, அவர் விடைகாண முயலவில்லை.

அதுபோல, 
இந்தியாவில் புத்த மதத்தின் வீழ்ச்சியை பற்றி குறிப்பிடும்போது, "சமீப கால வரலாற்றில் இஸ்லாமிய படையெடுப்பாளர்களால், புத்த மதத்தின் கலங்கரை விளக்கங்களாக இருந்த புத்த வியாரங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதன் மூலமாக புத்த மதம் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டது" என்றும், "அதேவேளை புத்தரின் காலத்திலேயே அதை அழிக்கும் வேளைகளில் பார்ப்பன மதம் சதி செய்தது" என்றும் கூறுகிறார்.
அதற்கு காரணியாக கிருஷ்னரின் கீதாவுபதேசத்தின் மைய கருத்தான 'குணகர்மா' வை கைகாட்டுகிறார்.
"சதுர்வர்ண பாகுபாட்டை எதிர்த்து எழுந்து வளர்ந்த புத்த மதத்தை சமாளிக்கவே குண கர்மா பயன்படுத்தப்பட்டது.
அது எதர்த்தமாகவும், கவர்ச்சியானதாகவும், போற்றப்படுபவதாகவும், பிற மதத்தினர் கூட ஏற்றக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது.
ஆனால் இந்த குண கர்மா ஒன்றும் புதிதல்ல, கபிலர் வகுத்த சாங்கிய தத்துவத்தையே கிருஷ்னர் கையாண்டு இருக்கிறார்" என்கிறார் அம்பேத்கர்.
இதன் மூலம் ஒரு கேள்வி எழுகிறது.
குணகர்மா என்பது வர்ணத்தின் சாராம்சம்.
வர்ணம் பற்றி ரிக்வேதம் மண்டலம் 10:90 கூறுகிறது.
அப்படியென்றால்
வர்ணத்தில் இருந்து வர்ணாசிரமம் தோன்றியதா? அல்லது, வர்ணாசிரமத்தில் இருந்து வர்ணம் தோன்றியதா?
வர்ணம் முதலிலா? அல்லது,
வர்ணாசிரமம் முதலிலா?
வர்ணத்தை போத்தித்த ஸ்ருதி முதலிலா? அல்லது,
வர்ணாசிரமத்தை போதித்த ஸ்மிருதி முதலிலா?
வேதங்கள் என்கிற ஸ்ருதி என்கிற பாடங்கள் முதலிலா? அல்லது,
மகாபாரதம் என்கிற ஸ்மிருதி என்கிற பாடத்தின் கையேடு முதலிலா? 
ஒருவேளை ஸ்மிரிதி முதலில் என்று கொண்டால், வர்ணாசிமரத்தில் இருந்து தோன்றியிருக்க வேண்டிய பின்னொரு பாதியான ஆசிரமம் என்பது தனித்திருக்க வேண்டும் அல்லவா? 
அப்படியான ஒன்று எங்கே?
மகாபாரதம் புத்தருக்குப்பின் இயற்றப்பட்டதா?
புத்தரின் காலம் என்ன?
மகாபாரத்தின் காலம் என்ன? 
இவற்றை ஆராய்ந்து, அம்பேத்கர்  விடைகாண முயலவில்லை.

ஒருவகையில், அம்பேத்கர் சொல்வது உண்மையாகத்தான் இருக்கிறது.
ஆனால் அவர் கைகாட்டும் திசையிலிருந்தும், தூரத்திலிருந்தும் விலகி, மாறுபட்ட திசையிலும் தூரத்திலும் உண்மையாக இருக்கிறது.
கீதையின் 'குணகர்மா', வர்ணாசிரமத்தால் எழுந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில்,  வேதத்தில் இருக்கும் வர்ணத்தை சுட்டிக்காட்டுவதாக-வர்ணாசிரமத்தை குட்டிக்காட்டுவதாக-வேறு திசையிலும், அது புத்தரின் வெகு காலத்திற்கு முற்பட்டதாக அதிக தூரத்திலுமாக அந்த உண்மையாக இருக்கிறது.

இவை போல சில மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், அறிவார்ந்த அம்பேத்கர் அவர்கள், இவற்றை சரிவர ஆராய்ந்து பார்க்கமுடியாமல் போனதற்கு, வர்ணாசிரமம் விளைவித்த தீண்டாமையின் கோரப்பிடியில் விளைந்த காழ்ப்புணர்ச்சியே, அவரின் அறிவுக் கண்களை (குறிப்பாக இந்துமதம் சார்ந்த) சில இடங்களில் மறைத்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
தன்னுடைய அறிவார்ந்த பண்புகளால் பிராமணர் என்ற வர்ண நிலையை அடைந்திருக்கவேண்டியவரை, பிறப்பின் அடிப்படையில் தீண்டத்தகாதவராக ஆக்கி, தனக்கு தானே சூடு போட்டுக்கொண்டார், வர்ணாசிரம கோட்பாட்டை வகுத்த மநு.
அம்பேத்கர், காழ்ப்புணர்ச்சி இல்லாமல் இந்துமதத்தை ஆய்வு செய்திருந்தால், அவரின் அறிவாற்றலாலும் அதன் கூர்மையாலும் ஒரு புதிய வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருக்கும்.
அம்பேத்கரை இழந்தது மட்டுமல்லாமல், அவரை இந்து மதத்திற்கு எதிராக திருப்பிய பெருமை மநுவையும், அவரின் 'பிறப்பின் அடிப்படையில்' கோட்பாட்டை முழுவீச்சில் செயற்படுத்தி தன்னலம் பேணிய ஒட்டுமொத்த சாதி இந்துக்களையும் சாரும்....

வர்ணம் மற்றும் ஆசிரமம் எனும் அருமையான இருவேறு தத்துவார்த்த கோட்பாடுகளை, 'பிறப்பின் அடிப்படை' என்ற கூட்டுக்குள் அடைத்து, அவற்றை பலி கொடுத்தது மநு என்றால், காலத்திற்கேற்ப மாறக்கூடிய, மாற்றப்படவேண்டிய -மனுதர்ம-ஸ்மிருதியை மாற்றாமல் உயிர்ப்புடன் வைத்திருந்து, அவற்றுக்கு சமாதி கட்டியவர்கள் சாதி இந்துக்கள் என்பதை மறுக்க முடியாது.

நான் படித்த வரையில் (புரிந்துகொண்ட வரையில்) மனுதர்மத்தில், ஆங்காங்கே எந்தளவிற்கு வாழ்வியலின் அறம் மணம் கமழ்வது உண்மையோ, அதே அளவிற்கு பிறப்பின் அடிப்படையிலான வர்க்க பாகுபாட்டின் நெடி வீசுவதும் உண்மை.

(அம்பேத்கர் தீவிர கடவுள் மறுப்பு கொள்கையாளர் இல்லை, சாதிய படிநிலைகளுக்கு எதிரானவரே தவிர சாதிகளுக்கு இல்லை, மதம் என்ற சமூக அமைப்பை ஏற்கிறார், ஒரு இடத்தில் மார்க்சியவாதிகளை நையாண்டி செய்வதன் மூலம் மார்க்சிய கருத்துக்களை ஏற்கவில்லை என்பது புலனாகிறது.
ஆனால், எவ்வாறு அம்பேத்கரியவாதிகளும், மார்க்சியவாதிகளும், ஈ.வே.ரா வாதிகளும் ஒரே அணியாக, அம்பேத்கர் நிராகரித்த  - புதிய மதம் ஏற்பதிலிருந்து - கிறுஸ்துவ இஸ்லாமிய மதத்தினரோடு சேர்ந்துக்கொண்டு இந்துக்களை எதிர்க்கிறார்கள்????!!!!!
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாடா???!!!
இப்படியொரு கேவலமான சதித்திட்டத்தை, அம்பேத்கர் அவர்கள் எந்த ஒரு இடத்திலும் அறிவுறுத்தி இருக்கவில்லையே???!!!) 

அனைவரும் படிக்க வேண்டிய ஒரு அற்புதமான நூல் இது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

                             -மதன்கார்த்திக்
                                புதுச்சேரி.

(பின்குறிப்பு :- இப்பதிவில் நான் வெளிப்படுத்தியிருக்கும் பார்வை என்பது, 'நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன் " என்ற குறிப்பிட்ட  நூலை பற்றியதே.
அம்பேத்கரின் நூல்களை படித்ததில்லை என்பதால் வேறு ஏதேனும் நூலில் வேறு ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை.
அதனால் எனது கருத்துக்கள் அனைத்தும் இந்த நூலை பற்றியதே.
அம்பேத்கரின் 'இந்து மதம்' என்ற நூலையும் 'பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை என்ற நூலையும் கிடைத்தால் படிக்க ஆவலாக உள்ளேன்.)

Comments

Popular posts from this blog

#இஸ்ரேல்

கேரளாவின் சேரமான் ஜும்மா பள்ளிவாசல் கி.பி. 612ல் கட்டப்பட்டதா?!