#இஸ்ரேல்

இஸ்ரேல்/ISRAEL
                    ___________________________

   தேசம் : பிரதேசம் : பிறதேசம் 

இஸ்ரேல் எவ்வாறு யூதர்களின் தேசமானது என்பதை 'தேசம்' எனும் தலைப்பிலும், எவ்வாறு மூன்று மதங்களின் புனிதத்தலமானது என்பதை 'பிரதேசம்' எனும் தலைப்பிலும், யூதர்களின் வெளியேற்றம்-குடியேற்றம், விளைவு-பின்விளைவு, அவற்றில் பின்னிப்பிணையும் அரசியல்-மத அரசியல் ஆகியவற்றை 'பிறதேசம்'  எனும் தலைப்பிலும் வரலாற்று அறிவியலோடு இக்கட்டுரை தொடரில் விரிவாக விவரிக்க முயல்கிறேன்...

(முன்குறிப்பு: நிச்சயமாக இதுவும் மிக நீளமான கட்டுரைதான். 
இது எனது 17 நாட்கள் கடின உழைப்பில் விளைந்தவை. 'என் கடின உழைப்பு' என்பதற்காக வாசகர்கள் படிக்க வேண்டும் என்பதில்லை. இஸ்ரேல் பற்றிய உண்மையை தெரிந்துகொள்ள ஆர்வமுடையோர் படிக்கலாம். மற்றவர், செய்தி ஊடகங்களும் யூடியுபர்களும் கூறும் தற்குறித்தனமான செய்திகளையே உன்மையென நம்பிக்கொண்டு அவரவர் வேலையை கவனிக்க போய்விடலாம். 
இக்கட்டுரையில் கூறப்படாமல் விடுபட்ட தக்க சான்றாவணம் ஏதேனும் இருந்தால், அவை வரவேற்கப்படுகிறது.)
 
                     அத்தியாயம் : 1 
                              தேசம்: 

( ஆய்வுக்குப் புகும் முன்.... 
ஆய்வுக்கு அத்தியாவசியமாக இருப்பதால், தோரா/பைபிளின் பழைய ஏற்பாட்டை, எந்திரன் பட சிட்டி ரோபோ புத்தகத்தை புரட்டுவதை போல் புரட்டிவிடலாம்) 

" ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்" 
என்பதையெல்லாம் கடந்து ஆதாம்-ஏவாளின் 19ஆவது தலைமுறையான ஆபிரகாம் காலத்திற்கு வந்துவிடலாம்..
ஆபிரகாம், ஊர் அல்லது கல்தேயர் எனும் நகரிலிருந்து (பண்டைய மெசப்படோமியா-இன்றைய ஈராக்கில் அன்றைக்கு இருந்த ஒரு நாடு) கானான் எனும் நாட்டில் குடியேறி வாழ்ந்து வருகிறார். அவருடைய 86வது வயதுவரை அவருக்கு குழந்தை இல்லை. 
ஆபிரகாம் இதுகுறித்து இறைவனிடம் மன்றாடுகிறார். 
இறைவன், ஆபிரகாமுக்கு சில வாக்குறுதிகளை கொடுத்து சில உடன்படிக்கைகளையும் செய்துகொள்கிறார்.
அவற்றில் முக்கியமானவை :-
# உன் வம்சாவழியினரை வான் நட்சத்திரங்ளை போன்று பல்கி பெறுகச்செய்வேன்.
# நீ எழுந்து நடக்கும் இந்த  நிலங்களையெல்லாம் (கானான் தேசம்) உனக்கு உடமையாக்குவேன்.
# உலகில் அனைவரும், உன் வழியாகவே ஆசிர்வதித்துக்கொள்வர்.
# நான் ஒருவனே இறைவன், என் ஒருவனையே உன் வம்சாவழியினர் தொழ வேண்டும்.
# உன் வம்சாவழியினர் அனைவரும் விருத்தசேதனம் செய்துக்கொள்ள வேண்டும்.

ஆபிரகாமின் மனைவி சாரா, தனக்கு குழந்தை பாக்கியம் இல்லையென கருதி, தன் பணிப்பெண்ணான ஆகார் (எகிப்து நாட்டவர்) உடன் உறவு கொண்டு வம்சவிருக்தி பெறுமாறு கூறுகிறார். ஆபிரகாமும் ஆகாருடன் உறவு கொண்டு ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து அதற்கு இஸ்மாயில் எனப் பெயரிடுகிறார்கள்.
குழந்தை பெற்றெடுத்த ஆகார், சாராவின் மலட்டுத்தன்மையை சாக்கிட்டு, அவரை ஏளனம் செய்கிறார்.
சாரா இது குறித்து வேதனைடைய, ஆபிரகாம் மீண்டும் இறைவனிடம் வேண்டி, தன் மனைவி சாரா மூலமாக மற்றொரு குழந்தையை தன்னுடைய 99வது வயதில் பெறுகிறார். 
அதற்கு ஈசாக் என பெயரிடுகிறார்கள்.
ஆபிரகாம், தனக்கும் தன் குழந்தைகளுக்கும் மற்றும் உறவினர்கள் வேலையாட்கள் என தனக்கு உரிமையுள்ள அனைத்து ஆண்களுக்கும், கடவுளிடம் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி விருத்தசேதனம் செய்விக்கிறார்.

சாரா, தன் மகன் ஈசாக்குக்கு பங்காளியாக (தன் பணிப்பெண் ஆகாரின் மகன்) இஸ்மாயில் வந்துவிடக்கூடாது எனக் கருதி, தன் மனைவி அந்தஸ்த்தை பயன்படுத்தி, ஆகாரையும் இஸ்மாயிலையும் வீட்டைவிட்டு வெளியேற்றி விடுகிறார்.
ஆகாரும் இஸ்மாயிலும் பாரோன்  பாலைவனத்தில் (இன்றைய சீனாய் தீபகற்பம்) குடியேறுகிறார்கள். இஸ்மாயிலுக்கும் எகிப்திய பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது.
ஈசாக்கும் அவரின் அத்தை பெண்ணிற்கும் திருமணம் நடக்கிறது.
நிற்க...
ஆபிரகாமுக்கும் அவர் மனைவியின் பணிப்பெண் ஆகாருக்கும் பிறந்த குழந்தையான இஸ்மாயிலின் வம்சாவழியினர்கள்-இஸ்மாயிலியர்கள் அல்லது அரேபியர்கள்.
(பிற்பாடு இஸ்லாமியர்கள்) 
ஆபிரகாமுக்கும் அவர் மனைவி சாராவுக்கும் பிறந்த குழந்தையான ஈசாக்கின் வம்சாவழியினர்- எபிரேயர்கள். (பிற்பாடு இஸ்ரயேலர்கள் அல்லது யூதர்கள்) 
ஆபிரகாமுக்கு மேலும் பல குழந்தைகள் பிறந்தனர், ஆனால் அவர்கள் ஒரு பொருட்டல்ல...

ஆபிரகாமின் மகனான ஈசாக்குக்கும் நீண்டநாட்களாக குழந்தை இல்லை. பிறகு அவர் மனைவி ரெபேக்கா கருவுருகிறார். அவர் வயிற்றில் பெரிய பிரளயமே ஏற்பட, ஈசாக் கடவுளை தொழுகிறார். அவர்முன் அசிரீரியாக தோன்றிய கடவுள் "உன் மனைவியின் கருப்பையில் இரண்டு இனங்கள் உள்ளன, ஒன்று மற்றொன்றைவிட வலிமைமிக்கதாக இருக்கும், மூத்தவன் இளையவனுக்கு பணிந்து இருப்பான்" எனக் கூறுகிறார்.

முதலில் ஏசா பிறந்தான், அவன் குதிக்காலை பற்றியப்படியே யாக்கோபு பிறந்தான். (இரட்டை குழந்தைகள்)
ஏசா 'வேட்டையாடியாக' அப்பா செல்லமாகவும், யாக்கோபு அம்மா செல்லமாகவும் வளர்கிறார்கள்.
ஒருதருணத்தில் யாக்கோபு, தன் அண்ணன் ஏசாவை போல் நடித்து, தந்தையை ஏமாற்றி அவரின் இறுதிக்கால ஆசிர்வாதத்தை பெற்றுவிடுகிறார்.
இதையறிந்த (ஏற்கனவே வேறொரு தருணத்தில் ஏமாற்றப்பட்டிருத்த) ஏசா கோபம் அடைகிறார். அவரிடமிருந்து தப்பித்து, காரானிலிலுள்ள (இன்றைய துருக்கியின் ஒரு பகுதி) தன் தாய்மாமன் வீட்டிற்கு சென்று விடுகிறார் யாக்கோபு. அங்கு தன் தாய்மாமன் மகள்கள் இருவரையும் திருமணம் செய்துகொள்கிறார். தன் இரு மனைவிகள், அவர்களின் பணிப்பெண்கள் இருவர் என நான்கு பேர் மூலமாக பதிமூன்று  குழந்தைகளை பெறுகிறார் யாக்கோபு.
(12 ஆண்குழந்தைகள் + 1 பெண் குழந்தை. பார்க்க படம்-1)
அதில் இரண்டு குழந்தைகளின் பெயர்களை மட்டும் பார்த்துவிடலாம். ஒருவர் லேவி/Levi மற்றொருவர் யோசேப்பு/Joseph.
ஒருதருணத்தில் கடவுளிடம் (கடவுள் என தெரியாமல்தான்) மல்யுத்தம் செய்கிறார் யாக்கோபு. யாருக்கும் வெற்றி தோல்வியில்லை. பிறகு தன்னை யார் என வெளிப்படுத்திய கடவுள், ஏமாற்றுபவர் எனப் பொருள்படும்படியான யாக்கோபு  என்ற பெயரை மாற்றி, இஸ்ரயேல் (கடவுளிடம் போராடுபவன் எனப் பொருள்படுமாறு) எனப் பெயரிடுவதோடு கானான் தேசத்தையும் வாக்களித்து ஆசிர்வதிக்கிறார்.
நிற்க...
இத்தருணத்தில் இருந்து  யாக்கோப், இஸ்ரயேல் எனவும் அவரது வம்சாவழியினர், இஸ்ரயேலர்கள் என வழங்கப்படுகின்றனர்.

இஸ்ரயேலின் 11 மகன்களும் சேர்ந்து சதி செய்து, தங்கள் சகோதரனான Joseph/யோசேப்பை, இஸ்மாயிலிய (இஸ்மாயிலின் வம்சாவழியினர்-அரேபியர்கள்) வியாபாரிகளிடம் விற்றுவிட்டு, தங்கள் தந்தையிடம் யோசேப்பு மிருகங்கள் தாக்கி இறந்துவிட்டதாக கூறிவிடுகிறார்கள்.
இஸ்மாயிலிய வியாபாரிகள், யோசேப்பை எகிப்திய ஆச்சாரியரான போத்திபார் என்பவரிடம் விற்றுவிடுகிறார்கள்.
தன் திறமையால் போத்திபாரின் தலைமை பணியாளராக உயரும் யோசேப்பு, போத்திபார் மனைவியின் பொய்-பாலியல் குற்றச்சாட்டால் சிறையில் அடைக்கப்படுகிறார்.
அங்கு ஏற்கனவே கைதிகளாக உள்ள இரண்டு அரண்மனை பணியாளர்களின் கனவுகளுக்கு விளக்கம் சொல்லி பிரபலமடைகிறார் யோசேப்பு.
இந்நிலையில், எகிப்தின் பாரோ மன்னருக்கு இரண்டு தீய கனவுகள் வர, கனவுகளுக்கு விளக்கும் சொல்வதில் பிரபலமடைந்திருந்த யோசேப்பை சிறையியிருந்து வரவழைத்து, தன் கனவுகளுக்கு விளக்கம் கேட்கிறார் எகிப்திய பாரோ மன்னர்.
அடுத்து வரவிருக்கிற 7 ஆண்டு வசந்தகாலத்தையும், அதற்கடுத்து வரவிருக்கிற 7 ஆண்டுகால பஞ்சத்தையும் விளக்கிக்கூறும் யோசேப்பு, பஞ்சத்தில் இருந்து எகிப்து தப்புவதற்கான வழிமுறைகளையும் விளக்குகிறார்.
இதைகேட்டு திகைத்த எகிப்திய  பாரோ மன்னர், யோசேப்பையே பஞ்ச நிவாரண திட்டத்திற்கான அதிகாரியாக நியமிக்கிறார். யோசேப்பும் சிறப்பாக செயல்பட்டு எகிப்தை பஞ்சத்தில் இருந்து காப்பாற்றி, மிக உயரிய பதவியையும் அடைகிறார்.
இதற்கிடையே, பஞ்சத்தில் சிக்கிய காரானிலுள்ள யோசேப்பின் சகோதரர்கள் எகிப்திற்கு தாணியங்கள் வாங்க வருகிறார்கள். அவர்களுடன் சிறு சிறு விளையாட்டு காட்டி, தன்னை யாரென்று சகோதரர்களுக்கு  அடையாளம் காணவைத்து எல்லோரும் ஒன்று சேருகிறார்கள்.
பிறகு, எகிப்திய பாரோ மன்னரின் ஆசியுடன், ஒட்டுமொத்த இஸ்ரயேலின் குடும்பமும் எகிப்தில் குடியேறுகிறது.
எகிப்தில், இஸ்ரயேலின் வம்சாவழியினரான இஸ்ரயேலர்கள் பல்கிப் பெருகுகின்றனர்

ஒரு லாங் ஜம்ப் செய்து சில  தலைமுறைகளை கடந்து, மோசஸின் காலக்கட்டத்திற்கு வந்துவிடலாம்.
எகிப்தில், இஸ்ரயேலர்கள் பெருமளவு பெருகியிருப்பதையும், அவர்கள் அரசுத்துறைகளிலும் வியாபாரத்திலும் வியாபித்திருப்பதையும், அதேவேளை எகிப்தியர்கள் தாழ்நிலையில் இருப்பதையும் கண்ட அப்போதைய எகிப்திய பாரோ மன்னர், இஸ்ரயேலர்களை அடக்கி ஓடுக்கி அடிமைகளாக்கி கடுமையாக வேலை வாங்குகிறார்.
இதற்கிடையே, ஒரு இஸ்ரயேலிய குழந்தையால் தனக்கும், தன் இராஜ்யத்திற்கும் ஆபத்து வரவிருப்பதை குறிசொல்பவர்களின் மூலமாக அறியும் எகிப்திய பாரோ மன்னர், எகிப்தில் பிறக்கும் அனைத்து இஸ்ரயேலிய ஆண் குழந்தைகளையும் கொல்ல உத்தரவிடுகிறார்.
இந்நிலையில், இஸ்ரயேலிய லேவி குலத்தில் பிறந்து மூன்று மாதமே ஆன ஒரு ஆண் குழந்தையை காப்பாற்றுவதற்காக, அதன் தாய் ஒரு பேழையில் வைத்து நைல் நதியில் விட்டுவிடுகிறார்.
(இந்த இடத்தில், மகாபாரத கிருஷ்னர் கதையும் கர்ணன் கதையும் ஒருசேர உங்கள் நினைவுக்கு வந்தால் நான்  பொறுப்பல்ல😜)
நைல் நதிக்கரையில் நீராட வந்த எகிப்தின் இளவரசி, அக்குழந்தையை கண்டெடுத்து ஒரு இளவரசனாகவே வளர்க்கிறார். 
அந்த  குழந்தை தான் மோசஸ். 
பிற்காலத்தில் தன் பிறப்பின் ரகசியம் பற்றி தெரிந்துகொள்ளும் மோசஸ், ஒரு எகிப்தியர் ஒரு இஸ்ரயேலரை துன்புறுத்துவதை கண்டு ஆத்திரமடைந்து, அந்த எகிப்தியரை கொன்று புதைத்துவிடுகிறார்.
இது எப்படியோ எகிப்திய பாரோ மன்னருக்கு தெரியவர, அவர் மோசஸை கொல்ல உத்தரவிடுகிறார். தப்பியோடிய மோசஸ், நாற்பது ஆண்டுகாலம் மிதியான் நாட்டில் (இன்றைய அரேபிய தீபகற்பத்தின் வடமேற்கில், அன்றைக்கு இருந்த ஒரு நாடு) தலைமறைவாக வாழ்கிறார்.

பின்னொருநாள், பற்றி எரியும் புதரின் ஊடாக கடவுள் மோசஸிடம் பேசுகிறார்.
எகிப்தில், அடிமைகளாக வாழும் இஸ்ரயேலர்களை மீட்டுக்கொண்டு, அவர்களின் முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு/இஸ்ரயேல் ஆகியோருக்கு,  தான் வாக்களித்த நிலமான (பாலாறும் தேனாறும் ஓடும்) கானானுக்கு சென்று குடியேறுமாறு உத்தரவிடுகிறார். முதலில் மறுக்கும் மோசஸ், கடவுள் தனக்குதவியாக சில அதிசயங்களை நிகழ்த்திக்காட்டுவதாக உறுதியளித்ததால், இந்த பெரும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.
எகிப்திய அரசவைக்கு சென்று, தன் மக்களை எகிப்திலிருந்து வெளியேற அனுமதிக்குமாறு எகிப்திய பாரோ மன்னரை வேண்டுகிறார் மோசஸ். ஆனால் பாரோ மன்னர் தன் அடிமைகளான இஸ்ரயேலர்களை அனுப்ப மறுத்துவிடுகிறார். 
"என் மக்களை போக விடு/ Let my people go" என மோசஸ் 
எவ்வளவு கேட்டும் எகிப்திய பாரோ மன்னர் மறுத்துவிடுவதால், மோசஸ் கடவுள் தனக்கு வாக்களித்த அந்த பத்து அதிசயங்களை (எகிப்தின் மீதான பத்து துன்பங்கள் அல்லது எகிப்தின் மீதான பத்து வாதைகள்) ஒவ்வொன்றாக நிகழ்த்துகிறார்.
1) நைல் நதி இரத்தமாக மாறுகிறது, மீன்கள் செத்துக்கிடக்கின்றன.
2) எகிப்தில் எங்கும் தவளைகள் பிரவேசிக்கிறது.
3) பேன் தாக்குதல்.
4) ஈ மற்றும் கொசுக்கள் தாக்குதல்.
5) கால்நடைகளில் தலைக்கன்று இறக்கிறது.
6) மனிதர்களை கொப்பளம் நோய் தாக்குகிறது.
7) கல்மழை  பொழிகிறது.
8) வெட்டுக்கிளிகள் தாக்குகிறது.
9) எகிப்து மூன்று நாட்கள் இருளில் மூழ்குகிறது.
10) எகிப்தியர்களின் தலைக் குழந்தைகள் இறக்கிறது.
(இந்த தாக்குதல்களில் எவற்றிலும் இஸ்ரயேலர்கள் பாதிப்படையாமல், எகிப்தியர்கள் மட்டுமே பாதிப்படைகின்றனர்.)

கடைசியாக அடிபணியும் எகிப்திய பாரோ மன்னர், இஸ்ரயேலர்கள் எகிப்திலிருந்து வெளியேற ஒப்புக்கொள்கிறார்.
பிறகு, திடீரென மனம் மாறும் எகிப்திய பாரோ மன்னர், வெளியேறிக்கொண்டிருக்கும் இஸ்ரயேலர்களை துரத்திப்பிடிக்க தன் படையுடன் விரைகிறார்.
அதற்குள் செங்கடலை அடைந்திருந்த இஸ்ரயேலர்களை, மோசஸ் செங்கடலை இரண்டாக பிளந்து தப்பவைக்கிறார். ஆனால், பின்தொடர்ந்து வந்த எகிப்திய பாரோ மன்னரும் அவர் படையும் செங்கடலில் மூழ்கி இறக்கின்றனர்.

பின், கடவுளின் வழிகாட்டுதலின்படி, பாரோன் பாலைவனத்தில் பயணம் செய்து சீனாய் மலைக்குன்றை அடைகின்றனர், மோசஸ் தலைமையிலான இஸ்ரயேலர்கள்.
மோசஸை சீனாய் மலைக்குன்றின் உச்சிக்கு அழைத்து, இஸ்ரயேலர்கள் பின்பற்ற வேண்டிய மதக்கடமைகள் மற்றும் வாழ்க்கை நெறிமுறைகளை எடுத்துக்கூறி, பத்து கட்டளைகள் அடங்கிய இரண்டு கற்பலகைகளை கொடுக்கிறார் கடவுள். 
இதற்குள் (நாற்பது நாட்களாகிவிட்ட நிலையில்) சீனாய் மலைக்குன்றின் கீழேயிருந்த இஸ்ரயேலர்கள், தங்கத்தில் ஒரு பசுகன்று சிலையை செய்து வழிபட தொடங்கிவிடுகின்றனர். 
இதைக்கண்டு கோபமடையும் கடவுள்,  மோசஸை திரும்ப அனுப்பிவிடுகிறார். இஸ்ரயேலர்களின் செயலை கண்டு வேதனையடையும் மோசஸ், அந்த இரண்டு கற்பலகைகளையும் போட்டு உடைத்துவிடுகிறார். தங்கள் தவறை உணர்ந்த இஸ்ரயேலர்கள், மோசஸிடம் மன்றாடி மன்னிப்பு கேட்கின்றனர். சமாதானம் அடைந்த மோசஸ், கடவுளிடம் மீண்டும் அந்த பத்து கட்டளைகளை பெற சீனாய் மலைக்குன்றின் உச்சிக்கு சென்று, கடவுளை தொழுது மன்னித்து அருளுமாறு வேண்டுகிறார். மனம் இறங்கிய கடவுளும், பத்து கட்டளைகள் அடங்கிய இரண்டு கற்பலகைகளை மீண்டும் கொடுத்து அனுப்பினாலும், இஸ்ரயேலர்கள் செய்த தவறுக்காக, இன்னும் நாற்பது ஆண்டுகள் அப்பாலைவனத்தில் அலைந்துதிரிந்து, அதன்பின்னரே தான் வாக்களித்த கானான் தேசத்தை சென்றடைய முடியும் என சபித்தும்விடுகிறார்.
கடவுளின் சாபப்படியே இஸ்ரயேலர்கள் நாற்பது ஆண்டுகள் பாரோன்  பாலைவனத்தில் சுற்றித்திரிகின்றனர்.
இதற்கிடையே மோசஸ் இறந்துவிட கடவுளே அவரை அடக்கம் செய்துவிடுகிறார். 

மோசஸிற்கு பிறகு, இஸ்ரயேலர்களை வழிநடத்தும் தலைமையை, மோசஸின் தளபதி ஜோஷ்வா ஏற்றுக்கொள்கிறார்.
நாற்பது ஆண்டுகள் தண்டனைக்கால முடிவில், ஜோஷ்வா தலைமையிலான  இஸ்ரயேலர்கள், கடவுள் தங்களுக்கு வாக்களித்த நிலமான கானான் தேசத்துக்குள் நுழைந்து, ஜெரிக்கோ நகரை போரிட்டு கைப்பற்றுகிறார்கள்.
தேசத்தை, குடவோலை முறையில் இஸ்ரயேலர்களின் 12 குலங்களுக்கு பிரித்துக்கொடுத்துவிட்டு ஜோஷ்வா இறந்துவிடுகிறார். வெகுகாலத்திற்கு பிறகு, தங்களுக்கு ஒன்றுபட்ட இராஜ்யமும், ஒரு மன்னரும் வேண்டும் என முடிவெடுக்கும் இஸ்ரயேலர்கள், அவர்களில் நீதிமானாக விளங்கிய ஒரு கோவில் ஆச்சாரியரான சாமூயேலிடம் முறையிடுகிறார்கள். சாமூயேலும், கடவுளின் ஆணைப்படி சீட்டு எழுதிப்போட்டு சவுல் என்பவரை மன்னராக தேர்தெடுக்கிறார்.
இவ்வாறாக ஒன்றுபட்ட கானான் தேசத்தின் முதல் மன்னராகிறார் சவுல். காலம் கி.மு 11ஆம் நூற்றாண்டு. 
சவுலுக்கு பின் வருபவர்களை தேவைக்கேற்ப அவ்வப்போது  பார்த்துக்கொள்ளலாம்.
(அன்றைய கானான் தேசம் என்பது இன்றைய இஸ்ரேல்-பாலஸ்தீன், ஜோர்டான், லெபனான், சிரியாவின் சிலபகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெரும் நிலப்பரப்பு.
இதை வரலாற்றாளர்கள் லெவண்ட்/Levant நிலப்பரப்பு என்பார்கள்.
கானான் எனும் நிலப்பரப்பு என்பது கி.மு. 14ஆம் நூற்றாண்டில் இருந்து வழக்கத்தில் இருக்கிறது என்பதை அமர்னா கடிதங்கள் நமக்கு உறுதிப் படுத்துகின்றன. அதை பிறகு பார்க்கலாம்.)
நிற்க...

இந்த தொன்மக்கதையை அல்லது புராணக்கதையை யூதர்களின் புனித நூலான தோரா-வும், கிறுஸ்துவர்களின் புனித நூலான பைபிள்-ளும், இஸ்லாமியர்களின் புனித நூலான குரான்-னும் கூறுகிறது.
அதனால்தான் இவை மூன்றும் ஆபிரகாமிய மதங்கள் எனப்படுகின்றன.

(தோரா என்பது யூதமத வேத நூற்தொகுப்பின் முதல் ஐந்து புத்தகங்களை மட்டுமே கொண்டது. 
'ஆதியாகமம்' தொடங்கி 'இணைச்சட்டம்' வரையிலான 5 புத்தகங்கள் தோரா/Torah எனப்படும்.
'ஜோஷ்வா' தொடங்கி 'பன்னிரு இறைவாக்கினர்' வரையிலான 8 புத்தகங்கள்  நவியீம்/Naviium எனப்படும்.
'திருப்பாடல்கள்' தொடங்கி 'குறிபேடு' வரையிலான 11புத்தகங்கள் கெத்துவிம்/Ketuvim எனப்படும்.
இவையனைத்தும் சேர்ந்த நூற்தொகுப்புக்கு தனாக்/TaNaK  எனப்பெயர் . 
இந்த 24 நூல்கள் கொண்ட TaNaK தான் யூதர்களின் வேதநூல் என்பதாகும் . ஆனால், நாம் நமக்கு பரிட்சையமான தோரா என்ற பெயரையே பின்வரும் ஒட்டுமொத்த ஆராய்ச்சிக்கும் கையாள்வோம். தோரா-பைபிளின் பழைய ஏற்பாடு இவை இரண்டுமே ஒன்றுதான் என்பதை நினைவில் கொள்க.)

நிற்க...

இந்த முழு கதைக்கும் (தோரா/பைபிளின் பழைய ஏற்பாடு) ஏதேனும் நேரிடையான வரலாற்று சான்றாவணங்கள் உண்டா? என்றால் இல்லை...
ஆனால் மோசஸின் கதையையும் (அதாவது பைபிளின் பழைய ஏற்பாடு/தோரா-யாத்திராகமம் புத்தகம்) வரலாற்றையும், தொல்லியில் சான்றாவணங்களின் மூலமாக இணைக்ககூடிய, மிக நெருங்கிய இணைப்புக்கண்ணிகள் இருப்பதாக வரலாற்றாளர்கள் கூறுகிறார்கள்.

அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்....

தொல்லியில் சான்று-1:
எகிப்தியவியலாளர் எய்டன் டாட்ஸன்/Aiden Dodson கூறுவதாவது..
"எகிப்தின் சக்காரா (Zachara) எனும்  நகரத்தில், புபஸ்டியம் அகழ்வாய்வு தளத்திற்கு அருகிலுள்ள ஒரு கல்லறைக்கோட்டத்தில், இரண்டு பிரதம அமைச்சர்களின் கல்லறைகள் உள்ளது. 
அதில் ஒரு அமைச்சரின் பெயர் ஏப்ரேயல்/Aper El. 
(கல்லறையில் உள்ள Aper El ன் சுவரோவியம் -பார்க்க படம் 2)
இது எகிப்திய பெயர் அல்ல, மாறாக இதுவொரு செமட்டிக் பெயர். 
ஏப்ரேயல்/Aper El என்ற இந்த பெயருக்கு 'கடவுளின் சேவகர்' என்பது பொருள்.
மேலும் அவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்களில் ஒன்று 'அரண்மனையின் குழந்தை'. 
இது 'மோசஸ் ஒரு இளவரசாக வளர்க்கப்பட்டார்' என்பதோடு ஒத்துப்போகிறது.
இதைவிட சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், இந்த அமைச்சர் எகிப்திய பாரோ மன்னரான அக்கெனதேன்/Akhenaten (எகிப்தின் 18ஆம் வம்சத்தின் ஒன்பதாம் பாரோ, ஆட்சிகாலம் கி.மு.1351-1334) காலத்தில் வாழ்ந்து மறைந்தவர்.
மன்னர் அக்கெனதேன் தான், அதுவரையில் எகிப்தில் இருந்த பலதெய்வ வழிபாட்டை ஒழித்து, சூரிய கடவுளான அதின்(Aten)னை ஒருதெய்வ வழிபாடாக அமல்படுத்தியவர். (பிறகு வந்த பாரோ மன்னர்களால் இந்த ஒருதெய்வ வழிபாடு விளக்கப்பட்டு மீண்டும் பலதெய்வ வழிபாடு நடைமுறைக்கு வந்தது) ஆபிரகாமிய மதங்களின் ஒருதெய்வ வழிபாடு என்பது இந்த அக்கெனதேன் மன்னரிடம் இருந்து வரித்துக்கொள்ளப்பட்டதாக இருக்கலாம்.
பைபிளின் கணக்குப்படி, மோசஸ் வாழ்ந்த காலம் கி.மு. 1450. அந்த காலக்கட்டத்தில் எகிப்திலிருந்து செமட்டிக் மக்கள் கூட்டமாக புறப்பட்டு போனதாக எந்தவித சான்றும் இல்லை. ஆனால் அதற்கு நூறு வருடங்களுக்கு முன்பு, அப்படி  புறப்பட்டு கானான் தேசத்திற்கு போனதாக தெளிவான ஆவணங்கள் உள்ளன" என்கிறார்.
( இவர் கூறும் விஷயங்களை நான் ஒவ்வொன்றாக Crosscheck செய்தபொது, கவனித்த வேறு சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
# அந்த செமட்டிக் பிரதம அமைச்சர் Aper El/ஏப்ரயேல்-ன் மனைவியின் பெயர் தாவரீத் (Taweret). இது யூதர்களின் வேதமான தோரா என்ற உச்சரிப்புடன் ஓரளவு ஒத்துப்போவதுடன், இஸ்லாமிய வேதமான குரானில் குறிக்கப்படும் தவ்ரத்/தோரா என்ற உச்சரிப்புடன் பெருமளவு ஒத்துப்போகிறது.
# பண்டைய எகிப்திய கடவுள்களில் Taweret என்றொரு -உன்னதமானவள் எனப் பொருள்- பெண் கடவுள் உள்ளார். அவர் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு ஆகியவற்றுக்கு கடவுள்.
# Aper El/ஏப்ரேயல்-ன் மகன்களில் ஒருவர் பெயர் 'Seny'. இந்த சினே என்ற உச்சரிப்படன் சீனாய் என்ற உச்சரிப்பு ஒத்துப்போகிறது. சீனாய் பாலைவனம், சீனாய் மலைக்குன்று என்பவையெல்லாம், யூதர்களின் வேதமான தோரா-வில் தான் முதன்முதலில் குறிக்கப்படுகிறது.
அதற்குமுன், எகிப்திய இராஜ்ஜியத்திற்குட்பட்ட  அப்பாலைவனத்திற்கு பெயர், தா மெஃப்கட்/Ta mefkat. 
அதனால்தான் வரலாற்றாளர்கள், சீனாய் தீபகற்பத்தில், செங்கடலை ஒட்டிய ஆறு மலைக்குன்றுகளில் ஒன்றுதான் சீனாய் மலைக்குன்று என அடையாளம் காண வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
# இந்த ஆக்கெனதேன் பாரோ மன்னர் வேறு யாரும் இல்லை, புகழ் பெற்ற -மம்மி புகழ்- டுட்டன்காமன்/Tutankhamon-ன் தந்தை.)

தொல்லியல் சான்று-2 :
எகிப்தின் இரண்டாம் இராம்சே கோவில் அருங்காட்சியகத்தின் களஆய்வார் எகிப்தியவியலாளர் பாஹா கபர்/Baaha gaber கூறுவதாவது :-
" எகிப்தில் எபிரேயர்கள் அடிமைகளாக இருந்தார்கள் என்பதற்கு எவ்வித தொல்லியல் சான்றும் இல்லை. அதேபோல, எகிப்திய நினைவுச் சின்னங்களை (பிரமிட் மற்றும் கோவில்கள்) எபிரேய அடிமைகள்தான் கட்டினார்கள் என்பதும் தவறு. ஏனெனில் எகிப்திய நினைவுச் சின்னங்களை எழுப்பிய தொழிலாளர்களின் கல்லறைகளில் உள்ள பெயர்கள் பெரும்பாலும் எகிப்திய பெயர்களே. 
இஸ்ரயேலர்களின் எதிரியாக வர்ணிக்கப்படும் பாரோ மன்னரின் பெயர் பைபிளில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அது இரண்டாம் இராம்சே/ramses 2 (எகிப்தின் 19ஆவது வம்சத்தின் மூன்றாம் பாரோ, ஆட்சிக்காலம் கி.மு 1279-1213) என மக்கள் நினைப்பதும் தவறு. பாரோ மன்னர்களிலேயே 'மகா பட்டம்' பெற்றது இரண்டாம் இராம்சே தான். மிக சிறப்பாக 67 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து, பல கடவுள்களுக்கு கோவில்கள் கட்டியும் திருவிழா எடுத்தும், பாரோ மன்னர்களிலேயே புகழ்பெற்றவராக இருந்த இரண்டாம் இராம்சே தான், பைபிளில் கூறப்படும் புகழ்பெற்ற வில்லனான பாரோ மன்னராக இருந்திருக்கக்கூடும் என சில வரலாற்றாளர்கள் தவறாக உருவகப்படுத்தியதன் விளைவு இது.
மற்றொரு முக்கியமான விஷயம் என்னவெனில், இரண்டாம் இராம்சேயின் மகன் மெர்னெப்தா/Merneptah (எகிப்தின் 19ஆவது வம்சத்தின் நான்காம் பாரோ, ஆட்சிக்காலம் கி.மு.1213-1203) ஆட்சிக்காலத்தில்  செதுக்கப்பட்ட நினைவுத்தூணில் (உலகப் புகழ்பெற்ற மெனப்தா கல்வெட்டு, பார்க்க படம்-3)
அவர் பெற்ற வெற்றிகள் குறித்து பொறிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று இஸ்ரயேல் நாட்டவருக்கு எதிரான வெற்றி.
வரலாற்றில், (பைபிளை தவிர்த்து) இஸ்ரயேல் என்ற வார்த்தை இங்குதான் முதன் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மன்னர் தன் படைகளை எகிப்திற்கு வெளியே கொண்டு சென்று, வடக்கில் (அன்றைய எகிப்திய ஆட்சிப்பரப்புக்கு வடக்கே இருந்தது கானான் தேசம் எனப்படும் இன்றைய இஸ்ரேல் உள்ளடக்கிய பெரும் நிலப்பரப்பு) இருந்து வந்த இஸ்ரேலிய படையெடுப்பை முறியடித்ததாக குறிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தோரா-யாத்திராகமம் புத்தகத்தில் சொல்லப்படுவதுபோல், இஸ்ரேயலர்கள் எகிப்தில் அடிமைகளாக இல்லை. மாறாக எகிப்தையே தாக்கும் அளவிற்கு பலம் வாய்ந்த அரசை கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர்.
அதேவேளை, பைபிளில் சொல்லப்படும் யாத்திரகாமக்கதைக்கு தொடர்புள்ள ஒரு நிகழ்வு எகிப்தில் நடந்திருக்கிறது. ஆனால் அது, இரண்டாம் இராம்சே காலத்திற்கு 300 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது.  செமட்டிக் மக்களான ஹைக்சோஸ்-Hyksos மக்களை, எகிப்தின் முதலாம் அக்மோஸ்/Ahmose1 (எகிப்தின் 18ஆம் வம்சத்தின் முதல் பாரோ, ஆட்சிக்காலம் கி.மு 1549-1524) மன்னர்  நாட்டைவிட்டு துறத்தியடித்தார். அவர்கள் எகிப்தில் இருநூறு வருடங்களாக வாழ்ந்து வந்திருந்தனர்.
இவ்வாறு எகிப்தில் செமட்டிக் மக்கள் வாழ்ந்ததற்கும், ஒருசமயத்தில் அவர்கள் வெளியேற்றப்பட்டதற்கும் சான்றாவணங்கள் உண்டு. ஆனால் அது, பைபிளில் கூறப்படும் யாத்திரகாம காலகட்டத்தோடு ஒத்துப்போகவில்லை" என்கிறார்.

சரி, யார் இந்த ஹைக்சோஸ் மக்கள்?

தொலியல் சான்று-3:
எகிப்தில் குடியேறிய செமட்டிக் மக்களை குறித்த சுவரோவியம் (காலம் கி.மு 1900) ஒன்று எகிப்தின் பெனி ஹசன் (Beni hasan tomb archealogical site) கல்லறையில் உள்ளது. (பார்க்க படம்-4)
மத்திய கிழக்கு நாட்டவர்களை குறிப்பிட, எகிப்தியர்கள் எகிப்திய மொழியில் ஹைக்சோஸ் (Hyksos -வேற்று நாட்டவர்கள்) என அழைத்தனர்.
(Hyksos- ruler of other country/வேற்று நாட்டின் ஆட்சியாளர் என ஒரு பொருளும் உண்டு) 
மேலும் இவர்கள் மத்திய தரைக்கடல் பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் என்ற குறிப்புகளும் உள்ளது.
புலம் பெயர்ந்து எகிப்தில் வாழ்ந்து வந்த இந்த மக்கள், அரசு பதவிகளில் அமர்ந்தனர்.
எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் (கிமு 1650 - கிமு 1580) போது, எகிப்தில் எழுந்த வாரிசுரிமை பிரச்சனைகளை பயன்படுத்திக்கொண்டு 
எகிப்தின் பதினான்காம் வம்சத்தவர்களை வென்று, பண்டைய கீழ் எகிப்து மற்றும் சீனாய் தீபகற்பம் பகுதிகளை கைப்பற்றி, தங்களை எகிப்தின் பதினைந்தாம் வம்சத்தினர் என அறிவித்துக்கொண்டு, கிமு 1630 முதல் கிமு 1523 முடிய 107 ஆண்டுகள் ஆண்டனர். 
ஆனாலும், இவர்கள் தங்களுக்கான அடையாளங்களை துறந்து எகிப்தியர்களாக அடையப்படுத்திக்கொண்டனர் என வரலாற்றாளர்கள் கூறுகிறார்கள்.
இவர்களை எகிப்திய பாரோ முதலாம் அக்மோஸ்/Ahmose1 (18ஆம் வம்சத்தின் முதல் பாரோ, ஆட்சிக்காலம் கி.மு 1549-1524) மன்னர் அல்லது அவரது பாட்டனார் தோற்கடித்து (இதில் ஒரு தெளிவில்லை), நைல் நதியின் வடிகால் பகுதிகளின் வழியாக விரட்டியடித்தார் என சான்றாவணம் கூறுகிறது.

தொல்லியல் சான்று-4: 
மூன்றாம் இராம்சே/Ramses3 (எகிப்தின் 20ஆம் வம்சத்தின் இரண்டாம் பாரோ, ஆட்சிக்காலம் கிமு 1186 – 1155) கல்லறையில், இந்த ஹைக்சோஸ்/Hyksos மக்களை, பிர்ஸ்ட்கள் என குறிப்படிப்பட்டிருக்கிறது. மேலும், அவர்கள் கடலோடிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
கி.மு 1190ல் அனதோலியா, சைப்பிரசு மற்றும் சிரியாவின் பகுதிகளை தாக்கி, இறுதியில் எகிப்தை தாக்கியதாகவும், போரில் தோற்ற இவர்கள், எகிப்திய பாரோ  அனுமதியுடன் இன்றைய இஸ்ரேலிய-பாலஸ்தீனத்தின் கடற்கரைப் பகுதிகளில் குடியேறியதாக, மூன்றாம் இராம்சே கல்லறைக் குறிப்புகள் கூறுகிறது.

பினிசிய மொழி, கிரேக்க மொழி மற்றும் அராமய மொழி பேசிய இந்த ஹைக்சோஸ் மக்கள் ஆண்ட பகுதியை 'போனீசியா' என வரலாற்றாளர்கள் அவதானித்து உள்ளார்கள். அது, இன்றைய லெபனான் மலைத்தொடரை கிழக்கு எல்லையாகவும், இன்றைய இஸ்ரேலின் கார்மேல் மலைத்தொடரை தெற்கு எல்லையாகவும் கொண்ட ஒரு நிலப்பரப்பு என உருவகப்படுத்தியிருக்கிறார்கள். (பார்க்க படம்-5) 
பிறகு கி.மு. 8ம் நூற்றாண்டில், அசிரியர்கள் பினிசியர்களை வென்று போனீசியாவை கைப்பற்றிக் கொண்டனர். 
கி.மு. 539ல் பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக போனீசியா மாறியது.   
கி.மு 333ல் மாசிடோனிய அரசரான மகா அலெக்சாந்தர்  பாரசீகத்தைத் தோற்கடித்து போனீசிய பகுதிகளை மாசிடோனியாவின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார்.
இத்தோல்விகளின் விளைவாக,  பினிசியர்கள் தமது தனித்துவத்தை இழக்கத் தொடங்கினர். அவர்கள் படிப்படியாக கிரேக்க - மசிடோனியப் பேரரசுக்குள் உள்வாங்கப்பட்டனர். கி.மு. 64ல் போனீசியப் பிராந்தியம், உரோமப் பேரரசின் சிரியா என்ற மாகாணமாக மாற்றப்பட்டது. அத்தோடு போனீசியா என்ற பெயரே உலக அரங்கிலிருந்து மறைந்துப் போயிற்று என்கிறார்கள் வரலாற்றாளர்கள்.

கிரேக்கக் காவியமான ஒடிசியில், இவர்களை பினிசியர்கள் என குறிப்பிடுவதோடு மிகச்சிறந்த மாலுமிகள், வணிகர்கள் மற்றும் தந்திரக்காரர்கள் என அதன் ஆசிரியர் ஹோமர் (காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு) குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள்தான் அகரவரிசையை/Alphabetic முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் என்றும், கண்ணாடி-தகரம் போன்றவைகளை இவர்களே புழக்கத்திற்கு கொண்டுவந்தார்கள் என்றும் கூறுகிறார்.
ஃபீனிக்ஸ்/Phoenix என்ற கிரக்க சொல்லில் இருந்தே பினிசியர்கள் என்ற பெயர் வந்தது.
பினிசியர்கள் என முதன்முதல் அழைத்தது ஹோமர் தான் என கருதுகிறேன்.

பண்டைய கிரேக்க வரலாற்று அறிஞரான ஹெரோடோட்டஸ்/Herodotus, (காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு)
இவர்களை சிறந்த கடலோடிகள், வணிகர்கள், ஏமாற்றுக்காரர்கள் என்று  குறிப்பிடுவதோடு, ஊதா நிறத்தை அறிமுகப்படுத்தியதால் Purple people என்றும் பினிசியர்கள் என்றும் அடையாளப்படுத்தி இருக்கிறார். 

இவர்கள், மத்திய தரைக்கடல் வணிகவழி  சாம்ராஜ்யத்திற்கு பெறும் பங்காற்றினர் எனவும் இவர்களின் சாம்ராஜ்யம் என்பது ஒரு நிலப்பரதேசத்தை கொண்டதல்ல, மாறாக வணிகத்தை கொண்டது எனவும் வரலாற்றாளர்கள் கணித்துள்ளனர்.

இவர்களுக்கென ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே அரசு, இலக்கியம், தன்வரலாறு என எதையும் கொண்டிருக்கவில்லை அல்லது கொண்டிருந்து விட்டுச்செல்லவில்லை என்பதால், இவர்களை வரலாற்றில் 'இன்னார்' என அறுதியிட்டு கூறுவதற்கு வரலாற்றாளர்களால் முடியவில்லை.
இவர்களை பற்றிய பிற கலாச்சாரங்களில் கிடைக்கப்பெறும் சான்றுகளே, இவர்களை 'யார்' என அடையாளப்படுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு வரலாற்றாளர்கள் தள்ளப்படுகிறார்கள் என்பது, உண்மையில் ஒரு வரலாற்று துயரம்தான்.

இவர்களை பற்றிய மற்ற எவற்றையும்விட தோரா-தான் அதிகமாக அடையாளப்படுத்தியிருக்கிறது எனக் கூறினால், அது மிகையாகாது.
யூதமத வேதநூலாகிய தோரா-ஆதியாகமம் தொடங்கி சகாரியா புத்தகங்கள் வரையிலும்  இவர்களை பிலிஸ்தியர்கள் எனக்கூறுகிறது. இவர்களின் வம்சாவழி பற்றியும், ஆட்சிப்பரப்பு பற்றியும் விரிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அவற்றை பிறகு பார்க்கலாம்.

இங்கு இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். 
கி.பி 1947ல் ந.சி.கந்தையா அவர்கள் எழுதிய 'சிந்துவெளி தமிழர்' எனும் நூலில், இந்த பினிசியர்களை 'தமிழர்கள்' என அவர் கூறுகிறார்.
மேலும் அவர், "இவர்கள் குமரிக்கண்டம் கடற்கோளால் அழிந்தபோது, தப்பிப்பிழைத்த தமிழர்கள் உலகெங்கும் பரவிக் குடியேறியபோது, ஒரு கூட்டம் மத்திய தரைக்கடல் கடற்கரையோரமாக (இன்றைய இஸ்ரேல்-பாலஸ்தீன கடற்கரை) குடியேறினார்கள்" என்றும் "அவர்கள் ஆதித்தமிழரின் சைவ வழிபாட்டினர்" என்றும், "தையர் (டைர்- இன்றைய லெபனானின் ஒரு கடற்கரையோர பகுதி) பட்டிணத்தில் அமைந்த பகலவன் கோவிலில், தங்கம்-வைரத்திலான 2 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக, கிரேக்க வரலாற்றாளர் ஹெரோட்டஸ் கூறியிருக்கிறார்" எனக் கூறுகிறார். ஆனால் அவர் பினிசியர்களை மட்டும் அவ்வாறு சைவத்தமிழர்கள் என்று கூறவில்லை. மாறாக, யுதர்கள்/இஸ்ரேயலர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்கள், துருக்கியர்கள்,பாபிலோனியர்கள், சுமேரியர்கள், அசீரியர்கள், சிரியர்கள், ஹிட்டைட்கள், இத்தாலியர்கள், ஸ்பானியர்கள், அமெரிக்க பழங்குடிகள் என அனைவரும், குமரிக்கண்டத்தில் இருந்து தப்பிப்பிழைத்த ஆதித் தமிழர்களும் அவர்களின் மரபினருமே என்றும், அவர்கள் அனைவரும் சிவலிங்க வழிபாட்டையும் நந்தி வழிபாட்டையுமே ஆதியில் கொண்டிருந்தனர் என்றும் கூறுகிறார்.
இதனோடு, "பண்டைய நாகரிகங்கள் தழைத்த இடங்களில் எங்கு தோண்டினாலும், அங்கு இன்றைய ஹிந்து மதக்கடவுள் சிலையான சிவலிங்கம் கிடைக்கும்" என ஒரு ஜெர்மானிய வரலாற்றாளர் (பெயர் மறந்துவிட்டேன்) கூறியதை ஒப்பிட்டு பார்க்க முடிந்தாலும், குமரிக்கண்ட கோட்பாட்டை என்னால் ஏற்க முடியாததால், ந.சி.கந்தையா அவர்களின் கூற்றை ஒரு தகவலுக்காக மட்டுமே நான் இங்கு காட்டியிருக்கிறேன்.

சரி அது செல்க, நாம் விஷயத்திற்கு வருவோம்...
இவ்வாறு எகிப்தில் செமட்டிக் மக்கள் வாழ்ந்ததும், பிறகு கூட்டமாக வெளியேற்றப்பட்டதும் தொல்லியல் சான்றாவணங்களின் மூலமாக எகிப்தியவியலாளர்களும் வரலாற்றாளர்களும் உறுதிபடுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பினிசியர்கள்/பிலிஸ்தியர்களா அல்லது இஸ்ரயேலர்களா அல்லது இருவருமா என்பதை பிறகு பார்க்கலாம்.

ஆனால் அதற்கு முன்பு,
பைபிளின் பழைய ஏற்பாடு/தோரா  யாத்திராகமம் புத்தகத்தில் விவரிக்கப்படும் மோசஸ் நிகழ்த்திக் காட்டிய 'எகிப்தின் மீதான கடவுளின் பத்து தாக்குதல்கள்/எகிப்தின் மீதான பத்து வாதைகள்'(பார்க்க படம்-6) பற்றி அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்???
1)நைல் நதியில் வளரும் ஒரு வகையான -விஷத்தன்மைக் கொண்ட-
சிகப்பு பாசி (Red algae) மிக அதிகமாக படரும் பட்சத்தில், அது சில விளைவுகளை தோற்றுவிக்கும். 
நதி சிவப்பு நிறமாக காட்சியளிக்கும், மீன்கள் இறக்கும். கொசு, ஈ, வெட்டுக்கிளி, போன்ற பூச்சினங்களையும் அவற்றை உண்ணும் தவளைகளையும் அபரீதமாக பெருக வழி வகுக்கும். 
நதியில் நீர் பருகும் கால்நடைகளை கொல்லும், இறந்த கால்நடைகள் மூலமாக மனிதர்களுக்கு கொள்ளை (பிளேக் நோயின் அறிகுறி கொப்பளங்கள்) நோய் வரும்.
ஆனால் எகிப்தையே கதிகலங்க வைக்கும் அளவிற்கு அந்த சிகப்பு பாசியின் பரவல், நைல் நதியில் ஏற்பட்டதா? என்பதற்கும், குறிப்பாக மோசஸ் ஏவிவிட்ட கட்டளைகளால் ஏற்பட்டதா? என்பதற்கும் எந்த வரலாற்று ஆவணங்களும் இல்லை என்கின்றனர்.😜

2) எகிப்திற்கு வடமேற்கே உள்ள கிரேக்க தீவுக்கூட்டங்களில் ஒன்றான சான்டோரினி தீவில் உள்ள எரிமலை, கி.மு. 1500-ல் மிப்பெரிய அளவில் வெடித்து சிதறியது. அதனால் ஏற்பட்ட புகை மண்டலம், பலநூறு கிலோமீட்டர்கள் வரையும் பல நாட்கள் வானை மறைக்கும் அளவிற்கு இருந்திருக்கும் என்றும் 
எரிமலை சீற்றத்தின் விளைவாக பாறைகள் சிதறுண்டு சிறுசிறு கற்களாக  தூக்கியெறியப்படும் என்றும் 
அதன் தாக்கம் எகிப்திலும் இருந்திருக்கும் என்றும் கூறுகிறார்கள். 
(இந்த எரிமலை சீற்றம், வேறோரு  முக்கியமான வரலாற்று நிகழ்வுடன் தொடர்புடையது. 
பண்டைய புகழ்பெற்ற  நாகரிகங்களில் ஒன்றான Minoan/மினோவன் நாகரிகம் அழிவுக்கு காரணம் இந்த எரிமலை சீற்றமே என்கிறார்கள் வரலாற்றாளர்கள்.
பண்டயை கிரேக்கத்தில் இந்த எரிமலை தீவுக்கு பெயர், Thera/தெரா. 
தோரா - தெரா பெயர்களின் உச்சரிப்பு ஒத்துப்போவது ஒரு வரலாற்று அதிசயம் தான். இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினால் புதிய வெளிச்சம் கிடைக்கலாம் என்பது என் எண்ணம்.) 

3) மோசஸ் செங்கடலை பிளந்த கதையை பொருத்தவரை, அந்நிகழ்வை நாம்  புரிந்துகொண்ட விதமே தவறு என்கிறார்கள் நவீன வரலாற்று அறிவியலாளர்கள்.
எபிரேய தோரா-வின் சம்பவங்களை,  நாம் ஆங்கிலேய பைபிளின் வழியாக புரிந்துகொண்டதன் விளைவு இது என்கிறார்கள். 
யூதர்களின் புனித நூலான தோரா, முதன்  முதலில் கிரேக்க மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது. அதன் பெயர் செப்துவசிந்தா. (Septuaginta)

(இது பற்றிய ஒரு தொன்மக் கதையும் உண்டு:-
கி.மு. 3ஆம் நூற்றாண்டில் எகிப்திய நாட்டை இரண்டாம் தாலமி ஃபிலடெல்புசு (Ptolemy II Philadelphus) ஆண்டுவந்தார். அவர் அலெக்சாந்திரியா நகரில் அமைந்திருந்த உலகப் புகழ்பெற்ற நூலகத்தில், தோரா-வின் பிரதிகளைச் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார். எனவே அரசர், எருசலேமில் தலைமைக் குருவாயிருந்த எலயாசர் என்பவரை அணுகித் தம் விருப்பத்தைத் தெரிவித்தார். அவர் இஸ்ரயேலர்களின் பன்னிரு குலங்களில் ஒவ்வொன்றுக்கும் ஆறுபேர் எனும் விகிதத்தில் எழுபத்திரண்டு யூத அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து, அலெக்சாந்திரியாவுக்கு அனுப்பினார். அரசர் அந்த அறிஞர்களிடம், எபிரேய மொழியிலிருந்த தோரா-வை கிரேக்க மொழியில் மொழிபெயர்த்துத் தருமாறு பணித்தார்.
ஒவ்வொரு அறிஞருக்கும் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டது. ஒருவர் மற்றவரோடு கலந்துபேசக் கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டது.
அந்த அறிஞர்கள் எழுபத்திரண்டு பேரும் எழுபத்திரண்டு நாள்களில் மொழிபெயர்ப்புப் பணியைச் செய்து முடித்தனர். பின்னர் ஒவ்வொருவரும் செய்த மொழிபெயர்ப்பை ஒப்பிட்டுப் பார்த்தபோது, எல்லா மொழிபெயர்ப்புகளும் ஒரே மாதிரி அமைந்திருந்தது கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

இக்கதையை எடுத்துரைக்கும் ஃப்ளாவியுசு ஜோசிஃபஸ்/Flavius josephus என்னும் வரலாற்று அறிஞர் (காலம் கி.பி. சுமார் 37-100), எழுபத்திரண்டு என்னும் எண்ணை, எழுபது என்னும் முழு எண்ணாக மாற்றி எழுபதின்மர் (செப்துவசிந்தா/Septuaginta) என்னும் மரபுக்கு வழிவகுத்தார்.
பிறகு, பிறமொழிகளான சுலோவோனியம், சிரியம், அர்மேனியம், கோப்தியம், பழைய சியோர்சியன் (Georgian), லத்தீன் போன்ற மொழிகளில் எழுந்த தோரா-வின் மொழி பெயர்ப்புகளுக்கெல்லாம், செப்துவசிந்தாவே மூல நூலாக பயன்டுத்தப்பட்டது. லத்தீனிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
இன்று ஆங்கிலத்தில் கிடைக்கும் அனைத்து பைபிள்களும், King james version bible -Published by england of church in 1611- எனப்படுவதன் பிரதிகள்தான்.)

எபிரேய மொழி தோரா-யாத்திராகமம் புத்தகத்தில், இஸ்ரயேலர்கள் கடக்கும் அந்த நீர்நிலைக்கு பெயர் யாம் சூஃப் (Yam suph). 
யாம் என்ற எபிரேய சொல்லிற்கு பொருள் = கடல் (Sea)
Suph என்ற எபிரேய சொல்லிற்கு பொருள்= நாணல்(reeds)
இந்த இரண்டு வார்த்தைகளையும் இணைத்து ஆங்கிலத்தில் Sea of reeds என்று முதலில் மொழிபெயர்த்தார்கள்.
 
ஏற்கனவே மத்தியகால(கி.பி 1500) பிரஞ்ச் துறவியான ராஷி என்பவர், யூதமத வேதநூல்களான தோரா-வுக்கும் தால்மூத்-க்கும் எழுதிய உரைநூலில், Yam suph என்பது ஆப்பிரிக்க கண்டத்திற்கும் அரேபிய தீபகற்பத்திற்கும் இடையிலான  முகத்துவாரத்திலுள்ள -நைல் நதி சிகப்பாக மாறிய- உப்புநீர் பகுதி என அடையாளம் காட்டியிருந்தார்.
ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் அந்த 'சிகப்பு-உப்புநீர்' பகுதி என்பதை கடல் என பொருள்கொண்டு செங்கடல் (Red sea) என மொழிபெயர்த்துவிட்டார்கள் என்கிறார்கள். 
ஆனால், நவீனக்கால அறிவியலாளர்கள் அந்த உப்பு நீர் பகுதியை அடையாளம் கண்டு இருக்கிறார்கள். அது நைல் நதியின் டெல்டா பகுதியில் இருக்கும் திம்ஸா ஏரி/Lake timsah. (பார்க்க படம்-6)
ஆழம் குறைந்த (சூயஸ் கால்வாய் தோண்டும்வரை) அந்த உப்புநீர் ஏரியைத்தான் இஸ்ரயேலர்கள் கடந்து சென்றிருக்க வேண்டும் என்கிறார்கள்.
(மேலும், suph - நாணல், Suf - முடிவு, suphah - புயல் போன்ற உச்சரிப்பு விளைவுகளால் எழும் வேறு சில கோட்பாடுகளும் உண்டு)

சரி, அது செங்கடல் இல்லையென்றாலும் அந்த ஏரியையாவது மோசஸ் பிளந்து வழி ஏற்படுத்தினாரா? என்றால்,
பொதுவாக இம்மாதிரியான ஆழம் குறைந்த சதுப்பு நிலங்களில், காற்று  குறுக்குவாட்டில் தொடர்ந்து 8 மணிநேரத்திற்கு 60கி.மீ வேகத்தில் வீசினால், நீர் இருபக்கமும் விலகி சிலமணி நேரங்கள் வரை அதன் தரை தெரியும் என்பதை நவீன தொழில்நுட்பத்தின்  உதவியுடன் உறுதி செய்திருக்கிறார்கள்.
ஆனால், மோசஸின் கட்டளையின்படி காற்று அவ்வளவு வேகமாக வீசி நீரை விலகச்செய்து வழி ஏற்படுத்தியதா? என்பதற்கு அவர்கள் பதில் கூற மறுத்துவிட்டார்கள்.😜

இவ்வாறாக மோசஸ் தலைமையிலான இஸ்ரயேலர்கள், எகிப்தை கடந்து செங்கடலை பிளந்து பாரோன் பாலைவன பகுதியான சீனாய் தீபகற்பத்தில் நுழைந்து, நாற்பது ஆண்டுகள் சுற்றித்திரிந்தார்கள் என்றால், அதற்கான தொல்லியல் தடையங்களை அங்கு விட்டுச்சென்றிருக்க வேண்டுமே???

தொல்யில் சான்று-5:
சீனாய் தீபகற்பத்தின் வடமேற்கில், செரபித் எல் காதீம் (Serabit el khadim) எனும் ஓர் இடம் உள்ளது. இது பண்டைய எகிப்தின் எல்லைக்குட்பட்ட இரத்தினகற் சுரங்கங்கள் இருந்த ஒரு பகுதி.
அங்கிருக்கும் ஒரு மலைக்குன்றின் உச்சியில் பண்டைய எகிப்திய பெண் கடவுளான ஹத்தோ(Hattor)வுக்கு கோவில் ஒன்று உள்ளது. (காலம் கி.மு 2000, பார்க்க படம்-7)
இதன் தொல்லியல் களஆய்வாளர்-எகிப்தியவியலாளர் பியர் டெலட்/Pierre tallet கூறுவதாவது:- "இக் கோவில், எகிப்திய சுரங்கத்தொழிலாளர்களால் கட்டப்பட்டது. கோவிலின் நினைவுத்தூண்களில்,  சுரங்கத்தொழிலாளர்கள் சுரங்கங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை பொறித்து இருக்கிறார்கள். அந்த நினைவுத்தூண்களில் ஒன்றில், ஒரு மனிதன் கழுதையின் மீது அமர்ந்திருப்பது போன்று பொறிக்கப்பட்டுள்ளது. (பார்க்க படம்-8)
இதன் காலம் கி.மு 1200-1000.
எகிப்திய ஐகனோகிராஃபியில் (Iconography - படிமவியல்) ஒரு மனிதன் கழுதையின் மேல் அமர்ந்து இருக்குமாறு எப்போதுமே பொறிக்கப்பட்டு இருக்கவில்லை. அதனால் நிச்சயமாக இது ஒரு செமட்டிக் மனிதரைத்தான் குறிக்கிறது. எகிப்தியர்களை தவிர  செமட்டிக் மக்களும் இங்கே வேலை செய்திருக்கிறார்கள் என்பதற்கு வலிமையான தொல்லியல் சான்று இது" என்கிறார். மேலும் அவர் "கோவிலின் உட்பிராகத்தில், எகிப்திய ஹைரோகிளிப்ஸ்/சித்திர எழுத்து போன்று சில எழுத்துருக்கள் உள்ளன. (பார்க்க படம்-9)
ஆனால் அவை எகிப்திய மொழி இல்லை, மாறாக அது ஒரு செமட்டிக் மொழி. அதில் ஒரு எழுத்துரு ஆலஃப் (காளை) என்ற பொருளையும், மற்றொன்று பெட் (வீடு) என்ற பொருளையும் தருகிறது.
இவை சரியான வரிசைக்கிரமத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது இங்கிருந்துதான் இன்றைய அகரவரிசை/Alphabetic உருவெடுத்திருக்கிறது" என்கிறார்.
மேலும் அவர், "இந்த கோவிலின் கடவுளான ஹத்தோ, பெண் வடிவில் தலையில் கொம்புடன் பசு கடவுளாக செதுக்கப்பட்டு உள்ளார். (பார்க்க படம்-10)
(பண்டைய எகிப்தில் ஹத்தோ என்கிற பெண் கடவுள், காதல் இனப்பெருக்கம் இசை சுகம் போன்ற பல விஷயங்களுக்கு கடவுளாக விளங்கினார்)
அதாவது இங்கு பசு வழிபாடு இருந்திருக்கிறது. 
இதை, 'மோசஸ் கடவுளிடம் பத்து கட்டளைகளை வாங்க சீனாய் மலைக்குன்றின் உச்சிக்கு சென்றிருந்த வேளையில், கிழேயிருந்த இஸ்ரயேலர்கள் ஒரு தங்கப் பசுக்கன்றை வழிபட்டது'டன் முடிச்சுப்போட்டு பார்க்க முடியும்" என்கிறார்.

இதுவரை நாம் கண்ட தொல்லியல் சான்றுகள், ஒரு செமிட்டிக் மக்கள் கூட்டம் எகிப்தில் சில நூறு ஆண்டுகள் வாழ்ந்ததும், பிறகு கூட்டமாக வெளியேறியதும், சீனாய் தீபகற்பத்தில் சிலகாலம் இருந்ததும் உறுதி செய்கின்றன.
அந்த செமட்டிக் மக்கள் கூட்டம் கானான் நிலப்பரப்பில் (இன்றைய இஸ்ரேல்-பாலஸ்தீன் உள்ளடக்கிய நிலப்பரப்பு) குடியேறியதா? என்பதற்கு ஏதேனும் தொல்லியல் சான்றுகள் உண்டா??? 

தொல்லியல் சான்று 6:
இஸ்ரேலிய அகழ்வராய்ச்சியாளர் ஆடம் செர்டல்/Adam Zertel தலைமையிலான ஒரு அகழ்வாராய்ச்சி குழு, கி.பி 1979ல் இன்றைய இஸ்ரேலிய-பாலஸ்தீன நிலப்பரப்பில், மானசே மலை நாடு/Manesseh hill country எனும் பகுதியில், Westbank/மேற்குக்கரையையும்  உள்ளடக்கிய, 2500 சதுர கி.மீ பரப்பளவில் மிகப்பெரிய அகழ்வாய்வு பணியை மேற்கொண்டது. அதில் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆரம்பக்கால இரும்பு யுகம்/Iron age1 உறுதிசெய்யப்பட்டது.
அதில் ஒன்று எபல் மலைக்குன்று/Mount abel. (பார்க்க படம்-11) 
இது இன்றைய மேற்கு கரையில்/West bank அமைந்துள்ளது.
University of haifa மற்றும் Isreal exploration society ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து கி.பி 1980-1989 ஆகிய காலக்கட்டங்களில் எட்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொண்டது. 
அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்:
1) ஆரம்பக்கால இரும்பு யுகத்திற்கான (iron age1-இப்பிராந்தியங்களில் கி.மு1200-550வரை இருந்தது) மட்பாண்டங்கள் மற்று மட்பாண்ட துகள்கள்.

2) செம்பிலான ஊதுவர்த்தி தாங்கிகள் போன்ற பூஜை பாத்திரங்கள்.

3) பலியிடப்பட்ட ஆயிரக்கணக்கான 'உண்ணத்தகுந்த விலங்குகள்'-ன் எலும்புகள்.
(தோரா-வில், இஸ்ரயேலர்கள்  உண்ணத்தகுந்த உணவு பட்டியலும் அதை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்ற வழிமுறையும் விளக்கப்பட்டிருக்கிறது. அந்த உண்ணத்தகுந்த உணவுப்பட்டியலில் குறிப்பிட்ட சில விலங்குகளும் உண்டு. அவற்றை Koshar animals/உண்ணத்தகுந்த விலங்குகள் என்பார்கள்.) 

4) 2 எகிப்திய கல்வண்டுகள். (பார்க்க படம்-12)
( எகிப்திய கல்வண்டு என்பது இறந்தவரின் உடலை பதனிடும்போது/Mummification, கல்லால் செய்யப்பட்ட வண்டு சிற்பங்களை உடன் வைத்துவிடுவார்கள். அவை அந்த உடலை பாதுகாக்கும் என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை. Mummy திரைப்படம் பார்த்தவர்களுக்கு புரியும்.) 

5) எகிப்திய பாரோ மன்னர் இண்டாம் இராம்சேயால் -மூன்றாம் துட்மோஸ் மன்னர் நினைவாக- வெளியிடப்பட்ட குறுங்கல்வெட்டு. (பார்க்க படம்-13)
( குறுங்கல்வெட்டில், சிற்பங்களுக்கு பதிலாக, கடவுளின் பெயரோ அல்லது மன்னரின் பெயரோ எகிப்திய மொழியில் பொறிக்கப்பட்டிருக்கும்)

6) இரண்டு காதணிகள். 

இவையாவும், வெளிப்புற சுற்றுச்சுவர்கள் மட்டுமே கொண்ட ஒரு சிதிலமைடைந்த கட்டிட அமைப்பின் உட்பிராகரங்களிலும் வெளிப்பிராகங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டது. (பார்க்க படம்-14)
இந்த கட்டிட அமைப்பையும், அதன் அஸ்திவாரத்தில் புதைக்கப்பட்ட (பலியிடப்பட்ட விலங்குகளின்) எலும்புகளையும், அங்கு கிடைத்த பொருட்களையும் கொண்டு, யூதமத வேத நூலான தோரா-ஜோஷ்வா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் பலிபீடத்தோடு ஒப்பிட்டு, "இது நிச்சயம் யூதர்களின் முதல் பலிபீடம்தான்" என உறுதியளித்தார், அதன் தலைமை அகழ்வாராய்ச்சியாளர் ஆடம் செட்ரெல்/Adam zetral. 

ஆனால், பிற வரலாற்றாளர்கள் "இத்தளம், தோரா-ஜோஷ்வா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திசையை நோக்கி அமைந்திருக்கவில்லை" என சுட்டிக்காட்டி அக்கூற்றை மறுத்தார்கள். எனினும், அப்பகுதி யூதர்கள்/இஸ்ரயேலர்களின் ஆரம்பக்கால வழிப்பாட்டுத் தளங்களில் ஒன்றுதான் என ஒப்புக்கொண்டார்கள்.
(இந்த அகழ்வாய்வு முடிவுகள் வெளிவந்ததும் இஸ்ரேலிய-பாலஸ்தீன அரசியல் களத்தில், பிரச்சனை சூடுபிடித்தது. இதையெடுத்து கி.பி 2001ஆம் ஆண்டு, இந்த அகழ்வாய்வு தளத்தின் ஒரு பகுதி, பாலஸ்தீனிய தேசிய ஆணையத்தின் மாநகராட்சி ஊழியர்களால் சேதப்படுத்தப்பட்டது)

தொல்லியல் சான்று 7:
இஸ்ரேலில் உள்ள கிர்பத் எல் மஸ்தரா/Khirbet el-mastarah 
என்ற இடத்தில் ஒரு அகழ்வாய்வுத்தளம் உள்ளது. (இதுவும் மேற்கண்ட அகழ்வாராய்ச்சியாளர் Adam zetral-லால் அடையாளம் காணப்பட்டதுதான்). 
இது, தோரா-ஜோஷ்வா புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இஸ்ரயேலர்கள் கானான் நிலப்பரப்புக்குள் நுழைந்து முதலில் போரிட்டு வென்ற ஜெரிக்கோ நகருக்கு இரண்டு மைல் தொலைவில் உள்ளது. 
இத்தளத்தை அகழ்வாராய்ச்சியாளர் டேவிட் பென் ஷ்லோமோ/David ben shlomo தலைமையில் ஒரு குழு அகழ்வாய்வு செய்தது.
அகழ்வாய்வில் சில கட்டிட இடிபாடுகளை கண்டறிந்தனர். (பார்க்க படம்-15)
இதுகுறித்து டேவிட் பென் ஷ்லோமோ கூறுவதாவது:-
" இது ஒரு குடியிருப்புப் பகுதி.
மொத்த குடியிருப்பும் கோட்டை சுவர்களால் சூழப்பட்டு இருந்திருக்கிறது. இக்கட்டுமானங்கள், ஆரம்பக்கால இரும்பு யுகத்தை சேர்ந்த இரட்டைச்சுவர் அமைப்பை கொண்டவை.
இவையனைத்தும் ஒரேசமயத்தில் சமகாலத்தில் கட்டப்பட்டவை. ஏனெனில் அதற்கு கீழ் எந்தவொரு முந்தைய கட்டுமான அடுக்குகளும் இல்லை. மேலும், அது அதற்கு பிறகான காலக்கட்டத்தில் எந்தவொரு வளர்ச்சியும் பெறவில்லை. நிலத்தின் Quartz படிமங்களை பரிசோதித்தபோது, நிலத்தின் மேல்அடுக்கில் ஆரம்பக்கால இரும்பு யுகமும் அதற்கு கீழ்அடுக்கில் மத்திய செம்பு யுகமும் இருந்தது உறுதி செய்யப்பட்டது. கிடைத்த சில மட்பாண்ட ஓடுகளும், மத்திய செம்பு யுகத்தை சேர்ந்தவையே.
மேலும் அருகில் ஒரு நாடோடி சமூகக்கால பட்டியும் (கால்நடைகளை அடைத்துவைக்க கற்களாலான அமைப்பு) உள்ளது. (பார்க்க படம்-16)
இவையாவும், மத்திய செம்பு யுகத்தை சேர்ந்த ஒரு மக்கள் கூட்டம், எங்கிருந்தோ இங்குவந்து ஒரே சமயத்தில் (இறுதி செம்பு யுகத்தில் கி.மு.1550-1200) குடியேறி, பிறகு ஆரம்பக்கால இரும்பு யுகத்தின்போது ஒரு சிறிய நகரை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை உறுதி செய்கிறது" என்கிறார்.

இவ்வாறு, மத்திய செம்பு யுகத்தை தொடர்ந்து (இறுதி செம்பு யுகம் வராமலேயே) ஆரம்பக்கால இரும்பு யுகம் புழக்கத்திற்கு வந்தால், அதை விவிலிய யுகம்/Biblical age என்பார்கள்.
(இங்கு கவனிக்கவேண்டியது, தோரா-யாத்திராகமம் புத்தகத்தின்படி, மோசஸ் மத்திய செம்பு யுகத்தை சேர்ந்தவர். அவரின் தளபதியான ஜோஷ்வாவின் -மோசஸ் சீனாய் தீபகற்பத்திலேயே இறந்துவிடுவதால்- தலைமையில்தான் இஸ்ரயேலர்கள் இப்பகுதிக்குள் -கானான் நிலப்பரப்பு- குடியேறுகிறார்கள்.)

தொல்லியல் சான்று-8:
மேசா கல்வெட்டு. 
இன்றைய ஜோர்டானில், அதன் தலைகரான அம்மானுக்கு தெற்கேயும்
சாக்கடலுக்கு/Dead sea 70கி.மீ கிழக்கேயும்  அமைந்துள்ள திபன் எனும் பகுதியில், கிறுஸ்துவ மிஷனரியை சேர்ந்த ஃபட்ரிக் அகஸ்டஸ் க்ளீன்/Frederick Augustus Klein என்பவரால் கி.பி 1868ல் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு. (பார்க்க படம்-17)
இக் கல்வெட்டு, பிலிஸ்திய மொழியின் வேறு வடிவிலான (பிலிஸ்திய-எபிரேய மொழிகளின் கூட்டு வடிவம்/Proto semetic or proto cananite) எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
மேவாப்-ன் (இன்றைய ஜோர்டானின் ஒரு பகுதி) அரசர் மேசா (காலம் கி.மு. 9ஆம் நூற்றாண்டு) தன் ஆட்சிக்கால முக்கிய நிகழ்வுகளை அக்கல்வெட்டில் குறித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக
இஸ்ரயேலின் ராஜா ஓம்ரி தங்களை அடக்கியாண்டதையும், அவர்களின் அதிகாரத்தை தங்களின் கடவுளான கெமோஷ்-ன் உதவியுடன் தாங்கள்  உடைத்தெறிந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
(இந்த கல்வெட்டின் முழு மொழி பெயர்ப்பையும் பின்னிணைப்பில் இனைத்துளேன்.)
ஓம்ரி, தோரா-2ராஜாக்கள் புத்தகத்தின்படி, கி.மு. 9ஆம் நூற்றாண்டை சேர்ந்த  இரண்டுபட்ட-இஸ்ரயேல்,ஜூதேயா- தேசங்களில் ஒன்றான இஸ்ரயேலின் ஆறாவது ராஜா.

இதன் பொருளடக்கம் குறித்த முக்கியத்துவத்தால் எழுந்த சர்சையை யொட்டி, அடுத்த வருடமே (கி.பி 1869) பானி ஹமீதா எனும் ஜோர்டானில் வசித்து வந்த அரேபிய பழங்குடிளால் அக்கல்வெட்டு  உடைக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே அகஸ்டஸ் க்ளீன் அதை கல்வெட்டு-படிமப்பிரதி எடுத்திருந்தார். உடைந்தது போக மீதி பெரும்பாலான துண்டுகளையும், விடுபட்ட துண்டுகளை- பிரதியிலிருந்து மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட துண்டுகளையும் இணைத்து அக்கல்வெட்டை முழுமையாக்கினர்.

தொல்லியல் சான்று 9:
இம்முறை நமக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் இஸ்ரயயேலர்களின் இருப்புக்கான  ஆதாரம், இஸ்ரேலிய நிலப்பரப்பில் அல்ல. மாறாக எகிப்தில்.
எகிப்தின் பண்டைய தலைநகரான அமர்னா நகரத்தில் கி.பி 1885ல் ஒரு விவசாயி தன் நிலத்தை உழுவதற்கு தோண்டியபோது, சில களிமண் சிலேடுகள் கிடைத்தது. அவை பழமையானவை என தெரிந்தும் உள்ளூர் மக்களால் பல இடங்களில் தோண்டப்பட்டு  கொள்ளையடிக்கப்பட்டு கள்ளச்சந்தைகளில் விற்கப்பட்டது. அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு இதுபற்றி  தெரியவர, உடனடியாக களமிறங்கி சிலவற்றை சேகரித்தும் சிலவற்றை அகழ்வாய்ந்தும் ஓரளவிற்கு  மீட்டெடுத்தனர்.
அவ்வாறு இதுவரை 382 களிமண் சிலேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றுக்கு அமர்னா கடிதங்கள் எனப்பெயர். (பார்க்க படம்-18)
இவை, புதிய எகிப்திய சாம்ராஜ்யத்தை சேர்ந்த 18ஆம் வம்ச பாரோ மன்னர்களான மூன்றாம் அமென்கோதேப், அக்கெனதேன், டுட்டன்காமன் (ஆகியோரின் ஆட்சியாண்டு கி.மு 1393-1323) ஆகியோர்களுக்கும் அவர்களின் கானானிய நிலப்பரப்பின் ஆளுநர்களுக்கும் மற்றும் மெசப்படோமியா போன்ற பிறநாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் இடையே நடைப்பெற்ற இராஜ்ய பரிபாலன தகவல் பறிமாற்றங்களாகும்.
இவற்றில் நாம் கவனிக்கவேண்டியது, கானானிய நிலப்பரப்பின் எகிப்திய ஆளுநர்கள், தங்கள் பாரோ மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களில், எவ்வாறு எபிரேய மக்களால் கானானிய நிலப்பரப்பு கைப்பற்றப்படுகிறது என முறையிடுவதை பற்றித்தான். 
அதில் சிலவற்றை காண்போம்..

(# EA என்பது எல் அமர்னா/El amarna என்பதை குறிக்கும். 
# எண்கள், அடுக்கிவைக்கப்பட்ட கடிதத்தின் எண்களை குறிக்கும். 
# பண்டைய எகிப்தில் அரசர்களையும் கடவுளாக தொழுதார்கள் என்பதால் 'ஆண்டவரே' என்பது பாரோ மன்னரை குறிக்கும். 
இவற்றை மனதில் நிறுத்திக்கொண்டு படிக்கவும்.)

1) EA 286 ஜெருசலேமின் மேயரான அப்டி-ஹெபாவிடமிருந்து ஒரு வேண்டுகோள்: “உங்கள் வேலைக்காரரான அப்டி-ஹேபாவின் செய்தி. … ராஜா தனது நிலத்தை வழங்கட்டும்! மன்னனின் நிலங்கள் அனைத்தும் பாலைவனமாகிவிட்டன. … அனைத்து மேயர்களும் இழந்தனர்; ராஜாவுக்கு இன்னும் ஒரு மேயர் இல்லை, என் ஆண்டவரே. … ராஜாவுக்கு நிலங்கள் இல்லை. அந்த ஹபிரு, மன்னனின் நிலங்கள் அனைத்தையும் கொள்ளையடித்து விட்டான். இந்த ஆண்டு வில்வீரர்கள் இருந்தால், மன்னரின் நிலங்கள், என் ஆண்டவரே இருக்கும்.
2) EA 299 ஜெருசலேமுக்கு மேற்கே அமைந்துள்ள ஒரு கானானிய நகரமான கெசரின் ஆட்சியாளரான யாபாஹுவால் எழுதப்பட்டது: “ராஜாவுக்கு, என் ஆண்டவரே…ஹபிரு நம்மை விட வலிமையானவர்கள், ராஜா, என் ஆண்டவரே, அவருடைய உதவியை எனக்குக் கொடுங்கள், ராஜா, என் ஆண்டவரே, ஹபிரு எங்களை அழித்துவிடாதபடி, ஹபிருவிலிருந்து என்னைக் காப்பாற்றட்டும்."
3) EA 288 இல், ஜெருசலேமின் மேயர் மீண்டும் பாரோவிடம் மன்றாடுகிறார்.  “அரசன் தன் நாட்டைப் பற்றி சிந்திக்கட்டும்; ராஜாவின் நிலம் இழக்கப்படுகிறது. இவை அனைத்தும் என்னைத் தாக்கியுள்ளன. … நான் கடலின் நடுவில் ஒரு கப்பலைப் போல இருக்கிறேன் ... ஹபிரு, அரசனின் நகரங்களையே கைப்பற்றினர். அரசனுக்கு ஒரு மேயரும் இல்லை, அரசே; அனைத்தும் இழந்துவிட்டன”.

இவை சில உதாரணங்கள்தான், இவைபோல பல கடிதங்கள் உள்ளன.
இவற்றில், கானானிய நிலப்பரப்பில் இருந்த அக்கோ, அக்ஹாப், அய்ஜலோன், அஷ்கெலோன், கெஷார், பெத்சேன், பிப்லோஸ், ஹசார், ஹெப்ரான், ஜெருசலேம், லாச்சிஷ், மெகிடோ, ஷெகேம், ஷீலோ, சிடோன் என ஒவ்வொரு எகிப்திய ஆட்சிப்பரப்பும், எவ்வாறு எபிரேயர்களால் கைப்பற்றப்படுகிறது என்பதை விவரிக்கிறது அந்த கடிதங்கள். இதில் ஆச்சர்யமான விஷயம் என்வென்றால், தோரா-வில் அந்தந்த படையெடுப்புகள் எப்படி நிகழ்ந்தன என விவரிக்கிறதோ அதை அப்படியே அமர்னா கடிதங்களும் விவரிக்கின்றன, மிக முக்கியமாக அவற்றின் காலக்கட்டம். இரண்டிலுமே 14ஆம் நூற்றாண்டு.
எபிரேயம்/ஹீப்ரு என்பது அக்காடிய மொழியில் ஹபிரு என மறுவியிருப்பதை மொழியியல் வல்லுநர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
இவ்வாறு, எபிரேயர்களான இஸ்ரயேலர்கள் கானானிய நிலப்பரப்பை கி.மு. 14ஆம் நூற்றாண்டில் வென்று கைப்பற்றியிருக்கிறார்கள் என்பதை அமர்னா கடிதங்கள் சர்வநிச்சயமாக உறுதிசெய்கின்றன.

இப்படியாக தோரா-இஸ்ரயேலர்கள்-யூதர்கள்-இஸ்ரேல் பற்றிய பல தொல்லியல் சான்றுகளும், ஆராய்ச்சிகளும், கோட்பாடுகளும் கொட்டி கிடக்கின்றன. அதில் மிக முக்கியமானவைகளையும், நாம் கையாள்வதற்கு இலகுவானவைகளையும் மட்டுமே நான் இங்கு சமர்பித்திருக்கிறேன்.

(இஸ்ரேலில் மட்டும் 30,000 இடங்கள் பழமையானவையாக, அகழ்வராய்ச்சிக்கு உகந்ததாக அடையாளம் கண்டிருக்கிறார்கள். இதில், மிக மிக சொற்பமான இடங்களிதான் இதுவரை அகழ்வாய்வு நடந்திருக்கிறது.)

இப்படியாக, எகிப்தில் சில நூற்றாண்டுகள் வாழ்ந்து ஓருகட்டத்தில் வெளியேறிய செமட்டிக் மக்களான எபிரேயர்கள், சிலகாலம் சீனாய் தீபகற்பத்தில் வாழ்ந்து, பின் கானானிய நிலப்பரப்பில் குடியயேறியது என்பது கிடைக்கப்பெற்ற தொல்லியில் சான்றுகளால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த இஸ்ரயேலிய/எபிரேய செமட்டிக் மக்கள்தான் யூதர்கள்தானா? என்பதில்தான் சில குழப்பங்கள் உள்ளது.

நிச்சயமாக அது யூதர்கள்தான். எவ்வாறு???
"அந்த செமட்டிக் மக்கள் கூட்டம் நாங்கள் தான்" என யூதர்களான இஸ்ரயேலர்களை தவிர வேறு யாரும் கூறிக்கொள்ளவில்லை, குறிப்பாக பாலஸ்தீனியர்கள் என அறியப்படும் மக்கள்.
'Benefit of the doubts'/சந்தேகத்தின் பலனை சம்மந்தப்பட்டவருக்கு வழங்கும் நீநியைத்தான் இங்கும் நாம் நிலைநிறுத்த வேண்டும்.
மேலும் இஸ்ரயேலர்களுக்கு வலு சேர்க்கும் விதமாக இந்த அனைத்து சம்பவங்களையும், ஒவ்வொரு பகுதியாக தொடர்ச்சியாக விவரிக்கும் யூத வேதநூலான தோரா/பைபிளின் பழைய ஏற்பாடு இருக்கிறது.
ஆனால் என்ன? அவை வரலாற்றின் காலவரிசையோடு மாறுபடுகிறது.

இதை புரிந்துகொள்ள, 
பொதுவாக ஒரு தொன்மக்கதை அல்லது புராணம் எவ்வாறு உருவாகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அது (தொன்மக்கதை/புராணம்) படிப்படியாக காலக்கிரமமாக, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தனிநபராலோ அல்லது ஒரு குழுவாலோ நாட்குறிப்பு போல பதியப்படுவதில்லை.
அதேசமயம், அது எதோ ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தனிநபராலோ அல்லது ஒரு குழுவாலோ ஒரே சமயத்தில் திரைப்படத்திற்கு கதை எழுதுவது போல விருவிருவென எழுதப்படுவதும் இல்லை.
மாறாக, அது வரலாற்றின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அம்மக்களின் அகச்சூழல், புறச்சூழல், நம்பிக்கை ஆகியவை, வரலாற்றினூடே வாய்வழி கதைகளாக ஒவ்வொரு தலைமுறையிலும் வழங்கப்படுவதோடு, தலைமுறை தலைமுறையாக கடத்தவும்படுகிறது.
அதனால்தான் இம்மாதிரியான தொன்மக்கதை/புராணங்களில் உண்மை வரலாறும் இழைந்தோடுகிறது.
பிறகு இந்த ஒட்டுமொத்த கதைகளும் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் ஒன்றோடு ஒன்றை இணைத்து, தனிநபராலோ அல்லது குழுவாலோ தொகுக்கப்படும். 
குறிப்பாக இது எழுத்து-வரிவடிவம்- முறை உருவானப்பின் பெரும்பாலும் நடைபெறும். இன்னும் குறிப்பாக, இலக்கியம் அதன் உச்சநிலைய தொடும்போது, இலக்கிய வர்ணனைகள் மிகுதியாகி அக்கதையின் நம்பகத்தன்மையை (இன்றைய அறிவியல் உலகத்தில்) கேள்விக்குறியாக்கி விடும்.
உதாரணமாக, இராமாயணம் மகாபாரதம் மற்றும் கிரேக்க காவியங்களான ஹோமர், ஒடிசி.
இவற்றை எழுதிய ஆசிரியர்கள் எவரும், அவர்களின் எழுத்துக்களில் விவரித்த அனைத்து பிரதேசங்களையும் அதன் மக்களையும் கண்கூடாக பார்த்திருக்க முடியாது. அவர்களால் மட்டுமல்ல எந்தவொரு ஒரு தனிநபராலும், அவர் வாழ்நாட்களுக்குள்ளாகவே அவ்வாறு முடியாது. 
ஏற்கனவே வழங்கிவந்த வாய்வழி கதைகளை, இலக்கிய நயத்தோடு தொகுக்க மட்டுமே முடியும்.
அதுவும்கூட, பின்வரும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அன்றைய அகச்சூழல், புறச்சூழல், புதிய நம்பிக்கை ஆகியவையும் கலந்து பின்வருபவர்களால் மெருகேற்றப்பட்டும், சிலசமயங்களில் திரிக்கப்பட்டும் வரும்.

தோரா-வை பொருத்தவரை கி.மு. 1500ல் தொடங்கி வழங்கிவந்த வாய்வழி கதைகள், கி.மு. 300க்குள்ளான ஏதோ ஒரு  காலக்கட்டத்தில் தொகுக்கப்பட்டு முழுமையாக வடிவம் பெற்றிருக்கவேண்டும் என்பதை அனேக வரலாற்று அறிஞர்களும் உறுதி செய்திருக்கிறார்கள். 
இதற்கு வரலாற்று சான்றாவணங்களாக இரண்டை கூறலாம். 
1)சாக்கடல் சுருள்கள். (பார்க்க படம்-19)
சாக்கடல் சுருள்கள்/Dead sea Scrolls என்பது இன்றைய இஸ்ரேலிய-பாலஸ்தீன மேற்கு கரை என அறியப்படும் சாக்கடல் கரையில் உள்ள ஈன் அஃபெஷ்கா-Ein feshka எனும் தொல்லியல் தளத்திற்கு அருகேயுள்ள கும்ரான் குகைகளின் (பார்க்க படம் 20)
ஒன்றில், கி.பி1946-1956களில்  கண்டெடுக்கப்பட்ட சுருள்கள். 
இதில் யூதர்களின் முழு வேத நூள்களும் (TaNaK) கையெழுத்து பிரதிகளாக எபிரேய மொழியில் உள்ளது. இது கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என தொல்லியல் அறிஞர்கள் அறுதியிட்டு கூறியிருக்கிறார்கள்.
2) கி.மு மூன்றாம் நூற்றாண்டில் கிரக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட செப்துவசிந்தா இருக்கிறது.
அதனால் தோரா-வில் (ஒட்டுமொத்த TaNaK) விவரிக்கப்படும் எந்தவொரு சம்பவமும் நிச்சயமாக கி.மு மூன்றாம் நூற்றாண்டிற்கு பிறகு எந்தவொரு மாற்றத்தையும் கொண்டதல்ல என திடமாக நம்பலாம்.

சரி, தோராவின் நிகழ்வுகளை நாம் எவ்வாறு புரிந்துகொள்ளலாம்???
கிடைக்கப்பெற்ற தொல்லியல் சான்றாவணங்களை மூலாதாரமாக கொண்டு 'வரலாற்று-பொருள் முதல்வாதம்' கோட்பாட்டை உள்வாங்கிக்கொண்டு,  காலக்கிரமமாக வரிசைபடுத்தி புரிந்துகொள்ள முடியும். 

அது பின்வருமாறு :-
எகிப்தில், புலம்பெயர்ந்து (கி.மு. 1900 வாக்கில்) வாழ்ந்து வந்த ஒரு செமட்டிக் மக்கள் கூட்டம், அவர்களின் அரசியல் குறுக்கீடு/ ஆட்சியதிகாரம் காரணங்களால், எகிப்திய பாரோ முதலாம் அக்மோஸ் மன்னர் (ஆட்சியாண்டு கி.மு 1549-1524) காலத்தில் விரட்டியடிக்கப்பட்டு (தொல்லியல் சான்று 2-ன்படி)
அன்றைய கானான் தேசத்தில் புலம்பெயர்ந்து இருக்க வேண்டும். 
இக்கூட்டம் எபிரேயர்களா அல்லது பிலிஸ்தியர்களா என்பது வரையறுக்க முடியாத ஒன்று.
ஆனால், வரலாற்றில் இச்சம்பவம் தோரா-யாத்ராகமம் புத்தகத்தின்படி மோசஸ் காலத்தில் நிகழ்ந்திருக்க முடியாது. 
ஏனெனில் அப்போது மோசஸ் என்ற நபர்/கதாபாத்திரம் மட்டுமல்ல, தோரா-யூதமதம்-அதற்கு அடிப்படையான ஒருதெய்வ வழிபாடு என எதுவுமே பிறந்திருக்க முடியாது.
ஒருவேளை, மோசஸ் என்ற நபர் உண்மையில் இருந்திருந்து, முதலாம் அக்மோஸ் மன்னரால் விரட்டியடிக்கப்பட்ட அந்த செமட்டிக் மக்கள் கூட்டத்திற்கு, அவர்  தலைமைதாங்கி கானானிய நிலப்பரப்புக்கு அழைத்துச்சென்று இருக்கலாம். ஆனால் அந்த மோசஸ்,  தோரா-யாத்திராகமம் புத்தகத்தில் விவரிக்கப்படும் சர்வ வல்லமை பொருந்திய இறைதூதர் மோசஸ் இல்லை. 

ஒருவேளை, தோரா-யாத்திராகம மோசஸ் என்பவர்  'தொல்லியியல் சான்று 1'ல் நாம் பார்த்தபடி, பாரோ மன்னர் அக்கெனதேன் காலத்திய (கி.மு 1351-1334) பிரதம அமைச்சரான Aper El/ஏப்ரேயல்-ஆக இருக்குமோ? என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் ஏப்ரேயல் எகிப்திலேயே இறந்து, புதைக்கப்பட்டும் விட்டார். 
ஆனால், அந்த ஏப்ரேயல்-லின் அடையாளத்தை, தோரா-யாத்திராகம மோசஸ் தாங்கி நிற்கிறார் என்றால் அது மிகையாகாது.

ஏனெனில், எகிப்திய சான்றாவணங்களில் ஒரே ஒரு செமட்டிக் மனிதர்தான், பிரதம அமைச்சராகவும் அரண்மனை குழந்தையாகவும் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்.
ஆனால் தோரா, அந்த ஒரு செமட்டிக் மனிதரை (AperEl/ஏப்ரேயல்) இரண்டு நபர்களாக (யோசேப்பு மற்றும் மோசஸ்) விவரிக்கிறது.
எனவே,தோரா-யாத்திராகம மோசஸ் குறித்த அனைத்து அலங்காரங்களும் பின்னிணைப்பில் முன்னிணைப்பாக சேர்க்கப்பட்டவையே என திடமாக கூறலாம்.
இது எப்போது நிகழ்திருக்கும்?

எகிப்திய பாரோ மன்னர் மெர்னப்தா காலத்தில் (கி.மு 1213-1203) வெற்றிகொள்ளப்பட்ட இஸ்ரயேலர்கள் அல்லது எகிப்திய பாரோ மன்னர் மூன்றாம் இராம்சே காலத்தில் (கி.மு 1186-1155) வெற்றிகொள்ளப்பட்ட பினிசியர்கள் ஆகியவர்கள், கானானிய நிலப்பரப்பிற்கு திரும்பியபோது (இவர்களின் ஒரு கூட்டமோ அல்லது கூட்டத்திற்கு ஒன்று வீதமாகவோ)  எகிப்தில் பாரோ மன்னர் அக்னெதேன் அமல்படுத்திய ஒருதெய்வ வழிபாட்டையும், அவரின் பிரதம அமைச்சரான ஏப்ரேயல்-லையும் கொன்டு சென்றிருக்க முடியும். 
அதுவே மோசஸ் கதாபாத்திரமாக -ஓர்இறை கொள்கையை வகுக்கும் கதாபாத்திரம்- உருவெடுத்திருக்கும்.
இக்கூற்றுக்கு வலுசேர்க்க, நாம்  தோரா-வில் கொஞ்சம் ஓளிபாய்ச்சி தேடலாம்.
தோரா-ஆதியாகாமம், யாத்ராகமம் புத்தகங்களின்படி,
கடவுள் ஏற்கனவே மோசஸின் முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக் மற்றும் யாக்கோபு ஆகியவர்களிடம் பேசியிருந்தாலும், மோசஸிடம் மட்டுமே தன்னை யாரென்று வெளிப்படுத்துகிறார். 
"சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன். ஆனாலும் 'யேகோவா' என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை". 
(யாத்திராகமம் 6:3)

இதிலிருந்து, மோசஸ் கதாபாத்திரம்தான், யுதர்களின் கடவுளான யாகோவா-வை முன்மொழிகிறது எனத்தெளிவாகிறது. 
எகிப்திய பாரோ அக்கெனதேன் மன்னர் எகிப்தில் அமல்படுத்திய ஒருதெய்வ வழிபாட்டைத்தான், இஸ்ரயேலர்கள் பிற்காலத்தில் தன்வயப்படுத்திக் கொண்டார்கள் ஏனைய வரலாற்றாளர்கள் கூறினாலும், அவர்கள்  கவனிக்க தவறிய ஒரு சில விஷயங்களை இங்கு நான் சுட்டிக்காட்ட  விரும்புகிறேன்.
தோரா-வில் கடவுள், மோசஸிற்கு முன்பே ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு/இஸ்ரயேல்  ஆகியவர்களிடம் பேசியிருந்தாலும், மோசஸிடம் மட்டுமே நெருப்பின் ஊடாக  பேசுகிறார். (ஏனையவர்களுக்கு கடவுளின் குரல் அசிரீரியாகவே கேட்கிறது)
அதாவது கடவுளுக்கும் மோசஸிற்கும் ஒரு ஊடகமாக நெருப்பு இருக்கிறது. 
இது ஒரு புதிய தொடக்கம்.
இதை எகிப்திய பாரோ அக்கெனதேன் அமல்படுத்திய ஒர்இறையான சூரியக்கடவுள்-நெருப்பு- உடன் தொடர்புப்படுத்தி பார்க்க முடியும். அதேப்போல, என்னதான் கடவுளின் ஆணைப்படி மோசஸ் இஸ்ரயேலர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தாலும், அதே இஸ்ரயேலர்கள்தான் மோசஸை ஒவ்வொரு தருணத்திலும் கடிந்துகொண்டும் நம்பிக்கையில்லாமலும் உடன் வருகிறார்கள் என்பதை தோரா-யாத்திராகமம் புத்தகம் முழுவதிலும் நாம் பார்க்க முடிகிறது.
அதாவது மோசஸை தவிர பிற இஸ்ரயேலர்கள், மோசஸ் கூறும் கடவுளை நம்பவில்லை அல்லது வணங்கியிருக்கவில்லை என்பது மறைமுகமாக தெளிவாகிறது.
இவையாவும், மோசஸ் கதாபாத்திரம்தான் இஸ்ரயேலர்களுக்கு ஓர்இறையான 'யகோவா'-வை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் கட்டாயப்படுத்தியது என திடமாக கூறலாம்.
மேலும், இஸ்ரயேலர்களுக்கு கடவுளால்  அறிவுறுத்தப்படும் புளிக்காத அப்பம் என்பது 'ஒருபுதிய' என்பதன் குறியீடாக  (பழைய கடவுள்களை விடுத்து ஒரு புதிய கடவுள்) நாம் பார்க்க வேண்டும்.
அதுபோலவே, அந்த எகிப்திய செமட்டிக் அமைச்சரான ஏப்ரேயல்/Aper El-இன் மனைவியின் பெயர் தாவரீத்/Tawreet என்பதையும், இனப்பெருக்கம், மகப்பேறு என்பவற்றுக்கு பண்டைய எகிப்தில்  Tawreet என்றொரு பெண் கடவுள் இருந்துள்ளார் என்பதையும் இங்கு தொடர்புபடுத்தி, தோரா என்பது ஒரு புதிய நம்பிக்கை பிறப்புக்கான அஸ்திவாரம் என்பதாக Tawreet-Torah ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

இந்த மோசஸ் கதாபாத்திரம் எப்போது உருவெடுத்திருக்கும் ?
தோரா-சாமுயேல் புத்தக காலமான கி.மு 11ஆம் நூற்றாண்டில் உருவெடுத்திருக்கும். அதற்கான காரணங்களாக நான் பார்ப்பவை இரண்டு.
1) தோரா / சாமூயேல் புத்தகத்தின் படி, இஸ்ரயேலர்களின் 12 குலத்தவர்களும் தங்களுக்கென ஒரு -ஒன்றுபட்ட- இராஜ்ஜியமும் மன்னரும் வேண்டுமென சாமூயேலிடம் முறையிடுவதை நாம் ஏற்கனவே பார்த்தோம். 
அதாவது, இத்தருணத்தில் ஒரு பொது அரசு உருவாகிறது. 
பல்வேறு இனக்குழுக்களுக்கென தத்தமது  சிறு தெய்வங்களும்,  குலதெய்வங்களும் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைவருக்குமான ஒரு பொது தெய்வம் -பெரு தெய்வம்- இல்லாவிட்டால் அங்கு பொது அரசு அமையாது என்பது ஒரு வரலாற்று கோட்பாடு. 
2) தோரா/சாமூயேல் புத்தகக்காலத்தில், இஸ்யேலர்களின் நாட்டை தாக்க கோலியாத் தலைமையிலான பிலிஸ்தியர்கள் வருகிறார்கள். இஸ்ரயேலின் மன்னரான சவுல்-லின் ஒரு படைவீரரின் தம்பி தாவீது, ஒரு உண்டிவில்லை வைத்து கோலியாத்தை வீழ்த்திவிடுவார்.
நன்றாக கவனியுங்கள், அங்கு இருதரப்பினருக்குமான ஒரு பரந்துப்பட்ட போர் நடக்கவில்லை. மாறாக ஒற்றைக்கு ஒற்றையென ஒரு அடையாளச் சண்டை மட்டுமே நடக்கிறது.
பெரிய உயிர்ச்சேதம் எதுவுமில்லாத ஒரு போராக/பலப்பரீட்சையாக தோரா-வில்  விவரிக்கபடுவது, மறைமுகமாக ஒரு சமாதான உடன்படிக்கையே ஆகும்.
இவ்வாறு போரில் வென்றவர்களும் தோற்றவர்களும் காலப்போக்கில் 
பரஸ்பரம் உறவாட ஆரம்பித்து இருப்பார்கள்.
இதற்கு ஆதாரமாக தோரா-விலேயே மறைமுக சான்றுகள் இருக்கிறது. 
பிலிஸ்தியர்களும், இஸ்ரயேலர்களான   எபிரேயர்களும் பங்காளிகள்.
தோரா-ஆதியாகமம் புத்தகத்தின்படி
ஆதாம்-ஏவாளின் பத்தாம் தலைமுறை வாரிசான நோவாவிற்கு மூன்று புதல்வர்கள். அவர்கள் யாத்தோப், காம், சேம்.(தோரா-ஆதியாகமம் 10:1)
காமின் வம்சாவழியினர், முறையே  காம்-மிஸ்ராயீம்-கஸ்லூகீம் வழியாக பிலிஸ்தியர்கள். 
(தோரா-ஆதியாகமம் 10:6,13,14) 
சேமின் வம்சாவழியினர், முறையே  சேம்-அர்பக்சாத்-சாலா-ஏபேர்-பேலேகு-ரெகூ-செரூகு-நாகோர்-தேராகு-ஆபிரகாம் வழியாக எபிரேயர்களான இஸ்ரயேலர்கள்.
(தோரா-ஆதியாகமம் 10:10-27)

உண்மையில் காமின் வம்சாவழியினரான பிலிஸ்தியர்களும் சேமின் வம்சாவழியினரான எபிரேயர்களும் பங்காளிகளா?
வரலாற்றில் அப்படி நேரிடையான ஒரு குறிப்பு இல்லையென்றாலும் பிலிஸ்திய மொழிக்கும் எபிரேய மொழிக்கும் தாய் மொழியாக ஒன்று இருந்தது, அதை ப்ரோடோ செமட்டிக்/Proto Sematic என்பார்கள்.
ஆப்பிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தின் ஆறு கிளைகளில் ஒன்று செமட்டிக்.
செமட்டிக் மொழிக்குடும்பத்தின்  உட்பிரிவுகளில் உள்ள மத்திய செமட்டிக், வடமேற்கு செமட்டிக் ஆகியவைகளுக்கு தாய் மொழியாக ஒன்று உண்டு, அதை ப்ரோட்டோ செமட்டிக் அல்லது
கானானிய மொழிக்குடும்பம் என்பார்கள். அதில் ஐந்து உட்பிரிவுகள் உள்ளது.
1)ஹீப்ரு
2)பினிசியன் அல்லது பிலிஸ்தியா அல்லது பியுனிக்
3)அம்மோனைட்
4)மோவாபிட்
5)எடோமைட் 

அந்தவகையில் மொழிரீதியான  இனவரைவியலில், பிலிஸ்தியர்களும் எபிரேயர்களும் பாங்காளிகள்தான்.
இதை தோரா-வும் கூறுகிறது.
"அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது. அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள். இப்பொழுதும் தாங்கள்செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்". 
"நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்".
(தோரா-ஆதியாகமம் 11:6,17)
இரண்டு இனங்கள் இரண்டற கலக்கும்போது, இரண்டையும் இணைக்கூடிய இணைப்புச்சங்கிலியாக ஒரு தொன்மக்கதை புனையப்படும் என்பது இனவரைவியலின் விதி. அதுதான் தோராவில் பிரதிபலிக்கிறது.

இவ்வாறாக போரில் தோற்ற பிலிஸ்தியர்களும், வென்ற எபிரேயர்களும் இரண்டற கலக்கவேண்டுமானால் ஒருவர்  மற்றொருவரின் கடவுளை ஏற்கவேண்டும் அல்லது பரஸ்பரம் அவரவர் கடவுள்களும் ஒன்றாக இணையவேண்டும். 
ஆனால், இதற்கு மாறான விதி ஒன்றும் உள்ளது. அது அவரவர் சிறுதெய்வ வழிபாட்டை விடுத்து இருவருக்குமான -ஒரே பொதுகடவுளாக- ஒரு புதிய பெருதெய்வ வழிபாடு பிறக்கவேண்டும்.
அதுதான் நடந்தது. அந்த பெருதெய்வம்தான் யாகோவா. 
அவரை வணங்குவோர் யூதர்ககெளன புதிய மதமானார்கள்.
அப்படியென்றால், தோரா ஏன் எபிரேயர்களான இஸ்ரயேலர்களை மட்டுமே தன்னகப்படுத்துகிறது? ஏன் பிலிஸ்தியர்களை விட்டுவிடுகிறது?
இதற்கான காரணங்கள்...
ஒட்டு மொத்த பிலிஸ்தியர்களும் எபிரேயரோடு இரண்டற கலக்கவில்லை. அதில் ஒரு சாரார் தான் கலந்திருக்க வேண்டும்.
பிலிஸ்தியருக்கென தனிபட்ட கலாச்சாரம் ஏதும் இல்லை என்பதையும் அவர்கள் வாழும் பிராந்தியத்திற்கு எற்ப தங்களை மாற்றிக்கொள்வார்கள் என்பதையும் வரலாற்றாளர்கள் கூற நாம் ஏற்கனவே பார்த்தோம். அதனால், எபிரேயரோடு கலந்த அந்த சிறு கூட்டத்தினால் தங்களை முன்னிலைப்படத்த முடியாமல் போயிருக்கலாம். 
அதுபோல, வரலாற்றில் பிலிஸ்தியர்களுக்கு இருந்த 'ஏமாற்றுக்காரர்' என்ற அடையாளத்தை துறக்க, அந்த சிறு கூட்டம் முற்பட்டும் இருக்கலாம்.
இதை புரிந்கொள்ள நாம் தோரா-ஆதியாகமத்தை கொஞ்சம் பார்ப்போம்.
தன் அண்ணனை ஏமாற்றிய ஒரு ஏமாற்றுக்காராரான யாக்கோபு பின் கடவுளிடம் போராடுபவர் என பொருள்கொள்ளுமாறு கடவுளால் இஸ்ரயேல் என பெயர் மாற்றம் பெறுகிறார். (தோரா-ஆதியாகமம் 32:28)
அதாவது மேன்மையானவராக மாறுகிறார்.

இங்கு  இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.
தோரா-வில் இஸ்ரயேல் என்ற பெயர் 2500தடவைக்கு மேல் குறிக்கப்படுகிறது.
ஆனால் எபிரேயர் என்ற பெயர் 34தடவைதான் குறிக்கப்படுகிறது.
ஆதாவது யூத மதத்திற்கான அளவுகோலாக எபிரேயர் என்பதைவிட பன்மடங்காக இஸ்ரயேலர் அடையாளப்படுத்தப்படுகிறது.
எபிரேயர் என்ற அடையாளம் புறச்சூழலிலும், இஸ்ரயேலர் என்ற அடையாளம் அகச்சூழலிலும் தோரா-வில் கையாளப்படுகிறது. 
எனவே அகச்சூழலில் இஸ்ரயேலர் என்ற அடையாளமே போதுமானதாகவும், எபிரேயர்-பிலிஸ்தியர் என்ற பாகுபாடு தேவையற்றதாகவும் இருந்திருக்கூடும்.
இஸ்ரயேலர்கள் பிலிஸ்தியர்களை மட்டுமே தங்களுடன் இணைத்துக்கொள்ளவில்லை.
மாறாக, தோரா-சாமுயேல் புத்தகத்தில் விவரிக்கப்படும் யாக்கோபு/இஸ்ரயேலின் புதல்வர்களின் வம்சாவழியினர் என  குறிக்கப்படும் 12 இஸ்ரயேலிய குலத்தவர்களும் உண்மையில் கானானிய நிலப்பரப்பின் பழங்குடிகளாக இருக்கவேண்டும். அவர்களை இஸ்ரயேலிய வம்சாவழியனர்  எனக்கூறுவதன் மூலமாக, தாங்கள் அவர்களில் ஒருவராகவும், அவர்கள் தங்களின் அங்கத்தினராகவும் இணைக்கும் ஒரு தொன்மக்கதையை உருவாக்க முடியும். பலதலைமுறைகளுக்குப் பின்வருபவர்கள், இந்த இணைப்புச்சங்கிலியான புனையப்பட்ட தொன்மக்கதையை அவர்களின் தன்வரலாறாக மதிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதைத்தான் தோரா செய்திருக்கிறது.

(மேற்கூறிய யாவும் முழுக்க முழுக்க என் தனிப்பட்ட அனுமானங்களே. எதேனும் ஒரு வரலாற்று அறிஞர் இதற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ இதே கூற்றை கூறுகிறார் என்றால், அது ஒரு கோட்பாடாக உருவெடுப்பதோடு ஒரு வரலாற்று ஆர்வலனான என்னை ஊக்குவிக்கும்.)

ஆனால், இந்த இஸ்ரயேலர் என்ற கூட்டுக்குள் சேராத அல்லது சேர விரும்பாத பிலிஸ்தியரின் பெருங்கூட்டம் கடைசி வரை (அதாவது தோரா-சகாரியா புத்தக காலமான கி.மு 5ஆம் நூற்றாண்டுவரை) இஸ்ரயேலர்களின் எதிகளாகவே தோரா-வில் பாவிக்கப்படுகின்றனர்.
இந்த பெருங்கூட்டம் எவ்வாறு, பாபிலோனிய எகிப்திய கிரேக்க ரோமானிய படையெடுப்புகளில் படிப்படையாக தங்ளை இழந்து வரலாற்றில் தடம் தெரியாமல் போனார்கள் என்பதை வரலாற்றார்கள் விளக்க நாம் பார்த்தோம்.
அப்படியானால், அந்த அடையாளம் இழந்த பினிசியர்கள் அல்லது பிலிஸ்தியர்கள்தான் இன்றைய பாலஸ்தீனர்களா? என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.
ஆனால், நான் ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
நாம் இக்கட்டுரையின் தொடக்கத்திலேயே, முழு இஸ்ரேல் வரலாற்றையும் நாம் மூன்று தலைப்பின்கீழ் 
வரையறுத்துக்கொண்டோம்.
அதில் முதல் தலைப்பான 'தேசம்' என்பதைத்தான் இதுவரை பார்த்திருக்கிறோம்.
மீதமுள்ள இரண்டு தலைப்புகளில், இன்றைய பாலஸ்தீனர்களை பற்றி தேடுவோம்...

எனவே, பொறுத்தார் பூமி ஆள்வார்..

அதுவரை என் தேடலும் உங்கள் காத்திருப்பும் - தொடரும்....

                           -மதன்கார்த்திக்
                            புதுச்சேரி.

(பின்னிணைப்பு : மேசா கல்வெட்டு....

நான் மேஷா, கெமோஷ்-காதின் மகன், மோவாபின் ராஜா, திபோனியன். என் தகப்பன் மோவாபை முப்பது வருஷம் அரசாண்டான்; இரட்சிப்பின் சரணாலயமான கர்ச்சாவில் நான் கெமோஷுக்கு இந்த சரணாலயத்தை கட்டினேன் , ஏனென்றால் அவர் என்னை எல்லா ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தும் காப்பாற்றினார், மேலும் என் எதிரிகள் அனைவரையும் அவமதிப்புடன் பார்க்க வைத்தார்.
ஓம்ரி இஸ்ரவேலின் ராஜாவாக இருந்தான், பல நாட்கள் மோவாபை ஒடுக்கினான், அவனுடைய ஆக்கிரமிப்புகளால் கெமோஷ் கோபமடைந்தான். அவனுடைய மகன் அவனுக்குப் பின் வந்தான், நான் மோவாபை ஒடுக்குவேன் என்றான். என் நாட்களில் அவன்: நாம் போகலாம், அவன் மீதும் அவன் வீட்டார்மேலும் என் ஆசையைக் காண்பேன் என்று சொன்னார், இஸ்ரவேல்: நான் அதை என்றென்றும் அழித்துவிடுவேன் என்றான். இப்போது ஒம்ரி மதேபாவின் தேசத்தைக் கைப்பற்றி, தன் நாளிலும், அவனுடைய மகனின் நாட்களிலும், நாற்பது வருஷம் அதை ஆக்கிரமித்துக்கொண்டான். என் காலத்தில் கெமோஷ் அதற்கு இரக்கம் காட்டினார். நான் பால்மெயோனைக் கட்டி, அதில் பள்ளத்தை உண்டாக்கி, கிரியாத்தீமைக் கட்டினேன்.
காத் மக்கள் பண்டைய காலங்களிலிருந்து அதாரோத் நாட்டில் குடியிருந்தார்கள், இஸ்ரவேலின் ராஜா அதாரோத்தை கோட்டைப்படுத்தினார். நான் சுவரைத் தாக்கி, அதைக் கைப்பற்றி, கெமோசுக்கும் மோவாபினருக்கும் பிரியமானதற்காக நகரத்தின் எல்லாப் போர்வீரர்களையும் கொன்று, அதிலிருந்து கொள்ளையடித்த அனைத்தையும் அகற்றி, கீர்யாத்தில் உள்ள கெமோசுக்கு முன்பாகக் கொடுத்தேன். சீரானின் ஆட்களையும் மோக்ராத்தின் ஆட்களையும் நான் அதில் வைத்தேன். கெமோஷ் என்னை நோக்கி: நீபோ இஸ்ரவேலுக்கு விரோதமாகப் போ, நான் இரவிலே போய், பொழுது விடிந்ததுமுதல் மதியம் வரை அதற்கு விரோதமாகப் போரிட்டு, அதைப் பிடித்தேன்; ஏழாயிரம் ஆண்களையும்... பெண்களையும் கன்னிகளையும் கொன்றேன். , நான் அவர்களை அஷ்டார்-கெமோசுக்கு அர்ப்பணித்தேன்; நான் அதிலிருந்து யெகோவாவின் பாத்திரங்களை எடுத்து, கெமோஷுக்கு முன்பாகக் கொடுத்தேன்.இஸ்ரவேலின் ராஜா யஹாஸைக் கோட்டையாக்கி, அதை ஆக்கிரமித்து, அவன் எனக்கு விரோதமாக யுத்தம்பண்ணும்போது, ​​கெமோஸ் அவனை எனக்கு முன்பாகத் துரத்திவிட்டான்; நான் மோவாபிலிருந்து மொத்தமாக இருநூறு பேரை அழைத்து, அவர்களை யாகாசில் வைத்து, அதைக் கைப்பற்றினேன் . டிபனுக்கு.
நான் கர்ச்சாவை காட்டின் சுவரையும், மலையின் சுவரையும் கட்டினேன். நான் அதன் வாயில்களைக் கட்டினேன், அதன் கோபுரங்களையும் கட்டினேன். நான் ராஜாவின் அரண்மனையைக் கட்டினேன், சுவருக்குள் குற்றவாளிகளுக்குச் சிறைச்சாலைகளை உருவாக்கினேன். மேலும் கர்ச்சாவில் சுவரின் உட்புறத்தில் கிணறுகள் இல்லை. நான் எல்லாரையும் நோக்கி, 'நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிலுள்ள கிணற்றை உண்டாக்குங்கள்' என்றேன். நான் இஸ்ரவேலின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்களைக் கொண்டு கர்காவுக்கு பள்ளம் தோண்டினேன். நான் ஆரோவேரைக் கட்டினேன், அர்னோனின் குறுக்கே சாலையை அமைத்தேன். பெத்பாமோத்தை நான் கட்டினேன், அது அழிக்கப்பட்டது. நான் பெசரைக் கட்டினேன், ஏனென்றால் அது டேபனின் ஆயுதமேந்திய ஆட்களால் வெட்டப்பட்டது, ஏனென்றால் டேபன் அனைவரும் இப்போது விசுவாசமாக இருந்தார்கள்; நான் பிக்ரானில் இருந்து ஆட்சி செய்தேன், அதை நான் என் நிலத்தில் சேர்த்தேன். நான் பெத்காமுலையும், பெத்-திப்லாத்தீமையும்...பெத்பால்-மெயோனையும் கட்டி, தேசத்தின் ஏழைகளை அங்கே வைத்தேன்.

ஹொரோனயீமைப் பொறுத்தவரை, ஏதோமின் மனிதர்கள் பூர்வ வம்சத்தில் குடியிருந்தார்கள். கெமோஸ் என்னை நோக்கி: நீ இறங்கி, ஒரோனயீமுக்கு எதிராகப் போர் செய்து, அதைப் பிடி என்றான். நான் அதைத் தாக்கினேன், நான் அதை எடுத்தேன், ஏனென்றால் என் நாட்களில் கெமோஷ் அதை மீட்டெடுத்தார். அதனால் நான் செய்தேன்....)

Comments

Popular posts from this blog

கேரளாவின் சேரமான் ஜும்மா பள்ளிவாசல் கி.பி. 612ல் கட்டப்பட்டதா?!

மாமேதை அம்பேத்கரின் 'நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன்'.