மனுதர்மம் பற்றி திருமாவளவன்.

பெண்கள் அனைவரும் பரத்தைகளாக, வேசிகளாக படைக்கப்பட்டிருக்கிறார்கள் என இந்துமதத்தின் மனு தர்மம் கூறுகிறது " - திருமாவளவன்.

தமிழ் கூறும் நல்லுகுக்கு வணக்கம்...

திருமாவளவனின் இந்த பேச்சுக்கு எந்தவித விமர்சனத்தையும் வைக்காமல் நாம் நேரடியாக மனுதர்மத்துக்கு சென்றுவிடுவோம்.
ஏனெனில் ஒரு ஆய்வு கட்டுரை, விமர்சனம் செய்துவிட்டு பிறகு ஆய்வை தொடங்கினால், அது கற்பிதமாக ஆகிவிடும் என்பது என் தனிப்பட்ட கூற்று...

(முன்குறிப்பு :- மனுதர்மம் எழுதப்பட்ட காலம் இன்றிலிருந்து குறைந்தபட்டசம் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என வரலாற்று அறிஞர்கள் கணித்திருக்கிறார்கள் .
என்னைப்பொருத்தவரை, அது 4000 வருடங்களுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும், ஏனெனில் பிரகஸ்பதியே இதற்கு வியக்கியானம் செய்துள்ளார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நூல், சமஸ்கிருத மொழி விற்பன்னர்  திருலோக சீதாராம் தமிழில் மொழிபெயர்த்த 'மனுதர்ம சாஸ்திரம்'.)

பெண் கற்பு பற்றி மனுதர்மத்தில், அத்தியாயம் 9 (ஆண் பெண்களின் அறம்) சுலோகங்கள் 15, 16, 17, 18 களில் மனு சர்ச்சைக்குரியவாறு குறிப்பிடுகிறார்(?!)..
ஸ்லோகங்கள் 19, 20 ஆகியவற்றை அவருடைய கூற்றாக கொள்ளக்கூடாது, அவை மேற்கோள் மட்டுமே.

மனுதர்மம் 9:15 - " நிறை பிறழ்தலும், நிலையில் மணமும், நண்பின்மையும் மாதர்தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றி புரக்கப்படும்போதும், அவர்கள் கணவனின் காவலை விரும்புவதில்லை; 

மனுதர்மம் 9:16 - இவ்வித இயல்புகள் மாதர்க்கு பிறப்புடன் வருவதாகயால் மாதர் ஒழுக்கம் கேடுறுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது;

மனுதர்மம் 9 :17- படுக்கை ஆதனம் அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்;

மனுதர்மம் 9:18 - மாதர்க்கு பிறவியை தூயதாக்கும் சம்காரங்கள் மந்திர பூர்வமாக செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளை உள்ளமும் இல்லை பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யை போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர்;

இந்த நான்கு ஸ்லோகங்களை மட்டுமே கவனத்தில் கொண்டால், அவை பெண்களுக்கு எதிரானது போலத்தான் தோற்றமளிக்கும்.
ஆனால் இந்த நான்கு ஸ்லோகங்கள் மட்டுமே ஆண்-பெண் அறங்களை விவரிக்கும் அத்தியாயமான 9ன் உட்பிரிவாவான திருமணம் மகப்பேறு என்ற தலைப்பில் இல்லை, அவை மொத்தம் 108 ஸ்லோகங்கள்.
எனவே ஒரு ஸ்லோகத்தையோ அல்லது ஓரிரு ஸ்லோகத்தையோ எடுத்துக்கொண்டு ஒரு முழு அத்தியாயத்தை மதிப்பிட்டுவிட முடியாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி ஒரு கோட்பாட்டிற்கு பொருந்தாது. ஒரு கோட்பாட்டின் ஒவ்வொரு கூற்றும் ஒன்றை ஒன்று சார்ந்தும், நிறுவியும் நிற்கும். அதனால் அந்த முழு அத்தியாயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அத்தியாயம் 9:15, 16, 17, 18 ஸ்லோகங்கள், பின்வரும் 19, 20 ஆகிய ஸ்லோகங்களின் நீட்சியே எனக்கொள்ளலாம். 

அத்தியாயம் 9:19- பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப்படுவதையும் கேட்பீராக;

அத்தியாயம் 9:20- தன் தாய் மனத்தால் கற்பிழந்தாள் என்றறிந்த ஒருவன், அதற்கு கழுவாய் இயற்றுங்கால் "என் அன்னை நிறை இழந்து அயலான் இல்லம் சென்று, அவனை கண்டு மனத்தால் இச்சையுற்றுறிருந்தால், அவ்விச்சையால் அவளது உடலில் இளகிய பெண்மை நலத்தை என் தந்தை தனது வீரியத்தால் வென்று தூயதாக்கக் கடவன்" என்று பிரார்த்திக்கிறான். இதிலிருந்தே மாதர் மனவியல்பு விளங்குகிறது;

ஆக, அத்தியாயம் 9:19, 20 ஆகிய ஸ்லோகங்கள் மூலமாக முன்னிருந்த அற நூல்களை மேற்கோள்காட்டி, ஸ்லோகங்கள் 9:15, 16, 17, 18 ஆகியவற்றை நிறுவுகிறது.

இனி நாம் ஆய்வுக்கு செல்வோம்..
மனுதர்மம் ஆண் பெண் அறங்களை விவரிக்கும் அத்தியாயமான ஒன்பதின் உட்பிரிவான திருமணம் மகப்பேறு ஆகியவற்றிலுள்ள 108 ஸ்லோகங்களும் எதை நிறுவ முற்படுகிறது என்பதை காண்போம்.
அதற்கு முன்பாக அத்தியாயம் 9:15, 16, 17, 18, 19, 20  இவற்றிலும் வேறு எங்கேயும் பெண்களை பரத்தை என்றோ வேசி என்றோ விபச்சாரி என்றோ நேரடியாகவோ மறைமுகமாகவோ கூறப்படவில்லை என்பதை, மனு தர்மத்தின் சரியான தமிழாக்கம் தெளிவாக்குகிறது.
அவற்றில் கூறப்பட்டிருப்பது, பெண் நிறை பிறழ்தல் பற்றி தானே தவிர விபச்சாரத்தைப் பற்றி அல்ல. 
பெண் நிறை பிறழ்தலுக்கும் விபச்சாரத்திற்கும் வேறுபாடு இருக்கிறது. ஒரு பெண் கணவனை தவிர்த்து வேறு ஒரு ஆணுடன் உறவு கொள்வதை நிறை பிறழ்தல் அல்லது ஒழுக்கக் கேடு எனப் பொருள்படும், அதே ஒரு பெண் பாலியல் தொழில் செய்து, அதன் மூலமாக வாழ்வாதாரத்தை மேற்கொண்டால் அது விபச்சாரம் ஆகும்.

இனி மேல் செல்வோம்.... 
மனுதர்மம் அத்தியாயம் 9:15, 16, 17, 18 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள பெண் நிறை பிறழ்தல், அதாவது ஒழுக்கம் தவறுதல் என்பது இன்றைக்கு எப்படி சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறதோ, அதுபோலவே மனுதர்மம் எழுதப்பட்ட 3500 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் ஒழுக்கம் பேனுதல் என்பது சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது. 
முதலில் மனுதர்மம் கூறும் நிறை அல்லது ஒழுக்கம் என்பது என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். மனுதர்மம் கூறும் நிறை அல்லது ஒழுக்கம் என்பது ஒருதார மணமுறையையே. அதாவது ஒருவனுக்கு ஒருத்தி மற்றும் ஒருத்திக்கு ஒருவன். 
இந்த மணமுறை, மனிதன் தோன்றிய காலத்திலிருந்து நடைமுறையில் இருந்தது எனக் கருதினால் அது தவறு. 
இந்த ஒருதார மணமுறைக்கு முன்பாக பல மணமுறைகள் இருந்திருக்கிறது. 
குறிப்பானவைகளாக வரைமுறையற்ற உறவு, குழு மணமுறை, பலதார மணமுறை(ஆண் பெண் இருபாலரும்), ரத்த உறவு விலக்கு மணமுறை.(பூணுலுவா குடும்பம்) 
இவ்வாறாக பல படிநிலைகளை கடந்து பரிணமித்து இன்றைய ஒருதார மணமுறையை அடைந்துள்ளோம். மேற்கண்ட மணமுறைகளை பற்றி தெளிவு பெற வேண்டுமானால் அறிவு இணையரான கார்ல் மார்க்ஸ்-ஏங்கல்ஸில் ஒருவரான ஏங்கல்ஸின் 'குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்' என்ற நூலில் குடும்பம் என்ற அத்தியாத்தை படிக்கவும் .
இதற்கு நேரிடையான சாட்சி, இங்கு ஏதேனும் கிடைக்குமா என்றால் அது மனுதர்மத்திலேயே கிடைக்கிறது. அத்தியாயம் 9:32, 52, 58, 59 ஆகிய ஸ்லோகங்கள் வாயிலாக ஒருதார மணமுறைக்கு முந்தைய ரத்த வழி விலக்கு மணமுறையும், பலகணவர் மணமுறையும் இருந்ததை அறிய முடியும்.

அத்தியாயம் 9:32- கணவனே பிள்ளையாகிறான் என பெரியோர் கூறுவர். அக்கணவன் இருவகையாவான், கருத்தரிக்கச் செய்தவனே கணவன் என்றும் மணம் புரிந்தவனே கணவன் என்றும் மாறுபட்ட இரு வகை உண்டு;

அத்தியாயம் 9:52 - வித்து மட்டும் வைத்திருப்பவர், நிலம் வைத்திருப்பவரிடம் ஏற்பாடு செய்து கொண்டு அதில் விதைத்து,  விளைவை இருவருக்கும் பொதுவாக இருக்கச் செய்து கொள்வது போன்று,  மனைவி இல்லாத ஒருவன் பிறன் ஒருவனை சார்ந்து அவனுடன் ஏற்பாடு செய்து கொண்டபின், அவன் மனைவியிடம் தனக்கு ஒரு பிள்ளையை பெற்றுக்கொள்ளலாம். அவ்வித ஏற்பாடு இல்லாத வரையில் அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தைகள் அவளுடைய கணவனையே சாரும். இவ்விஷயத்தில் நிலவுடைமை முதன்மையானது;

அத்தியாயம் 9:58- அண்ணன் தம்பி இருவருக்கும் சந்ததி நசிக்கும்(இல்லாதுபோகும்) என்ற நிலை ஏற்படாத போது, ஒருவன் மற்றவன் மனைவியை பெரியோர் அனுமதியுடன் ஆயினும், கூடுதல் பாவம்;

அத்தியாயம் 9:59- சந்ததி இன்றி குலமே முடிவடையுமானால், அப்போது ஒரு பெண் தனது கணவன் மாமனார் முதலியோரின் ஒப்புதலின் பேரில் தனது மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைகளுக்கு உட்பட்ட பங்காளி இவர்களுடன் மேற்சொல்லவிருக்கும் விதிமுறைப்படி கூடியிருந்து குலத்தின் வளர்ச்சியை முன்னிட்டு தக்க பிள்ளையை பெறலாம்;

மார்க்ஸ்-ஏங்கல்ஸ் ஆகியோர் வறையறுத்து இருக்கின்ற காட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலை, நாகரிக நிலை இவற்றில் நாகரிக நிலை என்பது ஒருதார மணத்தில் இருந்தே தொடங்குகிறது. மேற்குலகம் இந்த நிலையை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தான் தொடங்கியது என்பதை கிரேக்க காவியமான ஒடிசியில் கூறப்பட்டிருக்கும் காதல் கதையிலும், ப்ளூடார்க்கின் காதல் கதையிலும் தெளிவாக காணலாம்.
ஆனால் மனுதர்மத்தை நோக்குகையில் நான்காயிரம் வருடங்களுக்கு முன்பே இந்த ஒருதார மணமுறை இந்தியத் துணைக் கண்டத்தில் நடைமுறை படுத்தப்பட்டு, முந்தைய மணமுறைகளின் எச்சங்களை துடைத்தெறியும்படி, கட்டுபாடுகளை விதித்து ஒருதார மணமுறையை அழுத்தமாக நிறுவ முற்படுகிறது என்பது தெளிவாகிறது. ஒருதார மணமுறை நடைமுறைப்படுத்தப்பட்ட நான்காயிரம் (குத்துமதிப்பாக) ஆண்டுகளுக்கு முன்பு ஒழுக்கம் என்பது  அதாவது ஒரு தாரம் மட்டுமே கொள்வதென்பது பெரும் சர்ச்சை உருவாக்கி இருக்கும் என்பதில் ஐயமில்லை. 
ஏனெனில், ஒருதார மணமுறை என்பது அன்றைக்கு புதியதான மற்றும் தேவையற்றதான விஷயமாக இருந்திருக்கும். அது அன்றைய மக்களின் பாலியல் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாக பார்க்கப்பட்டு இருக்கும். ஏனெனில் மனிதனும் ஒரு விலங்கினம்தான். மற்ற விலங்கினங்களுக்கு எப்படி பாலியல் சுதந்திரம் இயற்கையானதோ அதுபோலவே மனிதருக்கும்.
அதை பறிக்கும் விதமாக இந்த ஒருதார மணமுறை பார்க்கப்பட்டு இருக்கும்.
ஏனெனில் ஒவ்வொரு உயிரினத்துக்கும் நிரந்தர துணை என்பது அதன் பாலியல் இச்சைக்கு இயல்பாகவே எதிரானது.
இதற்கு அறிவியல் காரணம் ஏதேனும் உள்ளதா என்று நோக்கினால், இவ்வுலகில் உதிக்கும் ஒவ்வொரு உயிரினத்தின் மரபணுக்களுக்குள்ளும், ஒரே ஒரு விதி மட்டுமே எழுதப்பட்டிருக்கும், அது அந்த உயிரினம் நிலைத்திருப்பது. 
அது இருவழிகளில் நிலைத்திருக்கும், ஒன்று அந்த உயிரனம் உயிர் வாழ்வது, மற்றொன்று அந்த உயிரனம் மீண்டும் கருவாகி அடுத்த தலைமுறைக்கு கடந்து செல்வது.
(இந்தக் கூற்று மனுதர்மத்திலும் கூறப்பட்டுள்ளது.
அத்தியாயம் 9:96- மாதர் சூல் கொள்ளவும், ஆடவர் கரு உண்டாகக்கவும் பிரம்மனால் படைப்புற்றனர். ஆதலால் திருமணமான நாள் முதல் இல்லறத்தாரின் யாகாதி  நல்லற கடமைகள் இருவருக்கும் பொதுவானவை யாகுமென்றும், கணவன் செய்யும் நல்லறத்தில் மனைவிக்கும் பங்குண்டு என்றம் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது;)

இவ்வாறான உயிர்த்திருத்தலுக்கு ஒவ்வொரு உயிரினத்திற்கும் நிபந்தனையற்ற பாலியல் இச்சை என்பது முக்கியமானதாகும்.
அதேவேளை அந்த நிபந்தனையற்ற பாலியல் இச்சை, பாலியல் தேர்வுக்கு எதிரானது.
நிரந்தரமற்ற தம்பதியர் ஈன்றெடுக்கும் சந்ததியைவிட, பாலியல் தேர்வின் மூலமாக அமையப்பெற்ற நிரந்தர தம்பதியர் ஈன்றெடுத்த சந்ததி சிறந்ததாக இருந்தது என மார்கன் சான்றுப்படுத்தினார்.
அதை இன்றைய நவீன அறிவியல் மேலும் உறுதிப்படுத்துகிறது.

இந்த ஒருதார மணமுறை, ஒன்றை அறுதியிட்டு நிறுவுவதற்கு பெரும் காரணமாக இருந்தது, அது தந்தை வழிச்சமூகம்.
ஏங்கல்ஸ் எடுத்தாண்ட மார்கனின் பண்டைய சமூகம் கூற்றின்படி, தாய்வழிச் சமூகத்தை விட தந்தைவழிச் சமூகம் சரியான அதன் மரபுவழியை இனம் காணவும், அதன்வாயிலாக மனித இனத்தின் சிறந்த பரிணாம வளர்ச்சியை உருவாக்குவதற்கும் பெரும் துணை நின்றது.
இன்றைய அறிவியலின்படி ஒவ்வொரு மனிதனின் மரபணுக்குள்ளும் 23 குரோமோசோம்கள் ஜோடி உள்ளது, அதில் 23வது குரோமோசோம் ஜோடியே பாலின தேர்வை கொண்டது.
ஒவ்வொரு 23வது குரோமோசோம் ஜோடிக்குள்ளேயும் XX, XY என்ற இரு வேறு பாலினம் உண்டு.
இதில் XX பெண் பாலினத்துக்கானது, XY ஆண் பாலினத்திற்கானது.
பெண்ணின் கருமுட்டைக்குள் X மட்டுமே இருக்கும், அதே ஆணின் விந்தணுக்குள் XY என இரண்டும் இருக்கும்.
XX சேர்ந்தால், பெண் குழந்தையும், XY சேர்ந்தால் ஆண் குழந்தையும் பிறக்கும்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், Y ஆணின் மூலமாக மட்டுமே அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும்.
ஒரு ஆண், Y குரோமோசோமை தன் தந்தையிடம் இருந்துதான் பெற முடியுமே தவிர தாயிடம் இருந்து நிச்சயமாக பெற முடியாது.
இதனால் இன்றைய அறிவியல், ஒரு ஆணின் Y குரோமோசோமை வைத்துக்கொண்டு முன்னும் பின்னும் சென்று மரபுவழியை சரியாக கணித்துவிட முடியும்.
அதே X குரோமோசோமை வைத்து மரபுவழியை நிர்ணயிக்க முடியாது.
ஏனெனில் X குரோமோசோம் தாயிடமிருந்து ஆண் குழந்தைக்கும் கடத்தப்படும், பெண் குழந்தைக்கும் கடத்தப்படும்.
(இதுதான் கோத்திரம் பார்த்து திருமணம் செய்வது.)
ஏனெனில், ஒரு ஆணும் பெண்ணும் ஒரே தந்தைக்கால் மரபு வழியில் தோன்றியவர்களாயின், அவர்களின் மூலமாக  பிறக்கும் குழந்தை மரபணு கோளாறு காரணமாக சில இன்னல்களை சந்திக்கும்.
ஆனால், வெவ்வேறு மரபு வழியில் தோன்றிய ஆணும் பெண்ணும் பெற்றெடுக்கும் குழந்தை, தாய் தந்தையரை விட சிறந்த மரபணு தேர்ச்சியையோ அல்லது குறைந்தபட்சமாக தாய் தந்தையரின் மரபணு தேர்ச்சியையாவது கொண்டிருக்கும்.
இந்த அறிவியல், நான்காயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே மனிதனுக்கு எப்படி சாத்தியப்பட்டது என்பது மிகப்பெரிய அதிசயம்தான்.
ஒருவேளை, பல்லாயிரம் வருட அனுபவத்தால் தோராயமாக ஏதாவது உணர்ந்திருக்கலாம்.
இது ஏதோ இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமே சாத்தியப்பட்டது என நினைக்கவேண்டாம், உலகின் பெரும்பாண்மையான பகுதிகளிலும் சாத்தியப்பட்டது.
அவர்களுக்கு வெகு முன்பாகவே நமக்கு சாத்தியப்பட்டுவிட்டது என்பதை வேண்டுமானால் பெருமையாக எடுத்துக் கொள்ளலாம்.

மீண்டும் மனுதர்மத்துக்கு செல்வோம்..
பெண்ணின் ஒழுக்கத்தை வரையறுப்பது போலவே ஆணுக்கும் வரையறுக்கிறது.
பிறர் மணைவியை நோக்குவதையும், அவருடன் உறவு கொள்வதையும் தடுப்பதை பின்வரும் ஸ்லோகங்களில் காணலாம்.

அத்தியாயம் 8:351- பிறன்மனை விரும்புபவரை அவர்களுக்கு அச்சம் உண்டு பண்ணும் பொருட்டு, உதடு மூக்கு முதலிய உறுப்புகளை கொய்து அடையாளம் செய்து, அரசன் ஊரை விட்டு ஓட்டுக;

அத்தியாயம் 8:353- ஒரு பெண் விஷயத்தில் ஐயுறப் பெற்றவன் மேலும் அவளுடன் தனித்து காரணமின்றி பேசினால் அவனுக்கு 250 பணம் தண்டம் விதிக்க;

அத்தியாயம் 8:371- பிறன் மனைவியை கூடும் ஒருவனை தழலேற்றிப் பழுத்த இரும்பு பலகையில் படுக்கச் செய்து, உடல் வேகும் வரை கட்டைகளை மேலே போடுமாறு, மன்னன் செய்க;

அத்தியாயம் 4:134- பிறன் மனைவியை கூடுவதைப்போல, இவ்வுலகில் ஒருவனின் வாழ்நாளை குறைப்பது வேறில்லை;

அதனால், மனுதர்மம் என்பது பெண்ணினத்துக்கு எதிரானது என்பதைபோல பிம்பப்படுத்த முயன்றால் அது அறிவீனமே.
மனதர்மம் அத்தியாயம் 9 மட்டுமன்றி பிற அத்தியாயங்களிலும் மிக அழுத்தமாக நிலைநிறுத்த துணிவது, ஒருதார மணமுறையையும் அதன் மூலமாக பிறக்கும் சந்ததியின் நிச்சயிக்கப்பட்ட மரபு வழியையுமே.

இதில் இன்னொன்றும் (அத்தியாயம் 9 மட்டுமன்றி மனுதர்மம் முழுமையிலும்) காணக்கிடைக்கிறது. 
அது, ஒருதார மணமுறை வாயிலாக கிடைக்கும் நிச்சயக்கப்பட்ட மரபுவழி, மனு ஏற்படுத்தி வைத்த வர்ண அமைப்புக்கு தோதாக அமைகிறது. 
ஆனால் இதற்காகவே ஒருதார மணமுறை தோற்றிவிக்கப்பட்டது என்றால் அது தவறு. ஏனெனில் சாதி அமைப்புக்கு முன் தோன்றியது குல அமைப்பு.
இந்தக் குல அமைப்பு உலகம் முழுக்க இருந்தது, இருக்கிறது.
(ஆனால் அங்கெல்லாம் குல ஏற்றதாழ்வு பிறப்பின் வாயிலாக கற்பிக்கப்படவில்லை என்பதுதான் வேறுபாடு) 
அதனால் இந்த ஒருதார மணமுறையில் நிச்சயக்கப்படும் மரபுவழியை மனு, தனது வர்ணாசிரம தத்துவத்திற்கு வாகாக பயன்படுத்திக்கொண்டார் என்று வேண்டுமானால் சொல்லலாம். 
இதைத்தான் மாமேதை அம்பேத்கர் அவர்கள் சாதி ஒழிய வேண்டுமானால் சாதிகளுக்கிடையேயான அகமண முறையை விடுத்து புற மணமுறையை மேற்கொள்ள வேண்டும் என்றார். 
ஆனால் அவர் ஒன்றை கவனிக்க தவறிவிட்டார். அது, ஒரு சாதி மக்கள் என்பவர்கள் ஒருகால் குல மரபுவழியை கொண்டவர்கள் இல்லை. அந்த ஒரு குலத்தினரும் ஒருகால் தந்தை மரபுவழியை கொண்டவர்கள் இல்லை.
இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பலக்கால் தந்தைகளின் மரபுவழிகள் ஒன்றிணைந்தது, ஒரு குலம் ஆகும். அதுபோல பலதரப்பட்ட குலம் ஒன்றிணைந்தது தான் ஒரு சாதி.
புற மணமுறை வாயிலாக, ஒருகால் தந்தையின் மரபுவழி வந்த ஆணும் பெண்ணும் இணைய வாய்ப்பு அதிகமிருக்கிறது.

மனு அவர்கள் ஏன் இந்த சாதி அமைப்புக்கு அதாவது வர்ணாசிரம கோட்பாட்டிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பது உண்மையில் எனக்கு புரியவில்லை.
ஒருவேளை பிராமணர் உயர்சாதி என்ற அகந்தையில் வர்ணாசிரமத்தை வடிவமைத்தார் என்றால் அது தவறு. ஏனெனில் இதே மனுதர்மத்தில் பிராமணரை அரசு, வணிகம் போன்ற அதிகார, பொருளாதார மேன்மைகளில் இருந்தது விடுவித்து அவர்களுக்கு யாசித்து வாழ்வதையே வாழ்வாதாரமாக ஆக்கி இருக்க மாட்டார் என்பதே அளவையியல்.

சரி, அது செல்க..
நாம் மீண்டும் மனுதர்மத்திற்கு வருவோம்.. 9ஆம் அத்தியாயத்தின் முதல் ஸ்லோகமே ஒருதார மணமுறை கொண்டவர்களை கொண்டு தொடங்குகிறது.

அத்தியாயம் 9:1- தீயொழுக்கமின்றி முறையாக ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் ஆடவரும் மாதரும், அவ்வாறு இணைந்து வாழும் காலத்திலும், பிரிந்திருக்கும் காலத்திலும் அவரவர் நடத்தவேண்டிய தொன்மையான நல்லறங்களை இனி நயில்வேன்;

ஆகையால் மனுதர்மம், பெண்களுக்கு மட்டுமே கற்பை போதிக்கின்ற ஒரு தர்மமாக இல்லை. மாறாக பெண்களை எவ்வாறு போற்ற வேண்டும், காக்க வேண்டும் என்பதை குறித்தும் இருக்கிறது.

அத்தியாயம் 9:4- பருவம் எய்தும் முன் தன் பெண்ணை தக்க ஒருவருக்கு மணமுடித்துக் கொடுக்க தவறிய தந்தையும் பருவமடைந்த மனைவியை கூடி சுகிக்காது அவளைத் தனிமையில் விடும் கணவனும், கணவனை இழந்தவளான தனது தாயை போற்றி காக்காத பிள்ளையும் நிந்தனைக் கூறியவர்;

அத்தியாயம் 9:26- மாதரை பாதுகாத்தல் இவ்வளவு தொல்லை நிறைந்ததாயினும், மாதரே நன்மக்களை ஈன்று இன்பம் தருகிறவர். ஆதலினால் அவர்களை ஆடை அணிகளால் அழகு செய்ய வேண்டியது. இல்லத்திற்கு எழில்தரும் பெண்டீரும், லட்சுமியும் ஒருவரே. செல்வம் இல்லாத வீட்டைப் போல் மாதர் இல்லாத வீடும் விளக்கம் பெறுவதில்லை;

அத்தியாயம் 9:27- ஈன்று புரந்து விருந்தோம்பி இல்லம் புரிவதற்கு மாதரே ஏற்றவர் என்பது காணக்கிடக்கிறது;

அத்தியாயம் 9:28- நன்மக்கள், தீ வளர்த்தல் ஆகிய நற்கர்மம் செய்தல், பணிபுரிதல், கூடி சுகித்தல், தனக்கும் தென்புலத்தாருக்கும் (பித்ருக்கள்) சொர்க்க சுகம் தருதல் இவை அனைத்தும் மனைவியின் மாண்புகளே;

அத்தியாயம் 9:29- மன, மொழி, மெய்களால் கணவனின் படி கடவாத பாவை, இம்மையில் மேலோரால் கொண்டாடப் பெற்று மறுமையில் கணவனுடன் நல்லுலகம் சேர்கிறாள்;

அத்தியாயம் 9:89- பெண் பருவமடைந்து விட்டாலும், சாகும் வரை தன் வீட்டிலேயே கண்ணிகையாக இருந்து விட்டாலும் கூட குற்றமில்லை, ஆனால் குணமில்லாத ஆடவனுக்கு மாத்திரம் ஒரு பெண்ணை கொடுக்கக் கூடாது;

அத்தியாயம் 9:90-  ஒரு பெண் தான் பருவம் எய்தியது முதல் 3 ஆண்டுகள் வரை தந்தை தன்னை தக்க வரனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்திருக்க வேண்டியது, அப்படி நடைபெறாத போது தனக்கான கணவனை தானே தேடிக்கொள்ளலாம்;

அத்தியாயம் 9: 91- தானே கணவனைத் தேடிக் கொள்ளும் பெண்ணுக்கும் அவளை அடைகின்ற ஆணுக்கும் யாதொரு பாவமும் நேராது;

அத்தியாயம் 3:51- அறிவாளியான தந்தை, சிறிதெனினும் பொருள் பெற்றுக்கொண்டு தன் பெண்ணை கொடுக்கக்கூடாது, அப்படி பெற்றால் அது விற்பனை செய்ததாகும்;

அத்தியாயம் 9:99- வேதம் ஓதாதவனும் தன் பெண்ணுக்கு பரியம் (பொருள்)வாங்கக்கூடாது. வேதமோதுபவர்கள் வாங்கக் கூடாது என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை, அப்படி வாங்குவதும் மறைமுகமான ஒரு விற்பனையேயாகும்;

அத்தியாயம் 3:52-  பெண்ணின் தந்தையோ கணவனோ ஒருத்தியின் சீதன பொருளை தாங்கள் பயன்படுத்திக் கொண்டால் பெரும்பாவம்;

அத்தியாயம் 3:53- ஆருஷ விவாகத்தில் காளை பசு இவற்றை ஒன்று வீதமோ இரண்டு வீதமுமோ வாங்கலாம். அப்படி வாங்குவதும் ஒரு தர்ம காரியத்திற்கேயன்றி, தன் இச்சை நிறைவுக்காக பெறலாகாது. அப்படி வாங்குவதும் பெண்ணை விற்பதற்கு சமம்;

அத்தியாயம் 3:54- பெண்ணுக்கு ஈடாக பணம் வாங்காமல், கொடுப்பது விற்பனையாகாது. அப்படி பெண்ணை மணம் செய்து கொடுப்பதே அவளிடம் அன்பும் கருணையும் உடையோராக இருப்பர்;

அத்தியாயம் 3:55- தந்தை, கணவன், உடன் பிறந்தோர், மைத்துனர் ஆகியோர் ஒரு பெண்ணுக்கு, அவள் திருமணத்தில் அவளுக்கு தக்க பரிசுகள் கொடுத்து மகிழ்வுற செய்தல் கடமை;

அத்தியாயம் 3:56- ஆடை அணிகளால் மகிழ்வுற்று விளங்கும் பெண் உள்ள இல்லத்தில் சகல தெய்வங்களும் மகிழ்வுடன் எழுந்தருளும். எந்த வீட்டில் பெண் இப்படி போற்றப்படுவது இல்லையோ அங்கே செய்யப்படும் காரியங்கள் பயனற்றுப் போகின்றன; (இனி புடவை நகைக்காக கணவனை நச்சரிக்கும் மணைவி இந்த ஸ்லோகத்தை சுட்டிக்காட்டலாம்) 

அத்தியாயம் 3:57- உடன் பிறப்பான பெண்ணொருத்தி உடையும் அணியும் இல்லாது வருத்தம் அடையச் செய்யும் குலம் நலிவடைகிறது. எங்கே அத்தகைய வருத்தம் பெண்ணுக்கு இல்லையோ அக்குலம் பெருகி வாழ்கிறது;

அத்தியாயம் 3:58- தன்னை நன்கு காத்து ரட்சிக்காத பிறந்தகத்தை நொந்து ஒரு பெண் என்னுவளாயின் அதுவே அந்த குலத்திற்கு சாபத்திற்கு ஈடாகும்;

அத்தியாயம் 3:59- எனவே பிறந்தகத்து திருநாட்களில் குலக்கொடியான பெண்களுக்கு ஆடை, அணி, விருந்து இவற்றை வழங்கி மகிழ்ச்சியுற செய்தல் அவசியமாகும்;

இவ்வாய்வின் முடிவாக, மனுதர்மம் எவ்வாறு காணக்கிடைக்கிறது?
மனுதர்மம் முழுமையிலும் ஆங்காங்கே எவ்வாறு வர்ண பாகுபாட்டின் நெடி வீசுவது உண்மையோ அதே அளவு ஆங்காங்கே அறம், மணம் கமழ்வதும் உண்மை.
ஒருதார மணமுறையையும், நிச்சயக்கப்பட்ட மரபுவழி சந்ததியையும்  மிக அழுத்தமாக நிறுவுகிறது மனுதர்மம்.
(" இல்லையில்லை இந்த ஒருதார மணமுறையை ஏற்கமாட்டோம், இது பெண்களை சுரண்டும் வேலை, பெண்களின் சுதந்திரம் பறிபோகிறது" என கூச்சலிடம் புரட்சியாளர்களும், முற்போக்குவாதிகளும், தாங்கள் வெறுக்கும் ஒருதார மணமுறைக்கு முந்தைய மணமுறைகளுக்குத்தான் பின்னோக்கி செல்ல வேண்டும். அப்படி சென்றால், அங்கு பொது மகளிர் முறை என ஒன்று வரும்.
அந்த முறையை தங்கள் வீட்டு பெண்களை வைத்துத்தான் நடைமுறை படுத்த வேண்டுமே தவிர அடுத்தவர் வீட்டு பெண்களை வைத்து அல்ல.) 
சர்ச்சைக்குரிய ஸ்லோகங்களான 9:15, 16,17,18,19,20 ஆகியவை அன்றைக்கும் முந்தைய மணமுறைகளின் எச்சங்களை எடுத்துக்காட்டுபவையே தவிர, நிலைத்துவிட்ட இன்றைய ஒருதார மணமுறையில் ஊறிவிட்ட பெண்களின் கற்பை விமர்சிப்பன அல்ல.
மேற்குலக அறிஞர்கள் ஒருதார மணமுறைக்கு முந்ததைய மணமுறைகளை, மூவாயிரம் வருடத்திற்கு முந்தைய இதிகாசங்களான ஒடிசியிலும், இலியட்டிலும் கண்டு 150 வருடங்களுக்கு முன் பக்கம் பக்கமாக விவரித்தால் "ஆஹா, ஒஹோ, வீரயுகக்காதல்" என சிலாகிப்பதும்,
அதே மணமுறைகளின் எச்சங்கள், மிக எளிமையாக நான்காயிரம் வருடத்திற்கு முந்தைய மனுதர்மத்தின் ஒரிரு ஸ்லோகங்களிலேயே  காணக்கிடைத்தால் "ச்சீ, அய்யய்யோ, அம்மம்மா" என அலறுவதும் எவ்வகை நியாயம்?
(ஏதாவது ஒருபக்கமாக உருட்டுங்கப்பா...)
அதைவிட முக்கியமாக, மனுதர்மத்தில் எந்த ஒரு இடத்திலும் பெண்களை (பொதுவாக)பரத்தையர் என்றோ, வேசி என்றோ விபச்சாரி என்றோ குறிப்படப்படவில்லை என்பது ஆய்வின் தொடக்கத்திலேயே தெளிவானது.
அதனால் மனுதர்மத்தில் சொல்லாத ஒரு விஷயத்தை, சொன்னது என பொய் சொன்னால் அப்படி சொல்பவர்தான் அந்த பழியை சுமக்க வேண்டும்.
எனவே, திருமாவளவன் இதற்கு தண்டணையாக ஒவ்வொரு இந்து பெண்ணின் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். 
அதை, அவர் வீட்டிருக்கும் இந்து பெண்களிடம் இருந்து தொடங்குவதே, சாலச்சிறந்ததாகும்.
ஒருவேளை, கொடுக்கப்படாத விருதுக்கு சிலாகித்து புத்தகம் எழுதிய பேரறிஞரான(!) கீ.வீரமணியின் மனுதரும சாஸ்திரம் எனும் திரிபு நூலை ஓசியில் படித்துவிட்டு, திருமாவளவன் அவ்வாறு பேசியிருந்தால், அது அவர் பிரச்சனை.
180ரூபாய் காசு கொடுத்திருந்தால், சமஸ்கிருத மொழி விற்பன்னரான திருலோக சீதாராம் தமிழாக்கம் செய்த மனுதர்ம சாஸ்திரம் என்ற நூல் கிடைத்திருக்கும்.
எப்படியாயினும்திருமாவளவன், தான் செய்த குற்றத்திற்கு உடணடியாக தனது தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதுவே ஒரு ஆண்மகனுக்கு அழகு.....

(பின்குறிப்பு :- இந்த கட்டுரை மனுதர்மத்தை தூக்கி பிடிப்பதற்காக இல்லை.
வர்ண பாகுபாடு என்பது எவ்வகையிலானாலும் குற்றமே.
அதேவேளை, நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக ஒருவர் மீது வீண் பழி சுமத்துவதும் குற்றமே.) 
                                           -மதன்கார்த்திக்
                                             புதுச்சேரி.

Comments

Popular posts from this blog

#இஸ்ரேல்

கேரளாவின் சேரமான் ஜும்மா பள்ளிவாசல் கி.பி. 612ல் கட்டப்பட்டதா?!

மாமேதை அம்பேத்கரின் 'நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன்'.