திருவள்ளுவரும் காவிச்சாயமும்!

#திருவள்ளுவரும்_காவிச்சாயமும்.

( இக்கட்டுரை, 24/02/21 அன்று நான் எழுதி முகநூலில் பதிவிட்டேன். அதை மறு பதிவாக இங்கே பதிவிடுவதில் மகிழ்கிறேன்.
இவ்வாராய்ச்சிக்காக நான் எடுத்துக்கொண்ட உரைநூல் பற்றியும் ஏன் என்பது பற்றியும் பின்குறிப்பில் பதிவிட்டுள்ளேன்)


தமிழ் கூறும் நல்லுலகுக்கு வணக்கம்.

மீண்டும் பஞ்சாயத்தாகிறது 'திருவள்ளுவருக்கு காவிச்சாயம்' விவகாரம்.
ஏற்கனவே 2019ஆம் ஆண்டு தமிழக ப.ஜ.க.வின் ட்விட்டர் பக்கத்தில் குறள் : 2 ஐ பதிவிட்டு கீழே காவி உடை தரித்த திருவள்ளுவர் படத்தையும் வெளியிட்டு இருந்தனர். (பார்க்க படம் 1)
அதற்கு பெரும் எதிர்ப்பு தமிழ் ஆர்வலர்களிடமும் திராவிட, தமிழ்தேசிய இயக்கங்களிடமும் எழுந்தது.
இப்போது, மத்திய அரசின் CBSE பாடத்திட்டத்தில்  வரையப்பட்டுள்ள திருவள்ளுவர் படத்தில் திருவள்ளுவர் குடுமியும் பூநூலும் தரித்து ஒரு பிராமனராக காட்டப்பட்டுள்ளது,
(பார்க்க படம் 2) மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
உண்மையில் நடப்பது என்னதான்?
யார்தான் திருவள்ளுவர்???

திருவள்ளுவரின் சித்தார்ந்த தத்துவார்த்த அடிப்படையில் அவர் யார் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
அவரின் உருவ அடிப்படையில் அவர் யார் என்பதை முதலில் பார்த்துவிடலாம்...

இன்று நம் எல்லோருக்கும் பரிட்சயமான வெள்ளுடை புலவனாக காட்சி தரும் திருவள்ளுவரின் உருவம், திராவிட கழகங்களால் உருவகப்படுத்தப்பட்டது.
இதை, முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களே 2001 ஆம் ஆண்டு வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் கூறியது :-
"நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள் என்றார்.
வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே  வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது. வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான், அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார். சட்டசபையில் இந்த படத்தை வைக்கவேண்டுமென கேட்டபோது, தி.மு.க.,காரர்கள் இந்த படத்தை வைத்தால், நாங்கள் வைத்தது என அடிக்கடி கூறிக்கொள்வர் என நினைத்து, நாங்களே இந்த படத்தை வைக்கிறோம் என பக்தவத்சலம் கூறினார்"....

இதில் நாம் கவனிக்க வேண்டியது, இன்றைய வெள்ளுடை புலவராக திருவள்ளுவர் உருவகப்படுத்தப்பட்டது, பக்தவச்சலம் முதல்வராக இருந்த 1963-1967 காலகட்டத்தில், திமுக வினரால். (பார்க்க படம் 3)
அதாவது இன்றிலிருந்து 50 - 55 வருடங்களாகத்தான் திருவள்ளுவர் வெள்ளுடை வேந்தன்.
அதற்குமுன் அவரது உருவம் உருவகப்படுத்தப்படவில்லையா?
ஏன் இல்லை?! 
சிலையும் இருக்கிறது, அவருக்கென கோவிலும் இருக்கிறது.
மயிலாப்பூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்திற்குள், திருவள்ளுவருக்கும் - வாசுகிக்கும் தனித்தனி சந்நதி உள்ளது.
இதன் வரலாறு கி.பி.1600 என்கிறது அக்கோவிலின் தல வரலாறு.
மயிலாப்பூரில் அதே கோவிலின் அருகே திருவள்ளுவரின் சிலை ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது, அதில் திருவள்ளுவர் பூநூலுடன் காட்சியளிக்கிறார்.( பார்க்க படம் 4)
19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே பலர் திருவள்ளுவரின் உருவத்தை வெளியிட்டுள்ளனர்.

திருக்குறளை அச்சிலேற்றிய ஆங்கிலேயரான எல்லிஸ்துரை அவர்கள், அதன் நினைவாக திருவள்ளுவர் நாணயத்தை வெளியிட்டார்.
அதில் ஒரு புறம் திருவள்ளுவர் உருவமும், மறுபுறம் நட்சத்திரமும் பொறிக்கப்பட்டிருந்தது.
அந் நாணயத்தில் திருள்ளுவர் ஒரு சமண துறவி போல் காட்டப்பட்டிருந்தது. (பார்க்க படம் 5)
(இதிலும் ஒரு சர்ச்சை உள்ளது, அதாவது அயோத்திதாச பண்டிதரின் தாத்தா பட்லர் கந்தப்பா கொடுத்த ஓலைசுவடிகளை தொகுத்து முதன் முதலில் திருக்குறளை அச்சில் ஏற்றியவர் எல்லிஸ்துரை என பரவலாக கூறுகிறார்கள்.
ஆனால் உண்மையில், திருக்குறளை 'முப்பால்' என தலைப்பிட்டு முதன்முதலில் அச்சில் ஏற்றியவர் தஞ்சை ஞானபிரகாசனார், ஆண்டு 1812. இதில் திருவள்ளுவருக்கு திருவள்ளுவநாயனார் என பெயர். (பார்க்க படம் 6)
எல்லீஸ்துரையின் 'முதல் திருக்குறள் அச்சிடல்' என்பது ஆங்கில மொழிபெயர்ப்பு.
ஆண்டு 1812 முதல் 1817 வரை இருக்கலாம்.
ஆனால், திருக்குறள் உலகம் சென்றடைய வித்திட்டவர் எல்லீஸ்துரை தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை) 

இதற்குப் பிறகு, 1904ல் இந்து தியாலாஜிகல் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த கோ. வடிவேலு செட்டியார் என்பவர், 'திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்' என்ற நூலை வெளியிட்டார். இரு பாகங்களாக வெளியான இந்தப் புத்தகத்தில் திருவள்ளுவரின் படம் 'திருவள்ளுவநாயனார்' என அச்சிடப்பட்டிருந்தது. (பார்க்க படம் 7)
அதில் ஜடாமுடியுடனும் தாடி மீசையுடனும் மார்புக்குக் குறுக்காக யோகப் பட்டை எனப்படும் துண்டை அணிந்தபடியும் திருவள்ளுவர் காட்சியளித்தார். ஒரு கையில் சின் முத்திரையுடன் ஜெப மாலையும் மற்றொரு கையில் ஒரு ஓலைச் சுவடியும் இருந்தது. நெற்றியில் பட்டையும் நடுவில் குங்குமமும் இருந்தது.
ஏன் இப்படி ஜடாமுடியுடன் கூடிய உருவம் கொடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு விளக்கமும் இந்த நூலில் இருக்கிறது. 'நாயனார் சொரூபஸ்துதி' என்ற பாடலை அடிப்படையாக வைத்தே இந்த உருவம் திருவள்ளுவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்குப் பிறகு இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பு வெளியானபோது, அதிலும் ஒரு திருவள்ளுவர் படம் கோட்டுச் சித்திரமாக இடம்பெற்றிருந்தது. அதில் திருவள்ளுவர் ஒரு சைவ சமய அடியாரைப் போல காட்சியளிக்கிறார். (பார்க்க படம் 8)
இரு கரங்களிலும், நெற்றியிலும் விபூதிப் பட்டையுடன் காட்சியளிக்கும் திருவள்ளுவர், ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பதைப் போலவும் அவரை இரு அடியார்கள் தொழுவது போலவும் அந்தப் படம் இடம்பெற்றிருந்தது. இதனை சம்பந்தன் என்பவர் வரைந்திருந்தார்.

இதற்குப் பிறகு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட நூல்களில் திருவள்ளுவர் படங்கள் ஏறக்குறைய இதே தோற்றத்தில் இடம்பெற்றிருந்தன. (பார்க்க படம் 9)
இந்தப் படங்கள் தமிழ்நாட்டில் பல வீடுகளில் வைத்து வணங்கப்பட்டன. வேறு பலரும் திருவள்ளுவர் படங்களை வெளியிட்டார்கள்.
அதில் பல படங்களில் யோகப் பட்டைக்குப் பதிலாக மார்பின் குறுக்கே பூணூல் இடம்பெற்றிருந்தது.

1950களில் பாலு - சீனு என்ற சகோதரர்கள் 'கலை' என்ற இதழை நடத்தி வந்தார்கள். அந்த இதழில் ஒரு திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருந்தது. 
அந்தப் படத்தில் திருவள்ளுவர் எந்த மதச் சின்னமும் இன்றி இருந்தார்.
(இதுதான் திருவள்ளுவரின் சமய அடையாளங்கள் அற்ற முதல் உருவப்படமாக இருக்கிறது) 

ஆக, 1950க்கு முன் உருவகப்படுத்தப்பட்ட எல்லா சிலை, ஓவிய, பொறிப்புச்சிற்பம் உருவத்திலும் திருவள்ளுவர் மத அடையாளத்துடன் தான் காணப்படுகிறார்.
பொதுமறையாம் திருக்குறள் எனும் அவரது சித்தாந்தம் மதங்களுக்கு அப்பாற்பட்டதாக இருப்பினும் அவர் ஒரு மதத்தை சார்ந்தவர் தான் என்பது திண்ணம்.
அவரை யாராவது பார்த்திருக்கிறார்களா? அல்லது அவரது சமகாலத்திய உருவ ஆதாரம் (தொல்லியல் - இலக்கிய)ஏதேனும் இருக்கிறதா?
இல்லை.
( அவ்வையாரின் பாடலிலோ, கி.பி 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த 'திருவள்ளுவ மாலை'யிலோ அவரது உருவத்தோற்றத்தை கணிக்க முடியவில்லை)

ஆனால் இதற்கு, 
அவரின் திருக்குறளை விட சிறந்த ஆதாரம் தேவையற்றது.
ஒருவர் உலகிற்கு பொதுவான ஒரு விஷயத்தை அறிவுறுத்தலாம்.
ஆனால், அதற்கு ஒரு மொழியும் வழியும் அவர் சார்ந்ததாகவே இருக்க முடியும்.
எடுத்துக்காட்டாக, திருக்குறள் தமிழில் எழுதப்பட்டு இருந்தாலும் அதில் எந்த ஒரு இடத்திலும் 'தமிழ்' என்ற வார்த்தை கையாளப்படவில்லை. 
அதுபோலவே திருக்குறள் எடுத்துரைக்கும் அறத்தின் தாத்பரியங்கள், அவரின் பண்பாட்டு விழுமியங்களை எடுத்துரைக்கும்.
அதாவது, அவர் உரைத்த மொழியையே அவரின் தாய்மொழியாக கொள்வதுபோல், அவர் எடுத்தாண்ட உவமைகளிலும், பெயரிலும், பொருளிலும் உள்ள சமய கலாச்சார குறிப்புகளின் வாயிலாக அவர் சார்ந்த சமயத்தையும் அவருடையதாக கொள்ள வேண்டும்.

திருவள்ளுவர் எந்த சமயத்தையும் சாராதாவர் என உருட்டுபவர்களுக்கு, பின்வரும் குறள்கள் விடையளிக்கும்....

குறள் : 1
அகர முதல எழுத்துஎல்லாம் ஆதி
பகவன் முதற்றே, உலகு;
( ஒவ்வொரு மொழிக்கும் 'அ' முதலெழுத்தாக இருப்பதை போல உலகத்திற்கு முதன்மையாக இருப்பவன் ஆதிபகவன் ஆவான்)

ஆக, திருக்குறள் தொடங்குவதே இறை நம்பிக்கையோடுதான்.
இது மட்டுமல்ல, முதல் பத்து குறள்களும் கடவுள் வாழ்த்துதான்.
இனி அந்த இறைவன், எந்த மதத்தின் இறைவன் என்பதுதான் விஷயமே தவிர திருவள்ளுவர் இறைநம்பிக்கை அற்றவர் எனவும் மதமற்றவர் எனவும் வாதாட எந்தவொரு அடிப்படை முகாந்திரமும் இல்லை.
எனவே கடவுள் மறுப்பாளர்களும், இடதுசாரி சிந்தனையாளர்களும், இதை விடுத்து வேறு வேலைவெட்டி இருந்தால் பார்க்கலாம் அல்லது தங்கள் சித்தாந்தத்தில் ஊறிய -திருவள்ளுவருக்கு நிகரான- வேறொருவரை தூக்கி வைத்து கொண்டாடலாம்.

இப்போது களத்தில் இருக்க தகுதியானவர்கள், திருவள்ளுவரை உரிமை கோர கூடிய ஏதோ ஒரு மதத்தினர்தான்.
அந்த மதம் எது?
இந்தியாவில் இருக்கும் மதங்களான இந்துமதம்(சைவ-வைணவ உட்பட முக்கிய ஆறு சமயங்கள்), சமணம், பெளத்தம், கிறுஸ்துவம், இஸ்லாம் .
இதில் இஸ்லாம் திருவள்ளுவருக்கு வெகுகாலத்திற்கு பிந்தையது என்பதால் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றிவிடலாம்.
அவர்களும் உரிமை கோரப்போவதில்லை.
ஏனெனில், திருக்குரானை விட மேலான ஒரு மறைநூலோ, அல்லது நிகரான ஒரு மறைநூலோலோ, அல்லது அதை தவிர ஒரு மறைநூலோ அவர்களுக்கு இல்லை என்பது அவர்களின் திடமான நம்பிக்கை.

இஸ்லாமை தவிர மீதமுள்ளை நான்கு மதங்களை வைத்து இப்போட்டியை தொடங்கலாம்.
இந்த நான்கில், திருவள்ளுவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை பார்த்துவிடலாம்.
அந்த கேள்விக்கு விடையளிக்கும் குறள்கள், பின்வருபவை...

குறள் : 8 
அறவழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு
அல்லால்
பிறவழி நீத்தல் அரிது ; 
(அறக்கடலாக விளங்கும் அழகிய குளிர்ந்த குணங்களை உடையவன் திருவடிகளைத் தொடர்ந்து நினைப்பவர் மட்டுமே துயரக் கடலை நீந்திக் கடக்க முடியும். அல்லாதவர்களால் கடக்க முடியாது.)

குறள் : 30 - 
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்உயிர்க்கும் 
செந்தன்மை பூண்டுஒழுக லான் ;
( அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்டு ஒழுகும் அற நெஞ்சம் படைத்தோரே அந்தணர் என்று சொல்லத் தகுந்தவர் ஆவார்) 

குறள் : 134 
மறப்பினும், ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான் 
பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும் ;
( பார்ப்பான் தான் ஓதியவற்றை மறந்துவிட்டால், அவற்றை மீண்டு ஓதிக் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் அவன் ஒழுக்கத்தில் குறைபட்டால் அவனுடைய குலமே அழியும்) 

குறள் : 62 
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் ;
( மற்றவர் குறை கூற முடியாத பண்புடைய பிள்ளைகளை பெற்று வளர்ந்தால் குடும்பத்திற்கு ஏழு தலைமுறையிலும் -பிறவியிலும்- தீவினை தொடவே தொடாது )

குறள் : 107 
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண் 
விழுமம் துடைத்தவர் நட்பு ;
( நல்ல நட்புக்கு உரியவராக இருந்து தேவைப்பட்ட சமயங்களில் துன்பம் வராமல் காத்து உதவியவரின் நட்பை, ஏழேழ் தலைமுறையிலும் -பிறவியிலும்- நன்றியுடன் போற்றுவர் நல்லோர்)

குறள் : 126 
ஒருமையுள், ஆமைபோல், ஐந்துஅடக்கல் ஆற்றின், எழுமையும் ஏமாப்பு உடைத்து; (ஒருவன் தன்னுடைய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும், ஆமை தன் நான்கு கால்களையும் தலையையும் வாலையும் உள் இழுத்து பகையிடமிருந்து காப்பாற்றிக் கொள்வது போல் காப்பாற்றிக் கொண்டால் அவனுக்கு ஏழு பிறப்பிலும் அது பெருமையைச் சேர்க்கும்) 

குறள் : 138 
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும், செய்யாது 
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் ; 
( புகழ் தரும் செயல்களை தொடர்ந்து செய்து வருதல் வேண்டும். மறந்து செயலைச் செய்யாது விட்டால் ஏழு பிறவியிலும் பெருமை பெரும் வாய்ப்பே வராது)

ஆக இந்த குறள்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்தணர், மறுபிறப்பு
போன்றவைகளை யார் உரிமை கோர்கிறார்களோ அவர்களுக்கே திருவள்ளுவரையும் உரிமை கோர உரிமை இருக்கிறது.
இந்து மதத்தை தவிர வேறெதுவும் உரிமை கோரப்போவதும் இல்லை, அதற்கான எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை.
மறுபிறவி என்பது ஜைன (சமணம்) மதத்தில் இருந்தாலும், கடவுள் நம்பிக்கை என்ற சித்தாந்தம் இல்லை.
இந்த குறள்களையும் அதற்கான விளக்கவுரைகளையும் பார்த்தபின், "திருவள்ளுவர் மதமற்றவர்" என்றும் "வேற்று மதத்தவர்" என்றும் கூறுபவர்களில், ஓரளவிற்கு புத்தி கூர்மை உள்ளவர்கள், இந்நேரம் பின்வாங்கியிருப்பர்.
"அதெல்லாம் இல்லை ... திருக்குறளில் நேரடியாக இந்து மத கடவுள் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறதா?" என இன்னமும் யாராவது பிதற்றிக்கொண்டிருந்தால், அவர்களை 'பின்னங்கால் பிடறிபட' விரட்டியடிக்க வருகிறது இந்த குறள்கள்..

குறள் : 610 
மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான் 
தாஅயது எல்லாம் ஒருங்கு ;
(சோம்பல் இல்லாத அரசன், எல்லா உலகையும் அளந்த இறைவன் -வாமனன்-  கடந்த பரப்பு முழுவதையும் அடையப் பெறுவான்.

குறள் : 25 
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் 
இந்திரனே சாலும் கரி ; 
(மெய் முதலான ஐம்புலன்கள் வழி பாயும் அவாக்களை அடக்கி வென்றவனின் பேராற்றலுக்கு, அவ்வாறு அடக்காமல் அவதூறு எய்திய தேவர்களின் தலைவன் இந்திரன் வாழ்க்கையை சான்றாகும்)

குறள் : 84 
அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல் ; 
(தன்னை நோக்கி வரும் விருந்தினரை மலர்ந்த முகத்துடன் வரவேற்று ஓம்புவோனுடைய இல்லத்தில் செல்வத்தின் தலைவி -லட்சுமி- மனம் விரும்பிக் குடி அமர்வாள்)

குறள் : 167 
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் 
தவ்வையைக் காட்டி விடும் ; 
(நெறி பிறழ்ந்து பொறாமை கொண்டு திரிபவனிடமிருந்து திருமகள் விடைபெறுவதுடன் வறுமையின் அடையாளமான மூதேவிக்கு வழிகாட்டி விட்டு விடைபெறுவாள்)

குறள் : 617 
மடிஉளாள் மாமுகடி என்ப; மடியிலான் 
தாள்உளாள் தாமரையி னாள் ; 
(பெரிய சோம்பேறியின் மடியில் குடியிருப்பவள் மூதேவி.  அயரா முயற்சி  உடையவன்  காலடியில் காத்து இருப்பவள் திருமகள்)

குறள் : 1103
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் 
தாமரைக் கண்ணான் உலகு ; 
(தலைவன் தான் மனதார விரும்பும் தலைவியின் தோளைப்பற்றி உறங்கும் உறக்கத்தைவிட, திருமாலின் வைகுண்ட இன்ப உலகம் இனியதன்று)

குரல் : 269 
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு ;
( தவம் செய்தலின் நெறி பிறழாது வெற்றி பெற்றவர்கள் எமனையும் எதிர்த்து வாழ முடியும்)

குரல் : 326 
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் 
செல்லாது, உயிர்உண்ணும் கூற்று ;
(கொல்லா நெறியை பின்பற்றி வாழ்பவன் ஆயுள் கூடும். உயிரை கொல்லும் எமன் அவர் பக்கம் செல்ல காலம் கடத்துவான்) 

ஆக இந்திரனையும், வாமனனையும், கண்ணனையும், திருமாலையும், லட்சுமியையும், யமனையும் எந்த மதம் கடவுள்களாகவும் தேவர்களாகவும் பார்க்கிறது?
இந்து மதத்தை தவிர வேறொன்று உண்டா?!!!
அப்படி வேறொரு மதம் இவர்களை கடவுள்களாக எடுத்துக்கொண்டு வழிபட தயாரானால், மிக்க மகிழ்ச்சி.
இந்து மதம், அதன் வேர்களை பிற மதங்களில் பரப்ப ஆரம்பித்ததாக ஆகிவிடும்.

எனவே, திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசிவிட்டார்கள் என பிதற்றுவதே அபத்தம்.
அவர் பிறப்பால், வளர்ப்பால், சிந்தையால் இந்துதான், காவிதான் என்பதைத்தான் இந்த குறள்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
திராவிட கூட்டம் பூசிய வெள்ளை சாயம் காலப்போக்கில் வெளுக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

சரித்திர அறிவியல், ஒரு மதத்தின் வரலாற்றை தொல்லியல் சான்றுகள், இலக்கியச்சான்றுகள், கலாச்சார குறியீடுகள் வாயிலாகவே முடிவு செய்கிறது.
ஒரு இலக்கியம் எந்த மதத்தை சார்ந்தது என்பதை அறிய, அந்த இலக்கியத்தில் தென்படும் சமய குறிப்புகள் தான் துணை நிற்கும் ...

எனவே 'திருவள்ளுவருக்கு காவிச்சாயம்' என்ற அடிப்படை முகாந்திரமற்ற வாதத்தை தூக்கி மூலையில் எறிவதுதான் மூளை உள்ளோர் செய்ய தகுந்தது ஆகும்.

"திருவள்ளுவருக்கு சாதிச்சாயம் பூசிவிட்டார்கள்" என வேண்டுமானால் கூறலாம், அதற்கான முகாந்திரம் உள்ளது.
ஆனால் அதை பற்றி குறைகூறவோ விவாதிக்கவோ, சாதி மறுப்பாளர்களுக்கோ கடவுள் மறுப்பாளர்களுக்கோ, பிறமதத்தினருக்கோ எவ்வித அடிப்படை உரிமையும் இல்லை.
அது இந்து மதத்தையும் சாதிகளையும் ஏற்போரின் உள்விவகாரம். 
எனவே பிறர் விலகிச்செல்க....

மத்திய அரசு புதிதாக வெளியிட்டுள்ள படத்தில், திருவள்ளுவர் குடுமி தலையுடன், மார்பில் பூநூலுடன் இருப்பது அவர் பிராமனர்தான் என அறுதியிட்டு கூறுவதாக உள்ளது.
இது வர்ணத்தின் அடிப்படையில் - ஆதாவது பிறப்பின்வழி வகுக்கும் மநுதர்ம கோகுட்பாட்டின்படி அல்லாமல் குணத்தின்வழி வகுக்கும் வேத கோட்பாட்டின்படி - என்றால் அது தவறே இல்லை.
வேதத்தில் (ரிக் வேதம் 10:90) பிராமணர் என வகுக்கப்படுவது ஓதுதல் - ஓதுவித்தல்.
அதாவது கற்றல் - கற்றுக்கொடுத்தல்.
அந்த கோட்பாட்டின்படி பார்த்தால், திருவள்ளுவர் பிராமனர்க்கெல்லாம் பிராமனர்.
அவரின் குறள்கள் நமக்கு மட்டுமா போதிக்கிறது, உலகின் அனைவருக்கும் போதிக்கும் பொதுமறை என கொண்டாடப்படுவது ஆயிற்றே திருக்குறள்.
அதேவேளை, திருவள்ளுவரை மநுதர்ம கோட்பாட்டின் படி பிராமனராக சித்தரித்தால் - அதாவது பிறப்பின் அடிப்படையில் - சில கவனிக்க வேண்டிய விஷயம் இருக்கிறது.
கிடைக்கப்பட்டிருக்கும் -காலத்தால் முந்தைய உருவ ஆதாரமான- திருவள்ளுவர் சிலையில் பூநூல் இருந்தாலும், பூநூல் ஒரு வர்ணத்தார் மட்டுமே அணிய தகுதி படைத்தவர் அன்று.
இதே மநுதர்மத்தில், துவிஜர் எனப்படும் இருபிறப்பாளர்களான பிராமனர், சத்திரியர், வைசியர் ஆகியோர் பூநூல் அணியும் உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது.
அதனால் திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட வர்ணத்தாராக அடையாளப்படுத்தப்படுவது ஆதாரமற்ற செயலாகிவிடும்.
அதுபோல "திருவள்ளுவர் பிராமனர்" எனக்கூறவதற்கு எப்படி ஆதாரம் இல்லையோ அதுபோல, "திருவள்ளுவர் பிராமனர் இல்லை" எனக்கூறுவதற்கும் ஆதாரம் இல்லை.
அவர் எந்த வர்ணத்தார் என்பதற்கும் ஆதாரம் (சங்ககாலத்திய இலக்கிய - தொல்லியல் ஆதாரம்) இல்லை.
அகழ்ந்தெடுக்கப்பட்ட சிலையில் இருக்கும் பூநூல், மூவர்ணத்தாருக்கான அடையாளமாக இல்லாமல், பிராமனருக்கான அடையாளமாக மட்டுமே பார்க்கப்படுமேயானால், அது பிறப்பின்வழியை அறிவுறுத்தும் மநுதர்மத்தை மறுதலித்து அதற்கு முந்தைய குணத்தின்வழியை அறிவுறுத்தும் (ரிக்வேதம் 10:90) வேதத்தை மீட்டெக்க வழிவகுக்கும்.
அப்படி அமைந்தால் அதை விட சிறப்பானதொரு தர்மம் இருந்துவிட முடியுமா?என்ன?!!!
எந்த சாதியில் பிறந்தாலும் அறிவார்ந்தோர் அனைவருமே (ரிக்வேதம் மண்டலம் 10:90ன்படி) பிராமனர் எனும் வர்ணம்தான்.

இக்கட்டுரையின் இறுதியாக இரு விஷயங்கள்...
குறள் : 972
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் ;
(அனைத்து உயிர்களும் பிறப்பால் சமமே. அவரவர் செய்யும் தொழிலாலும், காட்டும் திறமையாலுமே வேறுபாடு காண முடியும்)

என உலகம் முழுமைக்கும் குறள் தந்தாலும் அந்த குறிப்பிட்ட குறளிலேயே வர்ணாசிரமத்தை தலையில் குட்டி, வேதத்தை மீட்டெடுத்தவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

ஆக, இந்துமதத்திலிருந்து பிற இடங்களுக்கு போகும்போதுதான், அவர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்.
அந்த கூற்று இந்து மதத்திற்குள் எடுபடாது.
அந்த உருட்டை இங்கே உருட்டிக்காட்ட முடியாது.
உதாரணமாக, 
இந்தியாவின் மாருதி கார் நிறுவனம் தயாரித்த ஒரு கார், இந்தியாவில்  மட்டுமன்றி உலகின் அனைத்து சாலைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் சிறப்பான செயல்பாடு கொண்டிருந்தாலும், அது மாருதி நிறுவனத்தின் தயாரிப்பு என்பதோ, அந்நிறுவனம் இந்நியாவை உடையது என்பதோ மாறிவிடாது.
அது போலத்தான் திருவள்ளுவரும் அவர் குறளும் ....

இவற்றையெல்லாம் விளக்கிக்கூறி உண்மையை உரக்கச் சொல்ல வேண்டியவர்கள், தமிழறிஞர்கள்தான்.
ஆனால் பாவம் அவர்கள், வாய்மூடி மெளனியாகிவிட்டார்கள்.
பேரறிஞர், முத்தமிழ் அறிஞர், நாவலர், ஆசிரியர் என -அவர்களுக்குள்ளாகவே- பட்டம் தரித்து, வலம் வரும் கடவுள் மறுப்பாளர்கள் சபையில், அவர்களது பித்தலாட்டங்களை தட்டிக்கேட்டால் எங்கே நாம் தமிழறிஞர் இல்லை என்ற நிலை வந்துவிடுமோ என அஞ்சுகிறார்களோ?என்னவோ?!!!
இவர்களை இடித்துரைக்குமாறு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே தெய்வப்புலவராம் திருவள்ளுவர் ஒரு குறள் தந்திருக்கிறார்...

குறள் : 730
உளர்எனினும், இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்,
கற்ற செலச்சொல்லார் தார் ;
(அவை களத்திற்கு அஞ்சி தான் கற்றவற்றை, மற்றவர் மனம் கொள்ளுமாறு சொல்லும் திறன் இல்லாதார் உயிரோடு இருப்பினும் இல்லாதாராக கருதப்படுவார்)

                                        -மதன்கார்த்திக்
                                          புதுச்சேரி.

(பின்குறிப்பு :- இந்து மத குறியீடுகளான கடவுள்களை பற்றி பல குறள்கள் இருக்கிறது, எனினும் சிலவற்றை மட்டுமே இங்கு எடுத்தாண்டேன்.
திருமாலை பற்றி வரும் குறள்கள் : 610,1103, 
லட்சுமி பற்றி வரும் குறள்கள் : 84, 167, 617, இந்திரன் பற்றி வரும் குறள் : 25
எமனை பற்றி வரும் குறள்கள் : 269, 326, 765,  1083, 1085.
இந்து மதக்குறியீடுகளான மறுபிறப்பு, துறவறம், அமிர்தம், சொர்க்கம், நரகம், அந்தணர் ஆகியவை பற்றி குறிப்பிடும் பல  குறள்கள் உள்ளன...

இந்த கட்டுரைக்காக நான் எடுத்துக்கொண்ட நூல், தமிழறிஞரும், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான தமிழ் பேராசிரியர் க.ப. அறவாணன் ஐயா அவர்களின் திருக்குறள் விளக்கவுரை நூல்.
இதற்கு காரணமும் இருக்கிறது.
இவர் தமிழறிஞர் மட்டுமல்ல, கடவுள் மறுப்பாளரும், திராவிட சித்தாந்தத்தில் ஊறியவரும் ஆவார்.
வேறு யாராவது ஒருவருடைய விளக்கவுரையை எடுத்திருந்தால், அதற்கு 'சங்கி சாயம்' பூசியிருப்பார்கள், திராவிட கூட்டத்தினர்.
இவரின் விளக்கவுரை நூலுக்கு பொத்திக்கொண்டுதான் நிற்க வேண்டும்.
ஆனால் அவர் சில இந்து மத கடவுள் பெயர்களை மறைமுகமாக தவிர்த்திருக்கிறார்.
அதனால்தான் விளக்கவுரையின் சில இடங்களில் விளக்கக்குறி இட்டு எடுத்து காட்டியுள்ளேன்.
ஆனால் அவரால்கூட சில குறள்களுக்கு இந்து மத கடவுள்களை பொருள்கூறாமல் விளக்கவுரை எழுத முடியவில்லை.
அதற்கு காரணம், அவர் கடவுள் மறுப்பாளர் எனினும் பிறர்போல் 'கையேந்தும்' கைகளை கொண்டவரில்லை.
ஏனெனில் அவரை தனிப்பட்ட முறையில் நானறிவேன்.
அதனினும் சிறப்பு, இவர் மட்டுமல்லாமல் எவர் நினைத்தாலும் சில குறள்களுக்கு இந்து மத கடவுள்களை தவிர வேறு எந்த மத கடவுளையும் பொருள்கூறி விளக்கவுரை எழுதமுடியாத அளவிற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே தன் மொழி வல்லமையை காட்டிச்சென்றிருக்கிறார் தெய்வப்புலவராம் திருவள்ளுவர்)

Comments

Popular posts from this blog

#இஸ்ரேல்

கேரளாவின் சேரமான் ஜும்மா பள்ளிவாசல் கி.பி. 612ல் கட்டப்பட்டதா?!

மாமேதை அம்பேத்கரின் 'நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன்'.